2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விவேகராசாவின் இழப்புக்கு அனுதாபம் தெரிவிப்பு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

30 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறை வரலாற்றை கொண்ட தம்பு விவேகராசாவின் இழப்பு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும் என வன்னிப்பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடமை, கட்டுப்பாடு, ஆரவாரமற்ற தன்மை என்பவற்றை தன்னகத்தே கொண்டு நிதர்சனமான செய்திகளை வெளிக்கொண்டு வரும் ஓர் ஊடகவியலாளராக தன்னை ஊடகத்துறையில் நிலைநிறுத்தியவர் விவேகராசா.

யுத்த காலத்தில் எவ்வித அச்சமும் இன்றி துணிவுடன் செய்திகளை வெளியிட்டதுடன,; சம்பவ இடங்களுக்கு நேரடியாக சென்று களத்திலிருந்தே செய்திகளின் உண்மைத்தன்மைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வந்த ஒருவராவார். இவ்வாறான தன்னிகரற்ற சேவையின் ஊடாக சமூக மாற்றத்திற்கு முன்னின்று உழைத்த ஊடகவியலாளராக மிளிர்ந்து பல இளம் ஊடகவியலாளர்களை வன்னிப்பிரதேசத்தில் உருவாக்கியதுடன் வன்னிப்பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் என்ற ஸ்தானத்தில் இருந்து சங்கத்தினை செவ்வனே வழிநடத்தியவர்.

அவ்வாறான ஊடகவியலாளரின் இழப்பு ஊடகத்துறைக்கு பெரும் இழப்பாகும் என்பதுடன் அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கும் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் தடம்பதித்து அனைவராலும் 'விவே' என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எம்முடன் உரிமையோடு பழகியவரும் நெருக்கடியான காலகட்டங்களில் ஊடகத்தின் வாயிலாக வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளையும் அவர்கள் படும் இன்னல்களையும் துணிச்சலுடன் எடுத்துரைத்து வந்தவருமான எமது நண்பரும் ஊடகவியலாளருமான விவேகராசாவின் மரணம் எம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விவேகராசாவின் அர்ப்பணிப்புடனான பணிகளை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். இக்கட்டான காலகட்டத்தில் மற்றொரு சிரேஷ்ட ஊடகவியலாளருடன் துவிச்சக்கரவண்டியிலே பயணம் செய்து வன்னி முதல் யாழ்ப்பாணம் வரையிலான செய்திகளைச் சேகரித்து வெளிக்கொணர்ந்ததில் அவரது பங்களிப்பு அளப்பரியது.
ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து அமைப்புக்களுடனும் அரசியல் கட்சிகளுடனும் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைத்துத் தரப்பினருடனும் பக்கசார்பின்றி,  பகைமைகொள்ளாமல் அவர் பழகிய காலம் பசுமரத்தாணிபோல் எம் மனதில் பதிந்துள்ளது. சிரித்த முகத்துடன் அவர் செய்தி சேகரிக்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்த விடயம். புதிதாகக் கேள்விப்பட்ட செய்தியை எம்முடன் பகிர்ந்துகொள்ள அவர் ஒருபோதும் தவறியதில்லை. ஒருமுறை பழகிவிட்டாலே உரிமையோடு நட்புப்பாராட்டும் அவரைப் போன்ற சிறந்த மனிதர்களைக் காண்பது அரிது. தமிழ் மக்களின் மீது அவர் வைத்திருந்த ஈடுபாடு அளவிட முடியாதது.

இயற்கை முந்திக்கொண்டு எம்மிடமிருந்து அவரைப் பிரித்துவிட்டது. வாழும்போதே வரலாறு படைத்த நண்பர் விவேகராசா மரணத்தின் பின்பும் இப்புவியில் நிலைத்திருப்பார், எமக்குள் வாழ்ந்திருப்பார். இயற்கையால் அவரது உடலை மட்டும்தான் எம்மிடமிருந்து பிரிக்கமுடியுமேயன்றி எம்நினைவுகளிலிருந்து அவரைப் பிரிக்க முடியாது.

அன்னாரை இழந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது துணைவியார்க்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஊடக அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .