2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி கௌரவிப்பு தெரிவில் முறைக்கேடு; இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதியினால் கௌரவிக்கப்படவிருக்கும் ஆசிரிய மற்றும் அதிபர்கள் தெரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளையினர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளதாவது,

ஆசிரியர் தினத்தில் சிறந்த சேவையாற்றிய ஆசிரிய மற்றும் அதிபர்களை ஜனாதிபதி கௌரவிப்பதற்காக பெயர்கள் அனைத்து வலயங்களில் இருந்தும் அனுப்பப்பட்டிருந்தது. எனினும் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனையில் இருந்து அனுப்பப்பட்ட பெயர் விபரங்கள் தெரிவில் முறைக்கேடு இடம்பெற்றுள்ளமை இவ்வலய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை விசனமடையச் செய்துள்ளது. இதன் காரணமாக வலயக்கல்விப் பணிமனையின் மீது நம்பிக்கை தன்மையினை இழக்கச்செய்துள்ளது.

இவ்வாறான தெரிவுமுறை சரியாக நடைபெற்று சிறந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அதனையே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை விரும்புகின்றது எனவும் தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை கண்டிப்பதுடன் பிழையான தெரிவில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா தெற்கு கல்வி வலய ஆசிரியர் இடமாற்ற சபையின் அங்கத்தவர் தெரிவிலும் இலங்கை தேசிய இடமாற்ற கொள்கை சுற்றுநிருபம் 2007/20 இனை பின்பற்றாது இடமாற்ற சபை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியா சங்க வவுனியா கிளை, இடமாற்ற சபையானது பதிவு செய்யப்பட்ட ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மட்டுமே அங்கம் வகிக்க முடியும் எனவும் கூட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இவ்வாறான நிலைக்கு மாறாக அதிபர் சங்க அங்கத்தவர்களை இணைத்துள்ளமையானது சுற்று நிருபத்தை மீறும் செயலாகும் எனவும் வட மாகாணத்தில் எந்த வலயத்திலும் இல்லாத நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் இம்முறை முதல் முதலாக இவ்வாறான இடமாற்ற சபை உருவாக்கப்பட்டமை முறையற்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .