2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'இனங்களுக்கு மத்தியில் வளங்களைப் பங்கிடுவதையும் நோக்கமாகக் கொண்டு எல்லைகள் மீள்வரையறை செய்யப்படவுள்ள

Super User   / 2011 ஒக்டோபர் 11 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

'1989ஆம் ஆண்டிற்குப் பின்னர் கிராம அலுவலர்களின் எல்லைகள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லை என்பவை நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றின் அடிப்படையில் மீள்வரையறை செய்யப்படவில்லை. ஆகவே அவைகளை மீள்எல்லை வரையறை செய்வதனை நோக்கமாகக் கொண்டு இந்தக்கூட்டம் நடைபெறுகிறது. அத்துடன் இன மோதல்கள் நிலவிய பிரதேசங்களில் பல்லின பல்கலாசாரத்தை நிலைநாட்டும் பொருட்டு, இனவிகிதாசார அடிப்படையில் இனங்களுக்கு மத்தியில் வளங்களைப் பங்கிடுவதையும் நோக்கமாகக் கொண்டும் முதலில் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைகள் மீள்வரையறை செய்யப்படவுள்ளன' என்று மீள் எல்லைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்எல்லை வரையறை செய்யும் நடவடிக்கையைக் கைவிடுமாறு ஊடகங்களின் வாயிலாகவும் கூட்டத்தை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் மூலமாகவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் கடந்த திங்கட்கிழமை திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரி தலைமை தாங்கினார். மீள்எல்லைக்குழுவின் உறுப்பினர்களான யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் கணேஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அவரது உரையைத் தொடர்ந்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மக்கள் இன்னமும் முழுமையாக மீள்குடியேற்றப்படாத நிலையில் இத்தகைய முன்னெடுப்புகள் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இத்தகைய நடவடிக்கைகள் அதனைப் பாதிக்கும் என்றும் கூறி இந்நடவடிக்கையை இத்துடன் நிறுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.


அவரைத் தொடர்ந்து சிவசக்தி ஆனந்தன் பேசுகையில், அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமான அதிகாரப்பரவலாக்கலில் காணி தொடர்பான அதிகாரங்கள் மாகாணங்களிடம் இருக்க வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கையாக இருப்பதால் இப்பொழுது இவ்விடயம் குறித்துப் பேசுவது பொருத்தமாக இருக்காது. ஆகவே மகாவலி எல் வலயம், வெலிஓயாவை மையமாகக் கொண்டு புதிய பிரதேச செயலாளர் பிரிவை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட மீள்எல்லை வரையறையை உடன் கைவிடுமாறும் அதனைப் பற்றி பிறகு கலந்துரையாடி முடிவெடுக்கலாம் என்றார்.

"எமது மக்கள் தற்சமயம் உள்நாட்டில் இடைத்தங்கல் முகாம்களிலும், இந்தியாவிலும், மேற்குலக நாடுகளிலும் தங்கி வாழ்கின்றனர். அவர்கள் முழுமையாக நாட்டிற்குத் திரும்பியதும் ஆராயப்படவேண்டிய விடயம் இது. இப்பொழுது எமது மக்களை முழுமையாக மீள்குடியேற்றும் நடவடிக்கையிலும் மீள்குடியேறிய மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையும்தான் மிகவும் முக்கியமானதாகும்" என்றும் அவர்  குறிப்பிட்டார்.

அரசாங்க தரப்பில் ஜனாதிபதியின் இணைப்பாளராகக் கலந்துகொண்ட முன்னாள் கூட்டமைப்பின் எம்.பி கனகரட்ணமும் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை வரவேற்பதாகக் கூறியதுடன் அவர்களுக்குத் தமது ஆதரவினையும் தெரிவித்துக்கொண்டார். கூட்டத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாமலேயே கூட்டம் நிறைவுபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .