2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'இடம்பெயர் மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் ஜேர்மனி அதிக கரிசனை கொண்டுள்ளது'

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்,கவிசுகி)

இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை ஜேர்மனி தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. வடக்கிலும் கிழக்கிலும் இந்த உதவிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரிய திட்டமொன்றின் சிறுபகுதியாகவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம் என இலங்கைக்கான ஜேர்மனியத் துணைத் தூதர் இன்னிக் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிலுள்ள கரந்தாயில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆரம்ப சுகாதார நிலையத் திறப்பு விழா வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

 இடம்பெயர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதற்கான உதவிகளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களில் மேற்கொண்டு வருகிறோம். பல உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் நாம் இந்த மருத்துவ நிலையத்தின் உருவாகக்கத்திற்கும் உதவியிருக்கிறோம் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, நீண்டகால யுத்தப் பாதிப்புக்களை எதிர்கொண்ட எமது மக்களின் தேவைகளை உணர்ந்து பணியாற்றி வரும் அரசசார்பற்ற நிறுவனங்களின் சேவை பாராட்டுக்குரியதென நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளளார்.

இந்த வைபவத்தில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர்  முருகேசு சந்திரகுமார்,  பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர்  த.முகுந்தன், பளைப் பிரதேச மருத்துவ அதிகாரி மைதிலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையம் ஜேர்மனியின் நிதிப்பங்களிப்பில் சர்வோதயம் நிறுவனத்தினால் 72 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யுத்தத்தினால்  முற்றாகவே சேதமடைந்திருந்த மருத்துவமனையையும் மருத்துவ நிலையங்களையும் இழந்திருந்த பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவ நிலையம் இதுவாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .