2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உழவு இயந்திரங்களை வெலிஓயாவுக்கு வழங்க உத்தரவிட்டதாக விவசாயிகள் முறையீடு: சிவசக்தி ஆனந்தன் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

முல்லைத்தீவுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வெலிஓயா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முல்லைத்தீவின் ஏனைய கமநல திணைக்களங்களிலிருந்து தலா ஒவ்வொரு உழவு இயந்திரங்களை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மக்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவர்கள் என்ற வகையில்; யுத்தத்தின் முன்னர் வீட்டிற்கு ஒரு உழவு இயந்திரத்தை வைத்திருந்தனர். எனினும் இறுதி யுத்தத்தில் அனைத்தையும் முள்ளிவாய்க்காலில் விட்டு விட்டு உயிரை மட்டும் கொண்டு வந்து சேர்த்தனர். தற்போது அவர்கள் மீள்குடியேறிய நிலையில் அவர்களது விவசாய நடவடிக்கைகளுக்கு போதுமான உழவு இயந்திரங்கள் இல்லாதுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களும் சீரான முறையில் வழங்கப்படாத நிலையில் முல்லைத்தீவு கமநல சேவைகள் திணைக்களத்திலுள்ள உழவு இயந்திரங்களையும் வெலிஓயாவுக்கு வழங்குமாறு ஆளுநரால் உத்தரவிடப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மக்களின்  விவசாயத் தேவைகளுக்கு போதுமான உழவு இயந்திரங்கள் இல்லாத நிலையில் இவ்வாறான உத்தரவுகள் மீள்குடியேறிய விவசாயிகளை பெரிதும் பாதிப்படையச் செய்யும் என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும்.

வெலிஓயா பகுதி விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு நாம் தடையில்லை. ஆனால் அவர்களுக்கு தேவையான உழவு இயந்திரங்களை அரசாங்கம் புதிதாக கொள்வனவு செய்து வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து பெறமுனைவது ஏற்றுக்கொள்ள முடியாததாகுமெனவும் சிவசக்தி ஆனந்தன்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .