2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நகரசபைக்கு வாகனம் கொள்வனவு செய்வது மக்களின் பணத்தை விரயமாக்கும் செயல்: வரியிறுப்பாளர்கள்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 28 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

வவுனியா நகரசபையின் அபிவிருத்திப் பணிகளை உறுப்பினர்கள் சென்று பார்வையிடுவதற்கு, பலர் பயணம் செய்யக்கூடிய வாகனம் கொள்வனவு செய்வதற்காக நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென நகரசபையின் உறுப்பினர் சு.குமாரசாமி கொண்டுவந்த தீர்மானம் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் செயலென வவுனியா நகர வரியிறுப்பாளர்கள் நகரசபையின் தலைவருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

வவுனியா நகரசபைத் தலைவர் ஐ.கனகையாவுக்கு  இது தொடர்பில் கடந்த வாரம் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே  நகரசபை வரியிறுப்பாளர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர். நகர வரியிறுப்பாளர்கள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நகரசபையினால் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதனைப் பார்வையிடுவதற்கு புதிய வாகனம் கொள்வனவு செய்யப்பட  வேண்டுமென நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியமையானது, மக்களின் பணத்தை நகரசபை வீணடிக்கும் செயலாகுமென தோன்றுகின்றது.

நகரசபைக்குச் சொந்தமாக இரண்டு கப்ரக வாகனங்கள் உள்ளன. அத்துடன், இந்திய அரசாங்கத்தினால் வவுனியா நகரசபைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பலர் பயணம் செய்யக்கூடிய 5 பஸ்கள் பயன்படுத்தப்படாமலுள்ளது.  இவ்வாறான நிலையில் புதிதாக வாகனத்தை கொள்வனவு செய்வதானது எதற்காகவெனப் புரியவில்லை. எந்தவித அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்டாத நிலையில் புதிய வாகனத்தை கொள்வனவு செய்யத் தீர்மானிப்பதானது எந்தக் காரணத்திற்கென  தெரியப்படுத்தப்பட வேண்டும்.

நகரசபை பொறுப்பேற்று இன்றுவரை எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் செய்ததாக இல்லை. இருப்பினும் ஓரிரு அங்கத்தவர்கள் மட்டும் தாங்கள் அபிவிருத்தி செய்கின்றோமென அறிக்கை விடுகின்றனர். வீதிகளோ குன்றும்குழியுமாக நீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் முதற்கொண்டு யாரும் செல்ல முடியாதவாறு வீதிகள் உள்ளன. பொதுப்பூங்காவில் நுளம்புகள் பெருகி மாடுகள் குடிகொண்டுள்ளது. நகரசபை மைதானம் சேறும் சகதியுமாக உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் நகரசபைக்குட்பட்ட பகுதியில் மக்கள் வாழும் நிலையில் நகரசபைக்கென புதிதாக ஒரு வாகனம் கொள்வனவு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ஏற்கெனவே நகரசபைக்கு இரண்டு பிக்கப்ரக வாகனங்கள் உள்ளன. ஒரு மஸ்டா ரக வாகனம் பல இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டு திருத்துமிடத்திலேயே பூட்டப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 17 பேர் பயணம் செய்யக்கூடிய 5 புதிய பஸ்கள் பனியிலும் வெய்யிலிலும் பழுதடையும் நிலையிலுள்ளது. எனவே 8 வாகனங்கள் கைவசம் நகரசபைக்குள்ள நிலையில் எதற்காக புதிய வாகனமென்பதை தெளிவுபடுத்துமாறும்' குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .