2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீன்பிடி படகுடன் கடற்படை படகு மோதி விபத்து; மீனவர் காயம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார், தாழ்வுபாட்டு கடற்பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீன்பிடிப் படகொன்றுடன் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையின் அதிவேக கண்ணாடியிழைப் படகொன்று மோதி விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மீனவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

தாழ்வுப்பாட்டு கடற்பிரதேசத்திலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவான கடற் பிரதேசத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தாழ்வுபாட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏ.ரி.மெரின்டா (வயது 56) என்ற மீனவரே காயமடைந்தவராவார்.
 
இது தொடர்பில் காயமடைந்த மீனவர் கருத்து தெரிவிக்கையில்,

'நானும் எனது மகன் எஸ்.மெரான்டா (வயது 29) ஆகிய இருவரும் கண்ணாடிஇழைப்படகில் நேற்று வியாழக்கிழமை மாலை இரவு நேர தங்கு தொழிலுக்காக தாழ்வுபாட்டு கடற்பகுதியூடாக தொழிலுக்குச் சென்றோம்.

பின் கடலில் வலைகளை போட்டு விட்டு தாழ்வுபாட்டு கடற்கரையில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலையில் உள்ள கடற்பரப்பில் எமது படகை நங்கூறமிட்டு சமிஞ்ஞை ஒளியேற்றிய நிலையில் படகில் உறங்கிக்கொண்டிருந்தோம்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் அப்பகுதியூடாக அதிவேக கண்ணாடியிழைப்படகில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரின் அதிவேகப் படகொன்று எமது படகுடன் மோதிவிட்டுச் சென்றது. இதனால், எங்களுடைய படகு இரண்டாக உடைந்து நீரில் கவிழ்ந்து மிதந்து கொண்டிருந்தது. படகின் பெருமதிமிக்க வெளியிணைப்பு இயந்திரம் கடலில் விழுந்து விட்டது.

இதன் போது நான் காயங்களுக்கு உள்ளாகினேன். எனது மகனுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின் நாங்கள் இருவரும் உடைந்து மிதந்துகொண்டிருந்த படகின் மீது ஏறி நின்று அபாயக்குரல்  எழுப்பினோம்.

ஆனால் அவ்வழியாக எவரும் வரவில்லை. நீண்ட நேரத்திற்கு பின் காலை நேரத் தொழிலுக்கு வந்த எமது சக மீனவர்கள் எங்களை கண்டு மீட்டு கரைக்கு அழைத்து வந்து வைத்தியசாலையில் அனுமதித்தனர்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .