2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொறியிலாளராக வரவேண்டும் என்பதே எனது ஆசை: றிசாத் பதியுதீன்

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

'அன்று நானும் இந்த மண்ணிலிருந்து அகதியாகி முகாமில் வசித்துவந்தேன். அப்போது எனது இலக்கு நோக்கிய பயணத்தை அடைய முடியுமா என்று சிந்தித்துள்ளேன். ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்பது தான் எனது ஆசையாக இருந்தது. க.பொ.த.உயர் தரம் கற்க போதுமான சந்தர்ப்பத்தை எட்டுவதற்கு பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது'  என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

'வன்னி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் கல்வி ஆலோசனை சபையொன்று ஏற்படுத்தவுள்ளது. அதில் பல்துறைச் சார்ந்தவர்களும் உள்ளடங்குவார்கள். இதேவேளை, சுமார் 300 மில்லியன் ரூபாய்கள் செலவில் வன்னி மாவட்டத்தில் 8 பாடசாலைகள் நவீன மயப்படுத்தப்படவுள்ளன' என்றும் அவர் தெரிவித்தார்.

முருங்கன் ம.வி. பாடசாலையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற நானாட்டான் பிரதேச அபிவிருத்தி குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

நானாட்டான் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், வடமாகாண ஆளுநரின் மன்னார், புத்தளம் பிராந்தியங்களின் ஆணையாளர் எஸ்.எல்.டீன், மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான், அமைச்சரின் இணைப்பு செயலாளர் அலிகான் ஷரீப், முசலி பிரதேச சபை உப-தலைவர் பைரூஸ் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

"வெறுமனே பிரதேசத்தின் அபிவிருத்திகளை மற்றும் கருத்தில் கொள்ளாது சமூகத்தில் மறைந்து போயுள்ள சாதனையாளர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்து எமது மாவட்டத்தின் பெருமையினை ஒலிக்கச் செய்யும் ணியினை இந்த அமைப்பு செய்துள்ளது.
இது நல்லதொரு முன்மாதிரியான செயலாகும். இன்று எமது வன்னி மாவட்டம் பல தேவைகளை அடையாளப்படுத்தி நிற்கின்றது.
அவற்றை பெற்றுக்கொள்ள எம்மால் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இன்று நான் உங்கள் முன் ஒரு அரசியல்வாதியாக நிற்கின்றேன் என்றால்  அதற்கும் கல்வி தான் வழிகாட்டியாக இருந்தது.

அன்று நானும் இந்த மண்ணிலிருந்து அகதியாகி முகாமில் வசித்துவந்தேன். அப்போது எனது இலக்கு நோக்கிய பயணத்தை அடைய முடியுமா என்று சிந்தித்துள்ளேன். ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்பது தான் எனது ஆசையாக இருந்தது. க.பொ.த.உயர் தரம் கற்க போதுமான சந்தர்ப்பத்தை எட்டுவதற்கு பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது.

அப்போதுதான் கொழும்பின் பிரபல பாடசலையொன்றில் கணிதப் பாடம் கற்றுக் கொள்ள இருவருக்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக ஆங்கிலப் பத்திரிகையொன்றில் கண்டேன்.

நானும் விண்ணப்பித்தேன். நூற்றுக்கும் மேற்பட்டோர் நேர்முகப் பரீட்சைக்கு வந்தார்கள். தெரிவு செய்யப்பட்ட இருவரில் நானும் ஒருவன். ஏன் இதனை சொல்கின்றேன் என்றால் மாணவர்கள் தமது இலக்கு நோக்கிய பயணத்தை அடைந்து கொள்ள குறிக்கோளுடன் செயலாற்ற வேண்டும்.
அதனால்தான் வன்னி மாவட்டத்தில் உள்ள மாணவ சமூகம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

பல்கலைக்கழகத்திலும் ஏனைய உயர் கல்வி நிலையங்களிலும் வன்னி மாவட்ட மாணவர்கள் கற்கிறார்கள். அதேபோன்று சிறந்த பெறுபேருகளை அவர்கள் பெறுகின்றார்கள் என்ற செய்தியினை கேட்கும் போது பெரும் மகிழ்ச்சியடைகின்றவர்களில் நான் முதன்மையானவராக இருப்பேன்.

மாணவ சமூகத்திற்கு தேவையானதை பெற்றுக் கொடுத்துள்ளேன். எதிர்காலத்திலும் அதனை பெற்றுக் கொடுக்க திட்டம் வகுத்துள்ளேன். சுமார் 300 மில்லியன் ரூபாய்கள் செலவில் வன்னி மாவட்டத்தில் 8 பாடசாலைகள் நவீன மயப்படுத்தப்படவுள்ளன.

அதில் முல்லைத்தீவில் -2, வவுனியாவில் -3, மன்னாரில் -3 என்ற அடிப்படையில் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
எனவே மாணவ சமூகத்தின் எதிர்காலம் சிறக்க சிறந்த துறைசார்ந்தவர்கள் எமது மாவட்டத்தில் உருவாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஏனையவர்களும் ஒன்றினைந்து செயலாற்ற முன்வருமாறு அழைப்பு விடுக்கிறேன' என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .