2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மாற்று இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுங்கள்: தம்பனைக்குளம் மக்கள்

Kogilavani   / 2013 ஜனவரி 04 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள் தம்மை மாற்று இடம் ஒன்றில் மீள்குடியமர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அமைக்கலநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து மீண்டும் மீள் குடியமர்ந்த மக்களை பார்வையிடுவதற்காக நேற்று வியாழக்கிழமை தம்பனைக்குளம் கிராமத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அமைக்கலநாதன் விஜயம் மேற்கொண்ட போதே அக்கிராம மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, மக்கள் தொடர்;ந்தும் தெரிவிக்கையில்,

'கடந்த மூன்று தடவைகள் இது போன்ற அனர்த்தம் எமது கிராமத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் பல்வேறு இடப்பெயர்வுகளை சந்தித்துள்ளோம்.

கூலி வேலை செய்து எமது வீட்டிற்கு தேவையான உடமைகளை சேகரித்தோம். ஆனால் குறித்த வெள்ளப்பெருக்கின் காரணமாக நாங்கள் சிறிது, சிறிதாக சேகரித்த உடமைகள் அனைத்தும் அழிவடைந்தன.

எமது பிள்ளைகளின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியான நிலையில் உள்ளது. எமது கிராமத்தில் 360 குடும்பங்கள் உள்ளன. சில வீடுகள் மேட்டு நிலத்தில் காணப்படுகின்றது. ஏனைய வீடுகள் தாழ்வான பகுதிகளில் உள்ளன.

இதனால் தொடர்ந்தும் பாதிக்கப்படுவோம் என்ற அச்சம் எமக்குள் உள்ளது.

கடந்த வாரம் மன்னாருக்கு வருகை தந்த அனார்த்த முகாமைத்துவ அமைச்சர் தம்பனைக்குளம் மக்களின் விருப்பத்திற்கு அமைவாக பாதுகாப்பான இடம் ஒன்றில் குடி அமர்த்துவதாகவும் ஒவ்வெரு குடும்பத்திற்கும் 1 ஏக்கர் காணியும் ஒரு இலட்சம் ரூபாய் பணமும் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

எனவே தொடர்ந்து குறித்த இடப்பெயர்வை சந்திக்கும் எமக்கு நிரந்தரமான ஒரு தீர்வு தற்போது தேவைக்கடுகின்றது.

அதிகமான குடும்பங்கள் வேறு இடத்தில் குடியமர விரும்புகின்றனர். எனவே அரச உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்து மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோறுகிறோம் என தம்பனைக்குளம் கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினருடன் டெலோ இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் பற்றிக் வினோ, நானாட்டான் பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர் ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .