2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இராணுவத்தினர் எங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்யத் தேவையில்லை: குருகுலராஜா

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 05 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
எங்கள் பிள்ளைகளினைப் பார்த்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும். இராணுவத்தினர் எங்கள் பிள்ளைகளுக்கு உதவிகள் செய்யத் தேவையில்லையென வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்துள்ளார்.
 
கிளிநொச்சி கனிஷ்ட மகாவித்தியால உயர்தர மாணவர்களின் 'உய்த்தறி' நூல் வெளியிட்டு விழா இன்று (05) பிற்பகல் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
 
வடமாகாணத்தின் பாடசாலைகளுக்கு இராணுவத்தினர் வரவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அவர்கள் உதவி செய்ய வேண்டுமாயின் வலயக்கல்வித் திணைக்களத்தினூடாக செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் பெருந்திரளான இராணுவத்தினர் நேரடியாக பாடசாலைகளுக்குச் சென்று உதவிகளை வழங்குகின்றனர். இது இயல்பு நிலையினைப் பாதிப்பதுடன், பெருந்திரளான இராணுவத்தினர் பாடசாலைக்கு வருவது மாணவர்களின் மனநிலையையும் பாதிக்கின்றது.
 
இவ்வாறான சம்பவம் ஒன்று அண்மையில் கிளிநொச்சி உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
 
மீள்குடியேற்றத்தின் போது வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்த இராணுவத்தினர், மாவீரர் தினத்தன்று வீடுவீடாகச் சென்று அச்சுறுத்தியுள்ளனர்.
 
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எங்களது உறவுகள் பல்வேறுவிதமான வேலைத்திட்டங்களை எமக்காக முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான நிதியினை பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் வகையில் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
உய்த்தெறி நூலினை கல்வி அமைச்சர் வெளியிட்டு வைக்க, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் வி.கணேசலிங்கம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலிற்கான அறிமுக உரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட முன்னாள் பீடாதிபதி கந்தையா தேவராசாவும், ஆய்வுரையினை கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசனும் வழங்கினர்.
 
அத்துடன், இந்நிகழ்வில் வைத்து, கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் நூலகத்திற்கென யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களினால் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X