2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தடுத்துநிறுத்தப்பட வேண்டும் : சிவசக்தி ஆனந்தன் எம் பி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

 ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்களின் குரல்களை நசுக்குவதற்காக அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தவறும் பட்சத்தில் இலங்கை மீதான சர்வதேச நெருக்கடி இன்னமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (16)  வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்; தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் அடையாளம் தெரியாதோரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தமை தொடர்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுக்காக பணியாற்றிவருகின்ற ஒரு ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் அடையாளம் தெரியாதோரால் தாக்குதலுக்குள்ளாகி படுகாயம் அடைந்திருக்கின்றார்.

அவர் ஒரு ஊடகவியலாளர் என்பதுடன் தனது சகோதரன் கடத்தப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பகிரங்கமாக சாட்சியமளித்தபோது, தமது குடும்பத்துக்கு நிகழ்ந்த அநீதி தொடர்பில் பகிரங்கமாக சாட்சியமளித்திருந்தார்.

காணாமல் போனோர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தே இலங்கை அரசினால் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாகவே குறித்த ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கருத முடியும். இச் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
 
இதேவேளை, மன்னாரிலிருந்து வெளிவருகின்ற 'புதியவன்' என்ற பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்த அமைச்சர் ஒருவரின் சகோதரனும் வடமாகாண சபை உறுப்பினருமான அரசியல்வாதி ஒருவர் குறித்த பத்திரிகை ஆசிரியர் வி.எஸ்.சிவகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் பத்திரிகை அலுவலகத்தையும் சேதப்படுத்தப் போவதாக மிரட்டல் விடுத்திருக்கின்றார்.

குறித்த அமைச்சர் தமிழர் தாயகத்தில் மேற்கொள்கின்ற தான்தோன்றித்தனமான அடாவடி நடவடிக்கைகள் கடந்தகாலங்களிலும் இவ்வாறான வகையில் ஜனநாயக விரோதப் போக்கு மிக்கவையாகவே அமைந்துவந்திருக்கின்றன. அதன் தொடராக அவருடைய சகோதரரும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றமை அவர்களின் சர்வாதிகார நடவடிக்கைகளை அம்பலமாக்கியிருக்கின்றன.  இந்த நடவடிக்கையும் பலத்த கண்டனத்துக்கு உரியது என்பதுடன் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கும் பொலிஸ் துறை தமது பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .