2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மறுச்சிக்கட்டி கிராம மக்களுடன் பிரஜைகள் குழு சந்திப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தின்; முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மறுச்சிக்கட்டி கிராம மக்கள் எதிர்நோக்கிவரும்; பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் முகமாக அக்கிராம மக்களையும் மதகுருமார்களையும்   மன்னார் பிரஜைகள் குழுவினர் செவ்வாய்க்கிழமை (15) சந்தித்து  கலந்துரையாடியுள்ளனர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை தலைமையில் இக்குழுவினர் மறுச்சிக்கட்டி கிராமத்திற்கு சென்றனர். இவர்களுடன் மன்னார் மூர்வீதி  ஜும்ஆ பள்ளிவாசல் மௌலவி எம்.அசிம், தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் ஏ.சோதி குரூஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மறுச்சிக்கட்டி கிராம மக்களை 'பொது பல சேனா' என்ற அமைப்பு கடந்த வாரம் அப்பகுதிக்குச் சென்று அந்த மக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, அந்த முஸ்ஸிம் மக்கள் மீள்குடியேறியுள்ள இடம் வில்பத்து வனப்பகுதிக்குச் சொந்தம் என்றும் உடனடியாக அப்பகுதியிலிருந்து அந்த மக்கள் வெளியேற வேண்டும் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி அங்கு துன்பத்துடன்; வாழ்ந்துவரும் முஸ்ஸிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் சென்று ஆராய்வதற்காக குறித்த குழுவினர் அங்கு சென்றனர்.

இதன்போது மறுச்சிக்கட்டி பகுதியில் பொதுமண்டபத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், மறுச்சுக்கட்டி கிராம மக்கள் மற்றும் அக்கிராமத்துக்கு  பொறுப்பான மௌலவிகளான எம்.தௌபிக் மௌலவி, எஸ்.எச்.முபாரக் மௌலவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை தலைமையிலான குறித்த குழுவினருக்கு தெரியப்படுத்தினர்.

இக்குழுவினரிடம் மறுச்சுக்கட்டி கிராம  மக்கள் தெரிவிக்கையில்,

'தற்போது நாங்கள் மீள்குடியேறியுள்ள காணி வில்பத்திற்குச் சொந்தமானதென பொது பல சேனா அமைப்பினர் கூறுகின்றனர்;. ஆனால், நூறு வருடங்களாக எமது சந்ததியினர் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.

குறிப்பாக கிணறுகள், வீடுகள், கட்டிடங்கள் இருந்தமைக்கான அடையாளங்களும்  இறந்தவர்களை அடக்கம் செய்த மையவாடியும் குளம் உள்ளிட்டவைகளும் இங்கு உள்ளன.

எனவே, எமது முன்னோர்கள் வாழ்ந்த காணியிலே மீண்டும் நாங்கள் இருக்கி;றோம். நாங்கள் உள்ள காணி வில்பத்திற்குச் சொந்தமானதாக இருந்தால், அதற்குரிய திணைக்களம் மட்டுமே எங்களுடன் கதைக்க வேண்டும். பொது பல சேனாவிற்கு இங்கு என்ன வேலையென அந்த மக்கள் தெரிவித்தனர்.

எனவே, முசலி பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை  கடற்படையினரும் இராணுவத்தினரும் பிடித்து வைத்துள்ளனர். அவர்கள் எங்களுக்குச் சொந்தமான காணிகளில் நெற்செய்கை செய்கின்றனர். ஆனால், எங்களுடைய காணியில் எங்களை விவசாயம் செய்ய அல்லது மீள்குடியேற அனுமதிக்கின்றார்கள் இல்லையென அந்த மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

முள்ளிக்குளத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் சகோதரர்களுடைய காணிகளை அபகரித்து வருவது போன்றே, எமது காணிகளையும் அவர்கள் அபகரித்து வருவதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.

எனவே இப்பகுதியில் சுமார் 128 குடும்பங்கள்வரை தற்போது எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு முதலில் சொந்தக்காணியை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் உள்ள காணி அவர்களுடையது என்பதற்கான சகல ஆவணங்களும் உள்ளன.

எனவே அக்காணியை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதற்காக அரசாங்கத்திற்கு எவ்வளவு அழுத்தங்களை கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தங்களை கொடுக்க தாம் தயார் என மறுச்சிக்கட்டி கிராம மக்கள் குறித்த குழுவினரிடம் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X