2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மீண்டும் ஒளிரும் கிளிநொச்சி நகர மின்விளக்குகள்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகர் பகுதியில் ஏ – 9 வீதியில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் மீண்டும் திங்கட்கிழமை (13) இரவு முதல் ஒளிர ஆரம்பித்துள்ளன.

கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து கரடிப்போக்கு சந்தி வரையிலுள்ள 2.5 கிலோமீற்றர் நீளமான வீதிக்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் கடந்த 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளிரவிடப்பட்டன.

இந்த மின்விளக்குகளுக்கான கட்டணத்தை கரைச்சி பிரதேச சபை கட்டவேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரியிருந்தது. எனினும், மின்கட்டணத்தை செலுத்துவதற்குரிய போதுமான வருமானம் பிரதேச சபையிடம் இல்லையென கூறி பிரதேச சபை மின்கட்டணத்தை செலுத்தவில்லை.

மின்விளக்குகளிற்காக, 12 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் வரையில் மின்கட்டண நிலுவை காணப்பட்டதால் இலங்கை மின்சார சபை 2013 செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் மின்விளக்குகளுக்கான மின் விநியோகத்தை நிறுத்தியது.

இதனையடுத்து, மீண்டும் மின்விளக்குகளை ஒளிர வைப்பதற்குரிய முயற்சிகள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போதும் அது கைகூடவில்லை.

இந்நிலையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கிளிநொச்சி மின்விளக்குகளை மீண்டும் ஒளிர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டார்.
 
அதாவது, சூரிய மின்கலத்திலான மின்விளக்குகளை பொருத்துமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இந்நிலையில், டிப்போ சந்தியிலிருந்து காக்கை சந்தி வரையிலுள்ள 1 கிலோமீற்றர் நீளமான வீதியில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் திங்கட்கிழமை (14) இரவு ஒளிர்ந்தன. மிகுதி 1 ½ கிலோமீற்றர் நீளமான வீதியிலுள்ள மின்விளக்குகள் ஒளிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .