2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 29 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

பிறரின் உதவியை நாடவேண்டியுள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிதி வழங்கவேண்டும் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு, நம்பிக்கை ஒளி அறக்கட்டளையின் சார்பில்    புதன்கிழமை  மாலை (28.1) தலா  2,500 ரூபாய் படி  வழங்கப்பட்டது. புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,

'பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் எதுவித வாழ்வாதார உதவிகளும் இன்றி, மருத்துவ செலவுகளுக்கும் நிதியின்றி கவனிப்பாரற்று உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இவர்களின் முழு விபரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கான நிரந்தர நிதியுதவியை வழங்குவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

யுத்தம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட தாக்குதலில் வன்னிப்பகுதியில் ஏராளமானோர் உயிரிழந்தனர். எண்ணற்றவர்கள் படுகாயமடைந்து சொல்லொணாத் துன்பங்களை அடைந்துள்ளனர். பலர் தமது குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். பலர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். பலர் குடும்பங்களைப் பிரிந்து சிறையிலும் பல்வேறு தடுப்பு முகாம்களிலும் துயரங்களைச் சுமந்து வாழ்கின்றனர். இவர்களைவிட, படுகாயமடைந்து அதுவும் முள்ளந்தண்டில் காயமடைந்து இடுப்புக்குக் கீழே எதுவித உணர்ச்சிகளும் அற்றவர்களாக நூற்றுக்கணக்கானவர்கள் இன்று எம்மிடையே இருக்கின்றார்கள். இவர்கள், வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கே பெரிதும் துன்பப்படுகின்றார்கள்.

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களாகின்றன. அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பிறரது உதவிகளில் தங்கி வாழவேண்டியிருக்கிறது. இந்த உதவிகளை அவர்களுக்கு அரசாங்கம் தாமதமின்றி வழங்க முன்வரவேண்டும் என்று பல தடவைகள்  நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் இன்றுவரை எதுவிதபலனும் கிடைக்கவில்லை. ஆகவே, அரசாங்கம் இனியும் தாமதிக்காது அவர்களைப் பற்றிய முழுவிபரங்களைத் திரட்டி அவர்களுக்கான அத்தியாவசிய உதவிகளைச் செய்வதற்கு முன்வரவேண்டும்.

யுத்தத்தில் பங்கேற்ற படைவீரர்களில் இவ்வாறு முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏனைய விசேட தேவைக்கு உட்பட்ட அனைவருக்கும் தேவையான நிவாரண உதவிகள் அனைத்தையும் வழங்குவதற்கு முன்னைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால், அதே யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இந்த நாட்டு குடிமக்களாகிய எம்மைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை வழங்க எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பாகுபாடான இந்த நடவடிக்கை யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எந்தவகையிலும் உதவியிருக்கவில்லை என்பதைப் புதிய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

யுத்தத்தில் படுகாயமைடந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களில் சில குடும்பங்களில் கணவன், மனைவி இருவருமே இவ்வாறு முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இன்னும் சில குடும்பங்களில் கணவனோ அல்லது மனைவியோ முள்ளந்தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகியுள்ள அதேவேளை மற்றொருவர் கை அல்லது கால் இழந்தவராக அல்லது கண் பார்வையற்றவர்களாக உள்ளனர்.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளவரைப் பராமரிக்க முடியாத காரணத்தினால், பாதிக்கப்பட்டுள்ள கணவனை அல்லது மனைவியை அவருடைய வாழ்க்கைத்துணைகள் விட்டு பிரிந்து சென்றிருப்பதையும், அதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உதவிகளின்றி பெரும் கஸ்டமடைந்திருக்கின்றார்கள்.

சிலர் அச்சம் அல்லது பாதுகாப்புக்காக முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள இத்தகைய மாற்றுத்திறனாளிகளை வீட்டில் தனிமையில் விட்டுவிட்டு பணிகளுக்குச் செல்கின்றனர். இதனால் அவர்கள் மோசமாக உளரீதியான தாக்கத்திற்கும் உள்ளாகியிருக்கின்றனர்.

இவ்வாறு குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அப்பால், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குச் செல்வதில்கூட பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இவர்கள் முச்சக்கரவண்டிகளிலேயே தங்கியிருப்பதனால், பொதுப் போக்குவரத்துக்களில் பேருந்துகளில் ஏறவும் முடியாமல், அவ்வாறு ஏறினாலும் கூட, தமது முச்சக்கரவண்டிகளைக் கொண்டுசெல்ல முடியாதவர்களாகக் கஸ்டப்படுகின்றார்கள். இதனால் அவர்கள் தனியான வாகனத்திலோ அல்லது ஓட்டோக்களிலேயே பெரும் பணச் செலவுசெய்து பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, மாவட்டந்தோறும் இவர்களை பராமரிக்கவென இல்லங்களை அமைப்பதோடு, மருத்துவ வசதிக்கான போக்குவரத்துக்கும் வாகன வசதிகளை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளும், ஏனைய உடல் அங்கங்களை இழந்த பலரும் பலதுறைகளில் ஆற்றல் மிக்கதிறமைசாலிகளாகத் திகழ்கின்றார்கள். பாதிப்புக்கு உள்ளாகிய நிலையிலும், இவர்கள் சமூகத்திற்கும் நாட்டுக்கும் பயனுள்ளவர்களாக, சேவையாற்றக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். எனவே, உதவிகளின்றி பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், திறமைசாலிகளை மேலும் ஊக்கப்படுத்தி, அந்தத் துறைகளில் அவர்கள் தொடர்ந்து செயற்படவும் சேவையாற்றவும் தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற புதிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும் எனகேட்டுக்கொள்கிறேன்.

எமது மக்களின் மீது அதிக அக்கறை கொண்டுள்ள புலம்பெயர் உறவுகளும் ஏனையோரும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவ்வப்போது தங்களால் இயன்ற சிறிய உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் நம்பிக்கை ஒளி அறக்கட்டளையும் இந்த நிதியுதவி வழங்கிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன், அவர்களுக்கு எமது மக்களின் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தனிப்பட்டவர்களும், பொதுஅமைப்புக்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வருவதைப் பார்த்து, அந்த உதவிகளின் அத்தியாவசிய தேவையை உணர்ந்து, அரசாங்கம் அவர்களுக்கு நிரந்தர நிதியுதவிக்கு வழிசெய்யும் என்று எதிர்பார்க்கின்றேன்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .