2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரணை இலுப்பைக்குளம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் : சிவசக்தி ஆனந்தன்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இரணை இலுப்பைக்குளம் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊரில் உள்ள பழைய விளையாட்டு மைதானத்தில் மண் அகழப்பட்டு அது குண்டும் குழியுமாக இருப்பதுடன் அங்கு தொலைத்தொடர்புக் கோபுரம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இதனால் அந்த மைதானத்தைப் பயன்படுத்த முடியாதுள்ளது.

மீள்குடியேறியுள்ள பல குடும்பங்களுக்கு வீட்டு வசதிகள் இல்லை. தற்காலிக வீடுகளில் மிகுந்த சிரமங்களுடன் வாழ வேண்டியிருக்கின்றது. எனினும், காடு அழிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கென புதிய கல் வீடுகள் கட்டப்பட்டு அங்கு ஆட்கள் குடியேறாமல் அந்தப் பகுதி காடாகக் கிடக்கின்றது.

இந்தக் குறைபாடுகளைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரணை இலுப்பைக்குளம் பிரதேச மக்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவமோகனின் ஏற்பாட்டில், யாழ் மருத்துவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட வைத்திய முகாமில் கலந்துகொள்வதற்காக இரணை இலுப்பைக்குளம் கிராமத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விஜயம் செய்திருந்தார்.

அங்கு இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போது, பிரதேச மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து தெரிவித்ததாவது,

நிரந்தர வைத்தியர் தேவை

இரணை இலுப்பைக்குளம் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் ஒருவர் இல்லாத காரணத்தால், ஊரில் வைத்தியசாலை இருந்தும், மக்கள் அதிக தொலைவிலுள்ள வவுனியா அல்லது மன்னார் வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியிருக்கின்றது. அருகில் உள்ள பூவரசங்குளம் வைத்தியசாலைக்குச் சென்றாலும், அங்கு உரிய வசதிகள் இல்லாத காரணத்தால் வவுனியா வைத்தியசாலைக்கே நோயாளிகள் அதிகமாகச் செல்ல வேண்டியிருக்கின்றது.

வைத்திய தேவைக்காக மன்னாருக்குச் செல்வதாக இருந்தாலும் வவுனியாவுக்குச் செல்வதானாலும் இரண்டு நகரங்களுக்குமே போதிய போக்குவரத்து வசதி இல்லை. தனியார் பஸ் ஒன்று சேவையில் ஈடுபட்டிருந்தாலும், அதில் உரிய நேரத்துக்கு இந்த இடங்களுக்குச் செல்லவோ அல்லது அங்கிருந்து திரும்பவோ வசதியில்லை.

இரணை இலுப்பைக்குளம் வைத்தியசாலை மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளரின் பிரிவுக்குள்ளேயே வருகின்றது. இங்கு நிரந்தர வைத்தியர் ஒருவர் இல்லாத காரணத்தினால் மன்னாரிலிருந்து ஒரு வைத்தியர் கிழமைக்கு இரண்டு தினங்கள் மாத்திரமே வந்து செல்கின்றார்.

திடீர் சுகவீனம், திடீர் குழந்தை பிறப்பு மற்றும் பாம்பு கடி போன்ற அவசரமான நேரங்களில் நிரந்தர வைத்தியர் இல்லாத காரணத்தினால், 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு அல்லது 18, 20 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள வவுனியா, மன்னார் போன்ற வசதிகள் கூடிய வைத்தியசாலைக்கே நோயாளர்களைக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

மேலும், அவ்வாறான நோயாளர்களைக் கொண்டு செல்வதற்கு இவ்வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வசதியில்லை. இதனால் அண்மையில் கூட ஒருவர் அவசர சிகிச்சை கிடைக்காத காரணத்தினால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கையில் உயிரிழக்க நேரிட்டிருந்தது.

புதிதாக அமைக்கப்பட்டு காடு மண்டிக் கிடக்கும் வீடுகள்

யுத்தம் காரணமாக இந்தப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த நாங்கள் திரும்பி வந்து மீள்குடியேறியுள்ள போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்துக்கும் நிரந்த வீடு வசதிகள் கிடைக்கவில்லை. இதனால் பல குடும்பங்கள் இன்னும் தற்காலிக வீடுகளில் ஓட்டைக் கூரைகளின் கீழே இடிந்த சுவர்கள் உள்ள வீடுகளில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ வேண்டியுள்ளது.

இதேவேளை, இங்கிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறுவதற்காக ஊரின் பின்பக்கத்தில் காடாகக் கிடந்த பெரிய பிரதேசத்தில் காடுகள் அழிக்கப்பட்டு, அங்கு புதிதாக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. அந்த மக்களின் வழிபாட்டுக்கென புதிதாக பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு எவரும் குடியேறாத காரணத்தினால் அந்த வீடுகள் பற்றைகள் மண்டி பாழடைந்து கிடக்கின்றன.

சொந்தக் காணிகளில் மீள்குடியேறி வசிக்கின்ற நிரந்தர வீட்டு வசதிகளற்ற குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விளையாட்டு மைதானத்தில் தொலைத்தொடர்புக் கோபுரம்

இரணை இலுப்பைக்குளம் பிரதேச மக்கள் நீண்ட காலமாகவே விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள். இதனால் இந்தப் பிரதேசத்துக்கென பெரியதொரு விளையாட்டு மைதானம் அமைத்து அதனை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். ஊர் மக்கள் இடம்பெயர்ந்திருந்தபோது, இந்த மைதானத்திலிருந்து கிரவல் தோண்டி எடுக்கப்பட்டதனால் பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறிய பின்னரும் இந்த குழிகள் நிரப்பப்பட்டு, மைதானத்தைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதேநேரத்தில், இந்த மைதானத்தில் தொலைதொடர்பு கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கோபுரம் அமைக்கப்படும்போது, கிராம அபிவிருத்திச் சங்கத்தினரிடமோ அல்லது இந்தப் பிரதேச சபையினரிடமோ அதற்கான அனுமதி பெறப்படவில்லை.

யாரோ வந்தார்கள். கோபுரத்தை அமைத்தார்கள். போய் விட்டார்கள். அப்போது, வந்தவர்கள் யார், யாருடைய அனுமதி பெற்று இவ்வாறு கோபுரம் அமைக்கின்றீர்கள் என்று ஊர் மக்கள் கேள்வி கேட்க முடியாத அச்சமான ஒரு சூழ்நிலையே நிலவியது. ஆயினும் இன்று வரையிலும் இந்தக் கோபுரம் குறித்து எவரும் கேள்வி கேட்கவில்லை.

தொலைத்தொடர்புக் கோபுரத்தின் ஊடாக இந்தப் பிரதேசத்து மக்களிடம் இருந்து வருமானம் பெறப்படுகின்ற போதிலும், இந்தப் பிரதேசத்தின் பிரதேச சபைக்கோ அல்லது ஊர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்;கோ வாடகையாகவோ அல்லது வரிகள் செலுத்தும் வடிவத்திலோ எந்தக் கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை.

எனவே, நாட்டில் ஆட்சியிலும் நிர்வாகச் செயற்பாடுகளிலும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்ற இந்த வேளையில், இந்த விடயங்களைக் கவனத்திற்கொண்டு எமக்குள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரணை இலுப்பைக்குளம் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மக்களின் நிலைமைகள், ஊர்ப் பிரச்சினைகள் என்பவற்றை இதன்போது விவரமாகக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன் ஆகியோர் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பதாக உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .