2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'மீனவர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்'

Gavitha   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்


வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த, இலங்கை இந்திய அரசுகள் நடவடிக்கையெடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் இன்று (08) அறிவித்துள்ளது.


இது தொடர்பில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவிக்கையில்,


மிக நீண்ட காலமாக இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையே எல்லை தாண்டல் பிரச்சினை இருந்து கொண்டே வருகின்றது. குறிப்பாக இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு நாட்டு மீனவர்களிடையே முறுகல் நிலையும் தொடர்ந்து கொண்டே வருகின்றன.


சில வேளைகளில் இம்முறுகல் நிலை மோதல் வரைக்கும் சென்றுள்ளன. இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன் பிடியினால், வடக்கு கிழக்கு தமிழ் மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலை இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.


ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மஹிந்த அரசினைப்போன்று புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள மைத்தரி அரசும் மீனவர்கள் விடயத்தினை கையாண்டு வருகின்றது. இந்திய மீனவர்களின் அத்துமீறலினால், வடக்கு கிழக்கு கடற்பரப்பில் மீன்வளம் அழிவடைந்து வருவதோடு, மீனவர்களின் வாழ்வாதார நிலையும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது.


இந்திய மீனவர்கள் வடக்கில் தடை செய்யப்பட்ட றோலர் முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதால், சுண்ணாம்பு கற்பாறைகளும் அழிக்கப்பட்டு மீன்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாதவாறு ஆக்கப்படுகின்றன. றோலர் மீன்பிடியினால் இங்குள்ள மீனவர்களின் பெறுமதி மிக்க மீன்பிடி வலைகளும் அழிக்கப்படுகின்றன. இதனால் எமது மீனவர்கள் மேலும் வறுமைக்குள்ளாக்கப்படுகின்றனர்.


வடமராட்சி கடற்பரப்புக்குள் அத்துமீறி 200க்கும் மேற்பட்ட படகுகளில் உள்நுழைந்த இந்திய மீனவர்கள் அப்பகுதி மீனவர்களின் வலைகளினை அறுத்து நாசம் செய்துள்ளனர். இவ்வாறு வடக்கு கிழக்கு மீனவர்களின் துன்பம் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. ஆனால் இரு நாட்டு அரசுகளும் தொடர்ந்தும் மௌனமாகவே இருந்து வருகின்றனர்.


எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது விடுவதுமாக கண்ணாம்மூச்சி விளையாட்டே விளையாடி வருகின்றது. தற்பொழுது புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்திய மீனவர்களின் அத்து மீறல் முன்னரை விட அதிகரித்து காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.


இந்திய மீனவர்களின் அத்துமீறலோடு, தென்பகுதி மீனவர்களும் வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுவதனால், எமது மீனவர்கள் மேலும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் உள்ளூர் மீனவர்களும் விரக்தியடைந்து, தடை செய்யப்பட்ட தொழில் முறைகளில் வெளிப்படையாக ஈடுபடத்தொடங்கியுள்ளனர்.


இதனால் எமது கடல் வளம் மேலும் அழிவினை எதிர்நோக்கியுள்ளது. ஆனால் இவை தொடர்பில் எமது உள்ளூர் மீன்பிடித்திணைக்கள அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் அசண்டையீனமாகவே இருந்து வருகின்றனர்.


இவ்வாறான நிலைமை தொடர்ந்து நீடித்து வருவதையும் எமது கடல் வளம் அழிக்கப்படுவதையும் கொள்ளையிடப்படுவதையும் எமது உயிரைக்கொடுத்தேனும் பாதுகாத்தே தீருவோம். கச்சத்தீவு பெருநாள் ஆரம்பமாவதற்கு முன்னர் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்  என்பதனை, சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நாம் தெரியப்படுத்திக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .