2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுதந்திர விடிவுக்காய் பயணிப்போம்: சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா

George   / 2016 மே 18 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'இலங்கையில்  தமது உரிமைகளுக்காக போராடிய தமிழினத்துக்கெதிராக, மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் என சர்வதேசத்தால் வரையறை செய்யப்பட்ட மாபெரும் இனப்படுகொலைகள், வன்புணர்வுகள், யுத்த குற்றங்கள்  புரியப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துள்ள இந்நிலையில், தமிழ் மக்களாகிய நாம் எமக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கும் பேரிழப்புக்களுக்குமான நியாயத்தை கோரி நிற்கின்றோம்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இலங்கை இராணுவம், பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது எறிகணை வீச்சுகள் போன்றவற்றால் எமது மக்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடாத்தி தமிழினத்துக்கெதிராக மிகப்பெரும் படுகொலைகள் புரிந்தது. 

சிறுவர்கள் பெண்கள் முதியோர்கள் கர்ப்பிணி பெண்கள் என பலரும் வகைதொகையின்றி கொலை செய்யப்பட்டனர். அந்தவகையில், எம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களில் நானும் எனது ஒற்றை காலை, பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது இலங்கை இராணுவத்தினர் நடாத்திய செல் தாக்குதலினால் இழந்த வலியையும் அதன் வேதனையையும் சுமக்கின்றவள்.

இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த இறுதி நாட்களில், மனித உரிமை மீறல்கள், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள், யுத்தக்குற்றங்கள் அதிகமாக இடம்பெற்றதை ஆதாரங்களுடன் சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்திய போதிலும் அதுபற்றிய எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்காது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்காது இழுத்தடிப்புச் செய்கின்ற செயல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவது வேதனையளிக்கின்றது.

எமது இனம் கடந்த காலத்தில் சந்தித்த இழப்புக்கள் ஈடு செய்யப்பட முடியாதவை இனப்பிரச்சனை தோற்றம் பெற்ற காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதிவரை எம் இனம் சந்தித்த துன்பங்கள் சொல்லிலடங்காது. இனவிடுதலைக்காக போராடிய தமிழினத்துக்கெதிராக  பல்வேறு காலகட்டங்களில் வௌ;வேறு வகையான அடக்கு முறைகளை இலங்கை அரசாங்கங்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதனை எமது வரலாற்றில் நாம் காணலாம்.

எனவே இந்த மே -18 இல் எமது இன விடியல் பயணத்தில் மூச்சடங்கிப்போன உறவுகளை நினைவில் நிறுத்தி ஒன்றுபட்டு எமது எதிர்கால சந்ததியினரின் சுதந்திர விடிவுக்காய் பயணிப்போம்' என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .