2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’திட்டமிடப்படாத சிறுபோகச் செய்கையால் பாதிப்பு’

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழ், அதிகாரிகளினதும் கமக்கார அமைப்புகளின் திட்டமிடப்படாத சிறுபோகச் செய்கையால், பயிர்செய்கை மேற்கொண்டுள்ள ஏழை விவசாயிகளும் நன்னீர் மீன்பிடியை நம்பிவாழும் மீனவக்குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனரென, விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நிலவும் வரட்சியான சூழல்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் பத்து அடிக்கும் குறைவாக இருந்தமையால் 890 ஏக்கர் பயிர்செய்கைகளுக்கு திட்டமிடப்பட்டு, அதன்படி உயரதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், 300இற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சட்டத்துக்கு முரணான வகையில், மேலதிக விதைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குறித்த மேலதிக விதைப்புகளானது, பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு 45 நாட்கள் தொடக்கம் 50 நாட்கள் வரைக்குப் பின்னரே அழிக்கப்பட்டன.

அவ்வாறு அழிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏற்கெனவே இரண்டு தடவைகள் நீர் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.

இது இவ்வாறிருக்க, குளத்தில் எஞ்சியிருக்கும் நீரை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு உரிய பொறிமுறையின்றி குறிப்பிட்ட சில அதிகாரிகளின் துணையுடன் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கே நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

குளத்தில் இருக்கின்ற நீரை உரிய முறையில் விநியோகிக்காது முறையற்ற விதத்தில் சில விவசாயிகள் பாராபட்சம் காட்டப்பட்டு தண்ணீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.

இதனால் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில், சுமார் நாற்பதாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையில் ஒரு ஏக்கர் காணிகளைப் பெற்று விதை நெல்லுக்காக மிக நீண்டதொலைவில் இருந்து மேலும் ஒரு ஏக்கருக்கு, ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தைச் செலவளித்து சிறுபோகச்செய்கையை மேற்கொண்டுள்ள சில விவசாயிகள் இவ்வாறு பாராபட்சம் காட்டப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, இரணைமடுக்குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் குடும்பங்கள், இந்த நீர் விநியோகத்தால் வாழ்வாதாரத்தொழிலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சிறுபோகச்செய்கைக்காக முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தி வேலைகளுக்காக, பெருமளவான நிதி ஒப்பந்தங்கள் செய்யப்படாது, இரகசியமான முறையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .