2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘தேவைகளை நிறைவு செய்வதே உண்மையான அரசியல்’

Editorial   / 2018 ஜனவரி 06 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.என்.நிபோஜன்

“மக்களுடைய தேவைகளைப் புரிந்து கொண்டு அதை நிறைவு செய்வதே உண்மையான அரசியலாகும். அந்த அரசியலின் மூலம்தான் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். அவ்வாறான அரசியலின் மூலமே மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும். பிதேசங்களின் அபிவிருத்தி சிறக்கும். இதற்கு மக்களுக்காக உழைக்கின்ற, மக்களோடு ஒன்றாக இருக்கின்ற, மக்களுடைய உணர்வுகளையும் பிரச்சினைகளையும் புரிந்து கொண்டு செயற்படுகின்ற அரசியல் செயற்பாட்டாளர்கள் வேண்டும்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார்.

கிளிநொச்சி - கல்மடுப்பிரதேச மக்கள் சந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“மக்களுடைய தேவைகள் இரண்டு வகையில் உள்ளன. ஒன்று அரசியல் தீர்வு காண்பது. மற்றது வாழ்க்கைச் சவால்களுகளை எதிர்கொள்வதற்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதும், பிரதேசங்களின் அபிவிருத்தியுமாகும். இவை இரண்டும் சமாந்தரமாகவே மேற்கொள்ளப்பட வேண்டியவை. நாம் இந்த இரண்டையும் சமாந்தரமாகவே நோக்கிச் செயற்படுகிறோம். கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் உள்பட அனைத்து விடுதலை அமைப்புகளும் இதையே வலியுறுத்திச் செயற்பட்டு வந்துள்ளன. அரசியல் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போதெல்லாம் மக்களின் இயல்பு வாழ்க்கை உருவாக்கத்தைப் பற்றி பேச்சுகளில் வலியுறுத்தப்பட்டதை இங்கே நாம் நினைவு கொள்ள வேண்டும். ஆகவே நாம் அந்த அடிப்படையிலேயே இரண்டு விடயங்களையும் சமாந்தரமாகச் செயற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்பட்டு வருகிறோம்.

“அரசியல் தீர்வைப் பற்றிச் சொல்லிக் கொண்டு, மக்களுடைய நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினையைப் பற்றி அக்கறைப்படாமலிருக்க முடியாது. அல்லது மக்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அதற்கான அபிவிருத்தியையும் பற்றிப் பேசிக்கொண்டு அரசியல் தீர்வில் அக்கறையில்லாமல் இருக்க முடியாது. ஆனால், இங்கே பல அரசியல் தரப்புகளும் ஏதோ ஒன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு, அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி ஏதோ ஒன்றுடன் மட்டும் நின்று கதைத்தவர்கள், இப்பொழுது வந்துள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக திடீரென அபிவிருத்திகளைப் பற்றியும் கதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது தேர்தலுக்கான வார்த்தைகள் என்பதை மக்களாகிய நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். நாங்கள் எப்போதும் சொல்வதையே செய்கிறோம். செய்வதையே சொல்கிறோம். ஆகையால்தான் மக்கள் மத்தியில் எமக்கான ஆதரவுத் தளம் பெருகி வருகிறது. மக்களின் நம்பிக்கைக்குரிய தரப்பினராக நாம் இன்று மாறியிருப்பதற்கு இதுவே காரணமாகும்.

“உங்களுடைய இந்த நம்பிக்கையையும் இந்த மதிப்பையும் நாம் நிச்சயமாகத் தொடர்ந்தும் பேணுவோம். எங்களுடைய அர்ப்பணிப்பான உழைப்பின் மூலம் உங்களுடைய வாழ்க்கையையும் உங்களுடைய பிரதேசங்களையும் முன்னேற்றுவோம். அதற்கான சிறந்த அணி எங்களிடம் உள்ளது. நாங்கள் அரசியற் போராளிகளாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். சமூக மாற்றத்துக்கான போராளிகளாகவும், அரசியல் விடுதலைக்கான போராளிகளாகவும் செயற்பட்டு வருகிறோம். எங்களால்தான் உண்மையான மாற்றங்களை உருவாக்க முடியும் என்று மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவேதான் மக்களின் ஆதரவுத் தளம் எமக்குப் பெருகிக் கொண்டிருக்கிறது.

“இந்த மாபெரும் ஆதரவின் மூலமாக நாம் போரிலே அழிவடைந்த கிளிநொச்சி மாவட்டத்தை எல்லோரும் ஆச்சரியப்படத் தக்க வகையில் கட்டியெழுப்புவோம். மக்களின் பங்கேற்புடன் இதைச் சாத்தியமாக்குவோம். நமது வெற்றி என்பது மக்களின் வெற்றியே ” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .