2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பௌசர்களில் நீர் எடுக்கும் இராணுவம் : பொதுமக்களுடன் முறுகல்

சண்முகம் தவசீலன்   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் பொது குழாய் கிணறு ஒன்றில் இருந்து படையினர் தொடர்ச்சியாக பௌசர்களில் நீர் எடுத்து வருவதால் பிரதேச மக்களுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று (10) முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

கணுக்கேணி பகுதியில் பொதுமகன் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் வீதியில் மக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்ட குழாய் கிணறு ஒன்றில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பலவற்றுக்கு கடந்த 10 வருடமாக பௌசர்கள் மூலம் படையினர் நீரை உறிஞ்சிவருவதனால் நிலத்தடி நீர் வளம் கெட்டுப் போவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பிரதேசத்தில் உள்ள மக்களின் கிணற்று நீர் காவித்தன்மையாக மாறிவருவதோடு குடிநீருக்கு பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த குடிநீரை உறிஞ்சும் கிணற்றுக்கு பாதுகாப்பாக அருகில் உள்ள பொதுமக்களின் காணியை அபகரித்து காவலரண் ஒன்றை அமைத்துள்ள இராணுவம் பல்வேறு சுகாதர சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகின்றது .குறித்த காணியில் படையினரின் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடம் எந்தவித அனுமதியும் இன்றி பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டுள்ளது.

கழிவுநீரை சேமிக்கும் கிடங்கு மூடப்படவில்லை என்பதோடு, டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமைகள் குறித்து கணுக்கேணி வட்டார பிரதேச சபை உறுப்பினர் த.அமலனிடம் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். இன்னிலையில் இது தொடர்பில் இன்று (10) குறித்த பகுதிக்கு சென்ற பிரதேச சபை உறுப்பினர், படையினரிடம் இது தொடர்பில் வினவியபோது, பொதுமக்கள், படையினருக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு காணொளி எடுத்த ஊடகவியலாளரை அச்சுறுத்தும் வகையில் படையினர் செயற்பட்டதுடன், தொடர்ந்து படையினரும் அங்கு இருந்தவர்களை புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதனையடுத்து முள்ளியவளைப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவளைக்கப்பட்டனர்.

பிரதேச சபை உறுப்பினர் மக்களின் பிரச்சனை தொடர்பில் தெரிவித்த போது, “இது அரசாங்கத்தின் காணி. இது தனிப்பட்ட ரீதியில் முடிவெடுக்க முடியாது. இது தொடர்பில் மாவட்ட கூட்டங்களில் முடிவெடுக்க வேண்டும்” என கூறிவிட்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் தொடர்ச்சியாக படையினர் குறித்த குழாய் கிணற்றிலிருந்து நீரை உறுஞ்சும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவ்வாறான தொடர்ச்சியான செயற்பாட்டை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .