2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரிஷாட்டுக்கு எதிராக பிரேரணைக்கு கூட்டமைப்பின் நிலைப்பாடு

Editorial   / 2019 மே 15 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் குற்றவாளியாக இனங்காணப்பட்டால், அதற்கு ஏற்றவாறு, அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்குமென, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

டெலோவின் முன்னாள் வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராஜாவின் 20ஆம் ஆண்டு நினைவு தினம், வவுனியா - வைரவர் புளியங்குளத்தில், இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தற்போதைய பயங்கரவாதம், தமது மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும் தமிழர்ப் பகுதிகளில், இராணுவச் சோதனைச் சாவடிகள் பல அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்களை, அச்சத்துக்குள் வைத்திருக்கும் சூழல் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இவர், இதனை 2009க்கு முற்பட்ட போருடனான காலத்துடன் ஒப்பிடமுடியுமெனவும் கூறினார்.

சோதனை செய்வது தவறில்லையெனத் தெரிவித்த, அவர், ஆனால், அது கெடுபிடியாக மாறகூடாதெனவும் கூறினார்.

அத்துடன், ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும், பயங்கரவாதிகளாகப் பார்கின்ற நிலமையை மாற்ற வேண்டுமெனத் தெரிவித்த அவர், முஸ்லிம் மக்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை பிரயோகிக்கும் போது, அவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படுமெனவும் கூறினார்.

அதாவது, “மீண்டும் அந்தப் பயங்கரவாதிகளுடன் இணைந்தால் என்ன?” என்று எண்ணும் சூழலை அவர்களிடத்தில் உருவாக்கிவிடுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அந்தச் சூழலை ஏற்படுத்திவிடகூடாதென வலியுறுத்திய அவர், எனவே, சிங்கள மக்களாக இருந்தாலும் சரி, தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, அவர்களைத் தாக்குகின்ற நிலையில் இருந்து மாற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இன்று மக்களை நிர்கதிக்குள் தள்ளுகின்ற நிலமையை ஏற்படுத்தி விட்டு, ஜனாதிபதி சீனாவுக்குச் சென்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், இப்படியான நேரத்தில், நாட்டிலிருந்து அதனைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதே அரச தலைவரின் கடமையாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் குற்றவாளியாகக் கருதப்படுகின்ற பட்சத்திலேயே, அவருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாம் பரிசீலிக்க முடியுமெனவும் இந்த விடயத்தில் தாம் உடனடியாக பதில் சொல்ல முடியாதெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .