2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'அரசு தன் இஷ்டத்துக்கு செயற்பட்டால் அநாவசியமாக ஸ்திரமற்ற நிலை ஏற்படும்'

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

'வடக்கு கிழக்கில் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அந்த வகையில் தங்கள் இஷ்டத்திற்கு ஏற்ப குடியேற்றங்களை ஏற்படுத்தவோ நிலங்களை சுவீகரிக்கவோ தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரவோ நாம் அனுமதிக்க முடியாது. அவ்வாறு இடம்பெற்றால் இப்படியான போராட்டங்கள் மேலும் மேலும் அதிகரித்து இலங்கையில் அநாவசியமான ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும். அது ஒட்டுமொத்த இலங்கைக்கும் நல்லதொரு நிலையாக இருக்காது' என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதப்போராட்டம் நகரசபை மைதானத்தில் இன்று இடம்பெற்றபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைகளை மாற்றி வெலிஓயா என்னும் புதிய பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்குவதன் மூலம் அந்த மாவட்டத்தி;ன் இன விகிதாசாரத்தை மாற்றி இனங்களுக்கிடையில் கசப்புணர்வையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும்.

போரினால் சின்னாபின்னமாக்கப்பட்டு உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து நிற்கும் நிலையில், காணிப்பதிவு என்னும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மோசடியான நில அபகரிப்புச் செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் காணி, வீடுகள் அற்று நிர்க்கதியற்ற நிலையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ குடியேற்றங்கள் மற்றும் பெரும்பான்மையின் மக்களின் குடியேற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக இன ஒற்றுமையைக் குலைக்கும் செயற்பாட்டினை உடன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுரேஷ் பிரேமச்சந்திரன் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'எல்லை மீள் நிர்ணய செயற்பாடுகளை தற்போதைக்கு நாம் ஏற்றுக்கொள்வதாக இல்லை என அரசாங்கத்திற்கு தெளிவாக சொல்லியிருக்கிறோம். இது தொடர்பில் முல்லைத்தீவில் இடம்பெற்ற கூட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுவாக சொல்லியிருக்கின்றனர். அதுபோல் வவுனியாவிலும் தமிழ் மக்களுக்கு விரோதமான முறையில் எல்லை நிர்ணயம் ஏற்படுத்தப்படுமாக இருந்தால் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது.

இது இலங்கை பூராகவும் நடக்க கூடிய செயற்பாடு என்று அரசாங்கம் சொல்லலாம். அது சிலவேளை சரியாகவும் இருக்கலாம். ஆனால் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் இது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக மாற்றப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர். இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்படுகின்றது. தமிழர்களது காணிகளை இராணுவம் பிடித்து வைத்துள்ளது என பல செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இவை ஜனாதிபதிக்கு தெரியாமல் இடம்பெறவில்லை. ஆகவே யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை அரசாங்கம் தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஓர் சிங்கள பிரசன்னத்தை உருவாக்க அவர்களை குடியேற்றவதற்கு பல வேலைத்திட்டங்களை வைத்துள்ளது. ஆகவே இலங்கையுடன் வடக்கு கிழக்கை ஒப்பிட்டு சொல்வதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை. இந்த போராட்டமும் இவற்றுக்கு எதிரான போராட்டமே. இலங்கை அரசாங்கம் இதனை நிறுத்தாவிட்டால் இப்படியான போராட்டங்கள் இன்னும் அதிகரிக்கும் என்பது மாத்திரமல்ல சர்வதேசத்தின் மட்டத்திலும் அழுத்தங்களை கொண்டுவர நாம் நடவடிக்கை மேற்கொள்ளுவோம்' என்றார்.

மாவை சேனாதிராஜா எம்.பி :-

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  உரையாற்றுகையில்,  இன்னும் தமிழர்களது நிலங்களும் வீடுகளும் பொதுச்சொத்துகளும் அரசினதும் இராணுவத்தினதும் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை விரைவில் பொது மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். அப்படியானால் தான் அம்மக்கள் தமது சொந்த வீடுகளிலும் வீடில்லாதவர்கள் மீண்டும் வீடுகளை உருவாக்கவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் வாழ்வாதாரத்தை சீரமைப்பதற்கும் சிறப்பாக இருக்கும்.

ஆகவே, தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள், சொத்துக்கள், வீடுகள் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். அதைவிட இன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் சிவில் ஆட்சி முறை இருக்கவில்லை என்பது எமது கருத்து. இராணுவத்தினுடைய ஆதிக்கமும் அவர்களுடைய கட்டளைகளும் இப்போதும் நடைமுறையில் இருப்பதால் எமது மக்களின் அன்றாட நடவடிக்கைளிலும் செல்வாக்கு செலுத்தி வருவதை இட்டு நாம் பெரும் கவலை அடைந்திருக்கின்றோம்.

இது ஜனநாயகத்திற்கு மதிப்பளிப்பதாக இல்லை. ஜனநாயகம் எமது மண்ணில் நிலை கொண்டிருக்காவிட்டால் எமது மக்கள் மேலும் அடக்கு முறைகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருந்தாலும் முக்கியமாக பயங்கரவாத தடைச்சட்டம் தீவிரமாக அமுலில் இருக்கின்றது. நீண்டகாலமாக அவசரகாலச்சட்டத்தின் கீழும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழும் தமிழ் மக்கள் சிறைச்சாலைகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்ட பின்னும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட விதிகளினால் அது இன்னும் பலமடைந்திருக்கின்றது. அது நீக்கப்படவேண்டும். அவ்வாறாக இருந்தால் தான் மக்கள் சுதந்திரமாகவும் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் அவர்களது குடியியல் உரிமைகளுடன் தமது மண்ணில் சுதந்திரமாக வாழ்வதற்குமான நிலைமை ஏற்படும் என நம்புகின்றோம்.

ஆகவே இவற்றை வலியுறுத்தி அரசாங்கத்தை உடனடியாக காணிப்பதிவை நிறுத்த வேண்டும் எனவும் மக்களை தமது வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் நாங்கள் இந்த போராட்டத்தின் மூலம் கோருகின்றோம்.

இது தமிழ் மக்களின் பிரதிபலிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் ஓர் புனிதமான இயக்கம் என நம்புகிறோம். இந்த இயக்கத்திற்கு அரசு தரப்பில் சாதகமான பதில் கிடைக்கவில்லையாயின்  இதை மேலும் விஸ்தரித்து தமிழ் பிரதேசங்கள் முழுவதும், வேண்டுமானால் தமிழ் மக்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்குள்ள ஜனநாயக சக்திகளோடு இணைந்து மேலும் இந்த போராட்டத்தை முன்னெடுப்போம்' என்றார்.

ஈ.சரவணபவன் எம்.பி :-


நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் உரையாற்றுகையில், காணிப்பதிவை அடிப்படையில் பார்த்தால் பதியச்சொல்வதில் உள்நோக்கம் இருக்கின்றது. அதில் ஒன்று இராணுவங்கள் வைத்திருக்கும் காணிகளை வெளிநாட்டில் இருப்பவர்கள் பதியாவிட்டால் அதற்கு சட்டத்தை கொண்டு வந்து மாற்றும் சூழ்நிலை இருக்கின்றது.

இதே மாதிரியான நிலை ஹிட்லரின் காலத்தில் நடைபெற்றதாக சரித்திரத்தில் இருக்கின்றது. தற்போதும் பளை, கொடிகாமம் பகுதிகளில் அனேகமான காணிகளில் இராணுவம் உள்ளது. அதனை பலப்படுத்தி விட்டனர். அக்காணி சொந்தக்காரர்கள் வெளிநாட்டில் உள்ளனர்.

அவர்கள் இராணுவம் உள்ளதால் பயந்து இங்கு வருகின்றார்கள் இல்லை. அத்துடன் அவர்களை புலிகள் என கூறிவருவதால் விமான நிலையத்திற்கூடாக வருவதற்கு அஞ்சுகின்றனர். அவர்களுடைய காணிக்கு உள்ளூரில் இருப்பவர்கள் பத்திரம் இருந்தாலும் கதைப்பதற்கு பயப்படுக்கின்றனர். இவ்வாறு பலவிதமான அச்சுறுத்தல்களை இராணுவம் சிவில் முறையில் ஆளுனரும் செய்துகொண்டுள்ளனர். இராணுவத்தில் இருந்த ஒருவர் ஆளுனராக இருக்கின்றார்.
 
இவர் தான் நினைத்த மாதிரி கட்டளைகளை இடுகின்றார். இவரைப்பற்றி நாடாளுமன்றத்தில் எத்தனை பிரேரரனையை கொண்டு வந்தாலும் வெற்றியளிக்ககூடிய சாத்தியங்கள் மிகக்குறைவு. ஏனெனில் அரசாங்கத்துடன் உள்ள கிழக்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் கிழக்கு மாகாண ஆளுனர் பற்றி தெளிவாக கடிதம் கொடுத்தும் அரசாங்கம் அசட்டை செய்து விட்டது.
 
இவர்கள் தாம் நினைத்த மாதிரி தமக்கு லாபம் இருக்கும் விடயத்தை நாடப்போகின்றார்கள். ஆனால் வெளி உலகிற்கு பொய்யானவற்றை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். 1998 ஆம் வந்த சட்டத்திற்கு இதுவரை ஒன்றும் செய்யாது விட்டுவிட்டு ஏன் தற்போது வடக்கு கிழக்கிற்கு மாத்திரம் காணிப்பதிவை இவ்வளவு அவசரமாக செய்கின்றனர்.

எனவே எமது சாத்வீகம் முடிந்து ஆயுதப்போராட்டத்தை மௌனிக்க வைத்துள்ளார்கள். மௌனிப்பது என்பது அவர்களை பொறுத்தவரை மௌனமாகவே இருப்பது நல்லது. தற்போது நாம் மீண்டும் சாத்வீக போராட்டத்திற்கு அடுத்தகட்டமாக வந்துள்ளோம்.'

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இன்று (திங்கள்) உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வவுனியா நகரசபை மைதானத்தை சூழவும் ஏராளமான பொலிஸாரும் இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டிருந்ததுடன் மைதானத்திற்கு செல்லும் வீதிகள் அனைத்தும் பொலிஸாரால் மூடப்பட்டு மக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர்கள் , தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்தனர். 

காலை 7 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதப்போராட்டத்தில் தமிழ் தேசிக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ. சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், விநோ நோகதாரலிங்கம், சி. சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன், தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மாநாபா அணியின் செயலாளர் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பிரதி அமைச்சர் சுந்தரமூர்த்தி முகமது அபூபக்கர், பேராசிரியர் சி. க. சிற்றம்பலம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர், உபதலைவர், உறுப்பினர்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸாரால் நகரசபை மைதானத்தின் வாயிற் கதவுகளும் பூட்ட முற்பட்ட போது உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அனைவரும் மைதான வாயிற் கதவருகில் சென்று பொலிஸாருடன் முரண்பட்டுக்கொண்ட நிலையில் பொலிஸார் அவ்விடத்தை விட்டு விலகிய பின்னர் வாயிற் கதவுகளை வவுனியா நகரசபையின் தலைவர் ஐ. கனகையா திறந்து விட்டிருந்தார். எனினும் பாதைகள் மூடப்பட்மை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாருடன்ட வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் மக்களை பங்களிக்க விடவில்லையாயின் வீதியில் இறங்கி போராடுவோம்' என்றார்.

இப்போராட்டத்தில் 'தீண்டாதே தீண்டாதே எம் இனத்தை தீண்டாதே', 'திருடாதே திருடாதே எம் நிலத்தை திருடாதே', 'அரசே! நில ஆக்கிரமிப்புத்தான் எனது தீர்வுத்திட்டமா?', 'சிதைக்காதே சிதைக்காதே ஒற்றுமையை சிதைக்காதே', 'எமது கோரிக்கைகளை நிறைவேற்று இல்லையேல் தொடரும் எமது போராட்டம்';, 'வெலி ஓயாவில் சிங்கள பிரதேசசெயலகத்தை நிறுவுவதை நிறுத்து' என்ற பதாதைகள் தொங்க விடப்பட்டிருந்தன. இவ்வுண்ணாவிரதப் போராட்டம் மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது.


You May Also Like

  Comments - 0

  • Mohammed Hiraz Tuesday, 18 October 2011 02:34 AM

    ஏனுங்க பாழாய் போய் கிடக்கும் நிலம்களை மக்களுக்கு பகிர்ந்தளித்து குடியேற்றி விளை நிலங்களாக மாற்றுவதற்கு ஏன் இந்த எதிர்ப்பு? யாராக இருந்தாலும் இலங்கை தேசத்தவருக்கு எங்கும் வாழவும் குடியேறவும் உரிமை இல்லையா? சிறுபான்மையாகிய நாங்க மட்டும் தென்னிலங்கையில் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம். காணி வளவு வாங்கலாம் ஆனா சகோதர சிங்கள மக்கள் மட்டும் வடகிழக்கில் உள்ள வளங்களை அனுபவிக்க கூடாதா? இப்படி மற்றய நாட்டு மக்கள் நினைத்தால் தமிழர்கள் எங்கனம் ஐரோப்பாவிலும், கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும் குடியேறி வாழ முடியும் தங்களுக்கு எல்லோரும் அடைகலம் அளிக்க வேண்டும். ஆனால் எங்கள் நிலத்தில் யாருக்கும் பங்கில்லை என்றால் எப்படி? தரிசாக கிடக்கும் நிலங்கள் வரலாறுக்கும் உங்களால் பயிரிடபட்டதா?குடியேறும் மக்கள் நலமாக வாழ வகையும் செய்ய மாட்டீர்கள். நீங்களும் அந்த நிலங்களில் பயிர் செய்து நாட்டை முன்னேற்றவும் மாட்டீர்கள்??? யார் எங்கு வாழ்ந்தாலும் நாட்டில் மொத்த சன தொகையில் எந்த மாற்றமும் வராது. நாட்டு வளங்களை அனுபவிக்கும் விகிதமும் நாட்டு வருவாய்க்கி பங்களிப்பு செய்யும் வரி செலுத்தும் விகிதமும் மாறாது!!! எல்லா இடங்களிலும் எல்லோரும் வாழ்ந்து நாடு முன்னேறட்டுமே ஏன் பயன் படுத்த வேண்டிய நிலங்களை வீண் பிடிவாதத்திற்காக பாழடிக்க வேண்டும்???

    Reply : 0       0

    KLM Tuesday, 18 October 2011 03:21 AM

    ஹிராஸ், வடக்கு கிழக்கிலிருந்த தமிழ் சிங்கள மக்கள் எத்தனை பேரை அரசாங்கம் தெற்கில் தானாக அழைத்து மீள்குடியேற்றியுள்ளது? வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்கள் தெற்கில் குடியேறியிருந்தால் அது வாடகை வீட்டிலாக இருக்கும். அல்லது அவர்கள் சொந்தப்பணத்தில் வாங்கியதாக இருக்கும். வடக்கு கிழக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் அத்தகையதல்ல. இது வேறு நிலைமை.

    Reply : 0       0

    Mohammed Hiraz Tuesday, 18 October 2011 03:36 AM

    கே எல் எம்!!!!

    புத்தளத்தில் அனுராதபுரத்தில் குருநாகலையில், திகாரியில், என பல்வேறு தென்னிலங்கை பிரதேசங்கள் ஒட்டுமொத்தமாக பத்தாயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துக்கள் பறிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களுக்குள் காலா காலத்திற்கும் வாழ்ந்த சொந்த இடங்களைவிட்டு பலவந்தமாக யாழிலும் மன்னாரிலும் மேலும் பல வடபாகங்களிலும் உள்ள முஸ்லிம்கள் ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரம் பேர் வெளியேற்ற பட்டபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உணவளித்து, பராமரித்து, தொழில் வசதி கொடுத்து, வாழவும் நிரந்தர இடங்கள் கொடுத்து காத்ததே, பாதுகாத்ததே, போசித்ததே தென்னிலங்கை பிரதேசம். இந்த மாபெரிய உண்மை எப்படி உங்களுக்கு மறந்தது அல்லது எங்களுக்கு இவை எல்லாம் ஞாபகம் இருக்காது என்ற எண்ணத்திலா தென்னிலங்கையின் உபகார உதவிகள் குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள்??? சுனாமியின் போது முதன் முதல் ஓடிவந்து உதவியதும் தென்னிலங்கை வாசிகள்தானே?

    Reply : 0       0

    cheimical alie Tuesday, 18 October 2011 10:37 AM

    mohammed check up your brain you are some thing wrong .

    Reply : 0       0

    Mohammed Hiraz Tuesday, 18 October 2011 08:42 PM

    எது தவறு இரசாயன எலி? யாழ் முஸ்லிம்களை துறத்தப்பட்டதா? அல்லது அவர்களது பத்தாயிரம் கோடியையும் தாண்டிய சொத்துகள் இலங்கையிலேயே ஆக பெரிய கொள்ளையாக கொள்ளையடிக்கபட்டதா??? சோட்மெமரியால மறந்த நீங்கதான் உங்களுக்கு அது இருந்தா ஒரு தடவ செக் பன்னனும்???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .