2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள குடும்பங்களுக்கு வீடு

Menaka Mookandi   / 2016 ஜூலை 08 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீள்குடியேறுவதற்கான காணியற்ற நிலையில், வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு, அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னடம்பனிலுள்ள 60 ஏக்கர் காணியில் நிரந்தர வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

குறித்த முகாமில் 97 குடும்பங்கள் தங்கியுள்ள நிலையில், அவர்களில் 66 குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகளை, ஞானம் பவுன்டேஷன் நிறுவனம் நிர்மாணித்துக்கொடுக்கவுள்ளது என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின்  அறிவுறுத்தல்களுக்கு அமைய, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், முகாம்களை மூடுதல் மற்றும் வீடமைப்பு உட்பட நிரந்தரமான தீர்வுகளை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு, கட்டம் கட்டமாக மேற்கொண்டு வருகின்றது.

வவுனியாவில் பூந்தோட்ட நலன்புரி முகாமில், ஷஉள்ளக இடம்பெயர்வுக்குள்ளான 97 குடும்பங்கள் தங்கியுள்ளன. இவர்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களாக இருப்பதுடன், காணி அற்றவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வழங்கும் நோக்குடன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு, சின்னடம்பனில் 60 ஏக்கர் காணியில் 66 வீடுகள், அரச சார்பற்ற நிறுவனமான ஞானம் பவுன்டேஷன் நிறுவனத்தின் உதவியுடன் கட்டுமாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, ஆவணி மாத இறுதியினுள் வீட்டுத் திட்டங்கள் முடிவு பெறும் நிலையில் உள்ளன.

மேலும், கடந்த மாதத்தில், ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலை அடுத்து, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு, புளியங்குளத்தில் 40 ஏக்கர் காணி வன திணைக்களத்தினால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டு ஞானம் பவுன்டேஷன் நிறுவனத்தினால் 31 வீடுகள் நிர்மாணிப்பதற்கான முன்னேற்பாடுகளான காணி துப்புரவாக்கல், நில அளவை, தொகுதித் திட்டம் (டீடழஉம ழரவ Pடயn), என்பன தயாரிக்கப்படுகின்றன. இவ்வீட்டுத் திட்டமானது, 2016 ஒக்டோபர் மாதத்தில் முடிவுறுத்தப்படும்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டலில், பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தங்கியிருந்த 97 உள்ளக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு, நிரந்தரமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை நல்லிணக்கத்துக்கான மைல்கல்லாக நோக்கப்படுகிறது' என்று அமைச்சின் செயலாளர், தனதறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X