2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியா, தென் ஆபிரிக்க தொடர் முன்னோட்டம்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. பலமான இரண்டு அணிகள் மோதும் தொடர் என்பதினால் இந்த தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. 3 டுவென்டி டுவென்டி போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ளது. சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு நல்ல பலப் பரீட்சைக்கான தொடராக இது அமையவுள்ளது.

இந்தியா அணி நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது சொந்த நாட்டில் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்னர் சொந்த நாட்டில் இந்த தொடர் ஆரம்பிக்கவுள்ளது. சொந்த நாட்டில் புலிகளாகவும், வெளிநாடுகளில் எலிகலாகவும் திகழும் இந்திய அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளில் பட்ட அடிகளுக்கும் பதில் சொல்லும் தொடராக இந்த தொடரை இந்திய அணி பாவிக்க முயற்சிக்கும். பலமான தென் ஆபிரிக்க அணியுடன் அதனை சாதித்துக் காட்டினால் இழந்த இந்திய அணியின் மாஸ் மீண்டும் கிடைக்கும். டோனி, கோலி என இரண்டு இந்திய அணியின் தலைவர்களும் தங்கள் மீது எழுந்துள்ள விமர்சனங்களை போக்குவதற்கும் இந்த தொடரை எதிர் பார்த்துள்ளனர்.  

இந்தியாவுக்கு எந்த நாடு சென்றாலும் மிகவும் அது பிரபலமாக பேசப்படும். முக்கியமான அணியாகவும், பலமான அணியாகவும் இந்திய அணி விளையாட்டிலும், முகாமைத்துவதிலும் ஆதிக்கம் செலுத்துவது இதற்கு ஒரு காரணம். தற்காலத்தில் இந்திய ரசிகர்களை தாண்டி அனைத்து நாடுகளுக்கும், அந்த நாடுகளின் ரசிகர்களுக்கும் இந்திய கிரிக்கெட் அணி எதிரியே. இதில் இலங்கையில் இந்த விடயம் பற்றி கதைக்கவே தேவை இல்லை. இலங்கை, இந்திய கிரிக்கெட் மோதல் அதிகம் நடைபெறும் நாடு நம் நாடாகத்தான் இருக்கும். இந்தியாவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் ரசிகர்கள் இங்கே அதிகம் இருக்கின்றமையே அதற்கு காரணம்.

சர்வதேச ரீதியில் அனைத்துவித போட்டிகளிலும்  பலமான அணி தென் ஆபிரிக்கா அணி. ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மாத்திரமே இந்திய அணி பலமான அணி. மற்றைய போட்டிகளில் தமது பலத்தை நிரூபிக்க இந்த தொடரை இந்திய அணி பாவிக்க வேண்டும். பலமான முன்னணி அணியை வெற்றி கொண்டாலே அவர்களின் பலம் கதைக்கபப்டும். அதுதான் இந்திய அணிக்கு தேவையானது தற்போது. குறிப்பாக டோனிக்கு மிகப் பெரிய தொடர் வெற்றி ஒன்று மட்டுப்படுத்தப் ஓவர்கள் போட்டிகளில் தேவைபப்டுகின்றது. உலகக்கிண்ண தோல்விகள். டெஸ்ட் அணித்தலைமைப்பொறுப்பையும், அணியையும் விட்டு விலகியமைக்கும் ஈடுகட்ட தன்னுடைய பலத்தை மீண்டும் காட்ட தேவைபப்டுகின்றது. டெஸ்ட் போட்டிகளில் விராத் கோலி இலங்கையில் பெற்ற தொடர் வெற்றி மூலமாக நல்ல அணித்தலைவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். ஆனாலும் இந்த தொடரில் வெற்றிகளைப் பெற்றால் மட்டுமே அந்த பெயர் தொடரும். அத்துடன் டெஸ்ட் போட்டிகளிலும் தலைவராக தொடர முடியும். 

என்னதான் பலமான அணியாக இருந்தாலும் இந்தியாவுக்குள் வந்து அவர்களை ஆட்டம் காண வைப்பது மிகக் கடினம். ஆனால் தென் ஆபிரிக்கா அணி ஒவ்வொரு முறையும் இந்திய அணியை ஆட்டம் காண வைத்துள்ளது. தொடர்களை இந்திய அணி வென்ற வேளைகளிலும் கூட  இலகுவாக வெற்றியைப் பெற முடியவில்லை. அத்துடன் தென் ஆபிரிக்க அணி வெற்றிகளையும் கூட பெற்றுள்ளது. இந்திய அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் பெறுவது போல தென் ஆபிரிக்கா அணிக்கும் அதே நிலை உண்டு. டெஸ்ட் போட்டிகளில் புதிய தலைவர். ஹாசிம் அம்லா இந்தியாவில் விளையாடியுள்ள போதும் இப்போதே இந்தியாவில் வைத்து தலைமை தாங்கவுள்ளார். அவருக்கு மிகப் பெரிய சோதனை காத்துள்ளது. வில்லியர்ஸ் ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளில் நல்ல தலைவராக பெயர் பெற்றவர். அவருக்கு பெரியளவில் சோதனை இல்லாவிட்டலும், அழுத்தங்கள் இல்லாமல் இருக்க இந்த தொடர் முக்கியம். பப் டு பிலேசிஸ் ட்வென்டி, ட்வென்டி போட்டிகளில் தலைமை தாங்குகின்றார். அவருக்கும் தலைவராக இந்த தொடரே இந்தியாவில் முதற் தொடர். டுவென்டி, டுவென்டி போட்டிகள் என்பது நாடு, ஆடுகளம் என்பனவற்றை தாண்டி அன்றைய நாளில் நடைபெறும் சம்பவங்களின் முடிவே.

20-20 போட்டிகளில் இந்தியா, தென் ஆபிரிக்கா 
டுவென்டி டுவென்டி போட்டிகள் சர்வதேச ரீதியில் ஆரம்பித்து 10 வருடங்களை தாண்டியுள்ள நிலையில் இரு அணிகளும் முதற் தடவையாக இந்திய மண்ணில் விளையாடவுள்ளன. இது ஒரு வித்தியாசமான ரசனையை தரும். இதுவரை இரு அணிகளும் 08 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் 6 போட்டிகளில் இந்திய அணியும், 2 போட்டிகளில் தென் ஆபிரிக்க அணியும் வென்றுள்ளன. 

ஆக 20-20 போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இந்திய அணியில் தொடர் நடைபெறுகின்ற நிலையில் இந்திய அணியின் பலம் அதிகமாகவே இருக்கும். தரப்படுத்தலகளில் இந்திய அணி நான்காமிடத்திலும், தென் ஆபிரிக்கா அணி ஆறாமிடத்திலும் உள்ளன. தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் முதலிடத்தைக் கைப்பற்றும். இரண்டு வெற்றிகள் இரண்டாமிடத்தை தரும். தொடர் தோல்வி என்ற நிலை பின்னடைவை உருவாக்கும். மாறாக தென் ஆபிரிக்கா அணி மூன்று போட்டிகளிலும் வென்றால் மூன்றமிடத்தைப் பெறும். இரண்டு வெற்றிகள் நான்கமிடத்தைப் பெற்றுத் தரும். 

ஒக்டோபர் 02 மாலை -  07 மணி  - தர்மசாலா 
ஒக்டோபர் 05 மாலை -  07 மணி  - கட்டாக் 
ஒக்டோபர் 08 மாலை -  07 மணி  - கொல்கொத்தா  

அணி விபரம் -இந்தியா 
மகேந்திரா சிங் டோனி(தலைவர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஸ்டுவோர்ட் பின்னி, ஷிகார் தவான், விராத் கோலி, புவனேஸ்வர் குமார், அக்ஸார் பட்டேல், அஜிங்கையா ரெகானே, சுரேஷ் ரெய்னா, அம்பாத்தி ராயுடு, மோஹித் ஷர்மா, ரோஹித் ஷர்மா, ஸ்ரீநாத் அரவிந், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா

அணிவிபரம் - தென் ஆபிரிக்கா 
பப் டு பிலேசிஸ்(தலைவர்), கைல் அப்போட், ஹாசிம் அம்லா, பர்கான் பெஹார்டயீன், குயின்டன் டி கொக், மெர்ச்சன்ட் டி லங்கே,AB DE வில்லியர்ஸ், JP டுமினி, இம்ரான் தாகீர், எடி லீ, டேவிட் மில்லர், அல்பி மோர்க்கல், க்றிஸ் மொரிஸ், ககிசோ ரபிடோ, காயா சான்டோ. 

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் 
இரண்டு பலமான அணிகள் மோதும் தொடர் இது. இரண்டாமிடத்திலுள்ள  இந்தியா அணியும், மூன்றாமிடத்திலுள்ள இந்திய அணியும் மோதவுள்ளன. உலகக்கிண்ண அரை இறுதிப் போட்டித் தோல்விக்கு பின்னர் பங்களாதேஷ், சிம்பாவே அணிகளையே இந்தியா அணி சந்தித்துள்ளது. இந்த நிலையில் பலமான ஒரு அணியை சொந்த நாட்டில் சந்திக்கவுள்ளனர். உலகக்கிண்ண தொடரில் தென் ஆபிரிக்கா அணியை இந்திய அணி வெற்றி பெற்றதன் பின்னர் மீண்டும் சந்திக்கவுள்ளனர். இதுவரை இரு அணிகளும் 71 போட்டிகளில் மோதியுள்ளன. 42 போட்டிகளில் தென் ஆபிரிக்கா அணியும், 26 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி  பெற்றுள்ள அதேவேளை மூன்று போட்டிகள் கை விடப்பட்டுள்ளன. இந்தியாவில் நடைபெற்ற 23 போட்டிகளில் இந்திய அணி 13 போட்டிகளிலும், தென் ஆபிரிக்கா அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆக இந்தியாவிலும் சரி. வெளி நாடுகளிலும் சரி தென் ஆபிரிக்கா அணி இந்திய அணியிலும் பார்க்க பலமானதாகவே இருந்துள்ளது. 

இந்த தொடரும் அவ்வாறே அமையும். இறுக்கமான ஒரு தொடர் முடிவுக்கான வாய்ப்பே உள்ளது. 1991 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்கா அணி இந்தியாவில் ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாடியது. இதுவரை இரு அணிகளும் மாத்திரம் பங்குபற்றிய நான்கு தொடர்களில், தென் ஆபிரிக்கா அணி இந்தியாவில்  விளையாடியுள்ளது. ஒரு தொடர் சமநிலையில் நிறைவடைந்தது. அடுத்த மூன்று தொடர்களிலும் ஒரு போட்டி வித்தியாசத்தில் இந்தியா தொடரை வென்றுள்ளது. இம்முறையும் அதே நிலைதான். தென் ஆப்ரிக்கா அணி தொடரை கைப்பற்றுவது சாத்தியமற்ற நிலை உள்ளது. அது நடக்குமாயின் டோனியின் தலைமைப் பொறுப்பு கேள்விக்குறியாகும்.  தரப்படுத்தல்களில் மாற்றங்களையும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. தென் ஆபிரிக்கா அணி தொடரை இரண்டு போட்டிகள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இரு அணிகளும் தங்களுக்குள் இடங்களை மாற்றிக் கொள்ளும். இந்தியாவோ, தென் ஆபிரிக்காவோ சகல போட்டிகளிலும் வெற்றி பெற்றால் முதலிடத்தில் மாற்றமில்லை. மூன்றாமிடத்தில் மட்டுமே மாற்றம் நிகழும்.

அணி விபரம் -இந்தியா 
மகேந்திரா சிங் டோனி(தலைவர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஸ்டுவோர்ட் பின்னி, ஷிகார் தவான், விராத் கோலி, புவனேஸ்வர் குமார், அக்ஸார் பட்டேல், அஜிங்கையா ரெகானே, சுரேஷ் ரெய்னா, அம்பாத்தி ராயுடு, மோஹித் ஷர்மா, ரோஹித் ஷர்மா, உமேஷ் யாதவ், குர்கீர்த் சிங் , அமித் மிஸ்ரா

இந்த அணியில் பலமான துடுப்பாட்ட வரிசை பலம். ஆரம்ப ஜோடி ரோஹித் ஷர்மா மற்றும் சிகார் தவான். உபாதையில் இருந்து சிகர் தவான் மீண்டு போர்மில் இருப்பதை பயிற்சிப்போட்டியில் நிரூபித்துள்ளார். மூன்றாமிடம் விராத் கோலி. அவர் பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை. நான்காமிடம் டோனி, ஐந்தாமிடம் சுரேஷ் ரெய்னா, ஆறாமிடம் அன்மைக்காலமாக கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் எந்த இடம் கிடைத்தாலும் ஓட்டங்களை குவித்து ரெஹானேயின் இடத்தைக் கைப்பற்றியுள்ள அம்பாத்தி ராயுடு,  ஏழாமிடம் ஸ்டுவோர்ட் பின்னி, எட்டாமிடம் அஷ்வின், ஒன்பதாமிடம் அக்ஸார் பட்டேல், பத்தாம் , பதினோராமிடங்களில் மோஹித் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர். ஐந்து போட்டிகள் என்ற காரணத்தினால் மாற்றங்கள் சில செய்யப்படும்.  சகலதுறை வீரர் தேவை என்ற நிலையில் பின்னி ஏழாமிடத்தைப் பெற்றுள்ளார். ஆனாலும் அந்த இடத்தில இன்னும் ஒரு துடுப்பாட்ட வீரரை களமிறக்கி சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா போன்றவர்களின் பந்துவீச்சை பாவிக்கலாம். டோனியின் வித்தியாசமான முடிவுகள் இவற்றில் என்ன மாற்றத்தை செய்யும் என பொறுத்து இருந்தே பார்க்கவேண்டும்.   

அணி விபரம் - தென் ஆபிரிக்கா 
AB DE வில்லியர்ஸ்(தலைவர்), பப் டு பிலேசிஸ், கைல் அப்போட், ஹாசிம் அம்லா, பர்கான் பெஹார்டயீன், குயின்டன் டி கொக், JP டுமினி, இம்ரான் தாகீர், டேவிட் மில்லர், மோர்னி  மோர்க்கல், க்றிஸ் மொரிஸ், ஆரோன் பங்கிசோ, காயா சான்டோ, ககிசோ ரபட்டா, டேல் ஸ்டைன்.

தென் ஆபிரிக்கா அணியும் பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட அணி. வேகப்பந்துவீச்சு அவர்களின் மேலதிக பலம். இம்ரான் தாகீரின் சுழற்பந்துவீச்சு மேலதிக பலம். ஆக தென் ஆபிரிக்கா அணியும் இந்திய அணிக்கு சம பலமான அணியே. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஹாசிம் அம்லா, குயின்டன் டி கொக். வேகம் மற்றும் நிதானம் கலந்த நல்ல ஒரு கலவையான ஜோடி. ஓய்வின் பின் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார் கொக். மூன்றாமிடம் பப் டு பிலேசிஸ்.  ஐவரும் உபாதையில் இருந்து குணமாகி மீண்டும் இடம் பிடித்துள்ளார். நான்காமிடம் பற்றி கவலை தேவை இல்லை. தலைவர் வில்லியர்ஸ். ஐந்தாமிடம் டுமினி. உபாதை குணமடைந்து மீண்டும் அணிக்குள் வந்துவிட்டார். சகலதுறை வீரராகவே செயற்படுவார். அடுத்த இரு இடங்களில் டேவிட் மில்லர், பர்ஹான் பெஹைர்டீன் ஆகியோர் துடுப்பாடுவார்கள். இம்ரான் தாகீர், டேல் ஸ்டைன், மோர்னி மோர்க்கல் ஆகியோர் முழு நேரப்பந்துவீச்சு இடங்களைப் பெறுவார்கள். இந்திய ஆடுகளங்கள் என்பதானால் ஆரோன் பன்கிசோ அணிக்குள் இடம் பிடிக்க வாய்புகள் உள்ளன. இடதுகர மெதுவான பந்துவீச்சாளர். ஆக சுழற்பந்து இந்திய அணியை தடுமாற வைக்க வாய்புகள் உள்ளன. இடதுகர சுழற்பந்து வீச்சாளர்களுக்கும், லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்களுக்கும் இந்திய அணி தடுமாறுவது வழமை.

போட்டிகள் விபரம்
ஒக்டோபர்  11 - பகல் 1.30 - கான்பூர் 
ஒக்டோபர்  14 - பகல் 1.30 - இந்தூர் 
ஒக்டோபர்  18 - பகல் 1.30 - ராஜ்கோட் 
ஒக்டோபர்  22 - பகல் 1.30 - சென்னை 
ஒக்டோபர்  11 - பகல் 1.30 - மும்பை 

சகல போட்டிகளுமே பகலிரவு போட்டிகளாக நடைபெறவுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .