2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கை, இங்கிலாந்து ஒ.நா.ச.போ தொடர் - மீள் பார்வை

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 04 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் இலங்கை அணிக்கு அடியாகவே அமைந்தது. எதிர்பார்த்தது தானே. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு மோசமாக அமையவில்லை என்றும் சொல்லலாம். ஒரே வார்த்தையில் சொல்லவதனால் சரியான அணித் தெரிவு இல்லாவிட்டால் எப்படி அணி வெற்றியை பெற முடியும்? இந்தத் தொடரின் முன்னோட்டத்திலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. அதை விட்டிடலாம். இந்த அணி, இந்த தொடர் இந்த வீரர்கள் என்ன செய்தார்கள் என்றே இந்த கட்டுரை தொடரப்போகின்றது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. முதற் போட்டி சமநிலையில் நிறைவைடைந்தது. ஆகா இலங்கை அணி புதிய அணியாக மிக அபாரமாக ஆரம்பித்துள்ளது. தொடர் சிறப்பாக அமையப்போகின்றது என நம்பி இருக்க கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறியது நிலைமை. போகப் போகப் மோசமான தோல்விகளாக மாறி தொடரின் இறுதிப் போட்டி மோசமான தோல்வியை வழங்கியது. இங்கிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக பெற்ற சிறந்த வெற்றி என்ற பதிவையையும் செய்தது. இலங்கை அணி சார்பாக யாரை குறை கூறுவது என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுகின்றது. இலங்கை அணியை கட்டியெழுப்பும் நிலையில் உள்ளோம். இந்த நிலையில் தலைமைப் பொறுப்பை விட்டெறிந்து ஓட மாட்டேன் என தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் கூறியுள்ளார். 11 வீரர்களின் தெரிவு மோசமாக உள்ள நிலையில் இவர் மீது குறை கூறாமல் இருக்க முடியுமா? அல்லது இந்த 11 பேரை தெரிவு செய்யும் உரிமை இவரிடம் உண்டா இல்லையா என்பதும் அடுத்த சந்தேகம்.

டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. துடுப்பாட்டம் மோசமாக மாறிப்போனது. இங்கே துடுப்பாட்டம் ஓரளவு சிறப்பாக அமைந்தது. ஆனால் பந்துவீச்சு மிக மிக மோசமாக போனது. அதிகம் சகலதுறை வீரர்களை நம்பியமை இதற்கு  ஒரு காரணம். எந்த ஒரு அணியிலும் இவ்வளவு சகலதுறை வீரர்களை இணைக்க மாட்டார்கள். இரு வீரர்கள் இருப்பது சமநிலையை தரும். இந்த அணியை பார்த்தால் 11 பேரும் சகலதுறை வீரர்களாகவே தெரிகின்றனர். முதற் போட்டியில் இருந்து இறுதி போட்டி வரை பார்த்தால் எத்தனை பேர் அணியில் மாறியுள்ளனர் என்பது தெளிவாக தெரியும்.

உபுல் தரங்க முடித்து வைக்குமிடத்தில் களமிறங்கினார். சின்ன பிள்ளைக்கு கூட தெரியும் அந்த இடத்தில் அவரால் துடுப்பாட முடியாது என. பிறகு ஏன் அவர் அணியில்? அவருக்கு பதிலாக ஒரு பந்துவீச்சாளரை இணைத்து இருக்க முடியும்.

இலங்கை அணி சார்பாக விளையாடியவர்களின் பெறுதிகளை பார்க்கும் போது தெரியவரும். ஒரு தொடருக்காக மீள அழைக்கப்பட்ட பந்து வீச்சாளர் 5 போட்டிகளிலும் விக்கெட்டுகளை கைப்பற்றாமல் அணியில் தொடர்ந்ததை இந்த தொடரிலேயே பார்க்க முடியும். சீக்குகே பிரசன்னவே இந்த வாய்ய்ப்பை பெற்றவர். 35.2 ஓவர்கள் பந்துவீசி 234 ஓட்ட்ங்களை 6.62 என்ற ஓட்ட சராசரி வேகத்தில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றினார். சுராஜ் ரந்திவ் அணியில் இருக்கும் நிலையிலேயே இவருக்கு இவ்வாறான வாய்ப்பு.

சுரங்க லக்மால், நுவான் பிரதீப் ஆகியோர் தலா  ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி தங்களால் இயன்றதை செய்தனர். அஞ்சலோ மத்தியூஸ் பந்து வீசவில்லை. அயர்லாந்து போட்டியில் 5 விக்கெட்களை கைப்பற்றிய தசுன் ஷானக, இங்கிலாந்து தொடரின் போட்டிகளில் பந்து வீசியது வெறும் நான்கு ஓவர்கள் மட்டுமே. முதற் போட்டியில் 20 ஓட்டங்கள். பந்துவீச்சில் 3 ஓவர்கள். அடுத்த போட்டியில் அணியில் இல்லை. எல்லா வித போட்டிகளிலும் இவருக்கு நிலை இதுதான் என்று யோசிக்க அடுத்த போட்டிகளில் அணியில் வாய்ப்பை பெற்றார்.

முதல் ஆறு இடங்களில் மாற்றங்கள் இல்லை. சிறப்பான மீள் வருகையை காட்டிய குஷால் பெரேரா இங்கிலாந்து தொடரில் ஏமாற்றி விட்டார். தனுஷ்க குணதிலக்க இலங்கை அணிக்கு நல்ல ஆரம்ப துடுப்பாட்ட வீரர்  கிடைத்துளார். சகலதுறை வீரராக இருப்பது பலம்.  ஆனால் அடுத்த தொடரில் டில்ஷான் மீண்டும் அணிக்குள் வந்தால் இவரின் இடம் என்ன மூன்றாமிடம் வழங்கப்படுமா அல்லது அஞ்சலோ மத்தியூஸின் நம்பிக்கையை வென்றுள்ள குஷால் மென்டிஸ் மூன்றாமிடத்தை தக்க வைத்துக் கொள்வாரா என பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

குஷால் மென்டிஸ் பல வாய்ப்புகளுக்கு பின்னர் தன்னை நிரூபித்து தனக்கான இடத்தை பெற்றுள்ளார். அவுஸ்திரேலியா தொடரில் சரியான முறையில் வாய்ப்பை பாவித்து தன்னை நிரூபித்து காட்டினால் அணிக்குள் நிரந்தர இடம் பிடிப்பார். நான்காமிடம், ஐந்தாமிடம் ஆகியன தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோருக்கான இடம். இலங்கையின் இரண்டு நம்பிக்கை நட்சத்திரங்கள். அடுத்த ஆறாமிடம் மீண்டும் மிலிந்த சிரிவர்தனவுக்கு கிடைக்குமா? தசுன் ஷானகவின் இடம் என்ன? வாய்ப்புகள் கிடைக்குமா? அணியால் நீக்கப்படுவாரா? மித வேகப் பந்து வீச்சாளராக அணியில் தொடர்வது கஷ்டமே.   ஆக்ரோஷமான வீரராக அணியில் விளையாட வேண்டும் என்றே தோன்றுகின்றது. ஆனால் தனியே துடுப்பாட்ட வீரராக அணியில் இவரால் தொடர முடியுமா?

உபாதையடைந்துள்ள லசித் மலிங்க, தம்மிக்க பிரசாத், துஸ்மந்த சமீர ஆகியோர் மீண்டும் அணிக்குள் வந்தால் அணி பலம் பெறும். சுரங்க லக்மால், நுவான் பிரதீப் ஆகியோர் முழு நம்பிக்கை வைக்கக்கூடியவர்களாக இந்த தொடரில் தங்களை இனங்காட்டவில்லை. அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்துள்ளனர். சீக்குகே பிரசன்ன துடுப்பாட்ட வீரராகவே அணியில் தென்பட்டார். பந்துவீச்சில் எதனையும் செய்யவில்லை.

இந்த தொடர், உபாதை, மோசமான அணி தெரிவு, சரியான தலைமைத்துவம் இல்லாமை ஆகிய காரணங்களினால் தோல்வியை தந்துள்ளது. தோல்வியென்பது இங்கே முக்கியமில்லை. மோசமான பெறுபேறுகள் என்பதே இங்கே அதிகம் கவனஞ் செலுத்த வேண்டும். தெரிவுக்கு குழு தலைமைத்துவதில் அதிருப்தியடைந்துள்ளதாகவும், மாற்றம் தேவையென யோசிப்பதாகவும் செய்திகள் கசியும் நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் அதற்க்கான வாய்ப்புகள் இல்லை. அவரே தலைவராக தொடர்வார் எனக் கூறியுள்ளார். ஆக அடுத்த கட்ட உள் மோதல் ஆரம்பித்துள்ளது. ஆக இப்போதைக்கு அடுத்த கட்ட நகர்வு??? என்ன சொல்லவதென்று தெரியவில்லை.

இங்கிலாந்து அணிக்கு இந்த தொடர் நல்ல நம்பிக்கையை தந்துளளது. தொடர் வெற்றி. அடுத்தடுத்து வரும் தொடர்களை நம்பிக்கையாக எதிர்கொள்ள முடியும். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இவர்கள் வளர்ந்து வரும் அணி. தங்களுக்கு கீழுள்ள அணிகளை சொந்த நாட்டில் எதிர்கொள்வது அணிக்கான நம்பிககையையும், வீரர்களுக்கான நம்பிக்கையையும் தரும். இலங்கை அணியை அவ்வாறே எதிர்கொண்டனர். வெற்றி பெற்றுள்ளனர்.

அடுத்து பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளனர். முழுமையாக அவர்களை தயார்படுத்திக்கொள்ள இது நல்ல சிறந்த வாய்ப்பே. வீரர்கள் கூட இந்த வாய்ப்புகளை சரியாக பாவித்து தமக்கான இடங்களை மீள உறுதி செய்துள்ளனர். புதிய அணி. மிக விரைவில் தம்மை சிறப்பாக தயார் செய்து விட்டது. எந்த உலக கிண்ண தொடரில் இருந்து இங்கிலாந்து முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டதோ அதே தொடருக்கு பின்னரே இலங்கை அணியும் வீரர்களின் ஓய்வின் பின்னர் பின்னடவை சந்தித்தது. ஆனால் இரு அணிகளையும் பார்க்கும் போது நமது அணி எந்த நிலையில் உள்ளது என இலகுவாக உணர முடியும். 

இரண்டு சதங்களை அதிரடியாக அடித்து தன்னை நிரூபித்துள்ளார் ஜேஸன் றோய். இனி இவரின் இடம் உறுதி. அண்மைக்காலத்தில் மிக சிறப்பாக இவர் துடுப்பாடவில்லை. ஆனால் இந்த தொடர் அவருக்கு சிறப்பாக அமைந்துளளது.

அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேஸன் றோய் சிறந்த ஜோடியாக இந்த தொடரை நிறைவு செய்துளளது. ஒரு போட்டியினை இருவரும் சேர்ந்து நிறைவு செய்தனர். 254 ஓட்டங்களே இங்கிலாந்தின் மிகச் சிறந்த ஒரு நாள் சர்வதேசப் போட்டி இணைப்பாட்டமாகும். ஜோ ரூட், ஜொஸ் பட்லர் என அடுத்த இடங்களின் பலமான வீரர்களும் தங்கள் துடுப்பாட்ட திறமையை வெளிக்காட்டியுள்ளனர். அணியின் தலைவர் ஒய்ன் மோர்கன் எதிர்பார்த்தளவு சோபிக்கவிலை. ஜொனி பெயார்ஸ்டோ தனக்கான வாய்ப்புகளை தவறவிட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் உபாதையடைந்தமையினால் வாய்ப்பை பெற்ற கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக செயற்பட்டு சகலதுறை வீரராக அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார். மீண்டும் அணியில் இடம் பிடித்த லியாம் பிளங்கெட் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி மீண்டும் அணியில் தனக்கான இடத்தை பதிவு செய்துள்ளார். மொயின் அலி மாத்திரமே இங்கிலாந்து தொடரில் சோபிக்க தவறிய வீரர் என குறிப்பிட்டு கூறக்கூடிய வீரர். அடில் ரஷீட் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பாக கை கொடுத்து பந்து வீசியுள்ளார். 

ஜேஸன் றோய்                             5              5              316         162         105,33    119,69                  2              0

தினேஷ் சந்திமால்                       5              5               267        63           53,40     79,46                    0              4

அஞ்சலோ மத்தியூஸ்                  5              5               253        73           63,25     84,61                    0              3

ஜோஸ்  பட்லர்                             5             3              180         93           90,00      118,42                  0              2

ஜோ  ரூட்                                      5              4               171        93           57,00      93,95                    0              2

குஷால்  மென்டிஸ்                     5              5               169        77           33,80      90,37                    0              2

தனுஷ்க  குணதிலக                   5              5               142        62           28,40      100,00                  0              1

அலெக்ஸ்  ஹேல்ஸ்                 4             3               137        133 *     68,50      118,10                  1              0

கிறிஸ்  வோக்ஸ்                        5              2               112        95 *        -              110,89                  0              1

(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம், அரைச்சதம்)

டேவிட் வில்லி                       5              5              46.4        268         10           4/34       26.80     5.74

லியாம் பிளங்கெட்                  5              5              46.0        271         10           3/44       27.10     5.89

அடில் ரஷீட்                             5              5              49.0        228         6              2/34       38.00     4.65       

சுரங்க லக்மால்                        5              5              34.0        207         5              2/65       41.40     6.08       

கிறிஸ் வோக்ஸ்                     5              5              46.0        227         5              3/34       45.40     4.93       

நுவான் பிரதீப்                          5              4              31.0        232         5              2/64       46.40     7.48       

தனுஷ்க குணாதிலக               5              4              18.0        102         4              3/48       25.50     5.66       

 

(போட்டிகள், பந்து வீசிய போட்டிகள், ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .