2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சனி இரவில் சாதிக்கப்போகின்ற அணிகள் எவை?: காலிறுதிகள் பற்றிய பார்வை-2

A.P.Mathan   / 2014 ஜூலை 04 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய இரவுப் போட்டிகளுக்காக காத்திருக்கும் கால்பந்து ரசிகர்களே...
 
இன்றைய இரு ஆட்டங்களில் வெல்லும் அணிகள் ஒன்றையொன்று அரையிறுதியில் சந்திக்கும்.
 
இன்றைய முதலாவது போட்டியில் சந்திக்கும் இவ்விரு அணிகளும் முன்பும் அடிக்கடி சந்தித்துக்கொண்ட அணிகள்..
 
எனினும் இரு அணிகளுமே கிட்டத்தட்ட சமனான வெற்றி - தோல்விகளையே அடைந்துள்ளன. இறுதியாக சந்தித்த மூன்று போட்டிகளில் தலா ஒரு வெற்றியும் ஒரு சமநிலை முடிவும்.
 
இது ஜேர்மனி அணி தொடர்ச்சியாக விளையாடும் 9ஆவது உலகக்கிண்ண காலிறுதியாகும்.
 
ஜேர்மனியின் மிரோஸ்லாவ் க்லோசே இன்னும் ஒரு கோலைப் பெற்றால் பிரேசிலின் ரொனால்டோவின் அதிகூடிய கோல்கள் பெற்ற உலகக்கிண்ண சாதனையை முறியடிப்பார்.

 
1982 அரையிறுதியை மீண்டும் ஞாபகப்படுத்தும் அயலவர் யுத்தம் இது.
 
அடுத்த போட்டியில் இன்னொரு அயலவர் மோதல்...
 
அதிலும் இரண்டு 10ஆம் இலக்க சாகச ஹீரோக்களின் மோதலாக அமைய இருக்கிறது.
 
பிரேசிலின் நெய்மார் vs கொலம்பியாவின் ரோட்ரிகுவேஸ் ஆகியோர் தத்தம் அணிகளின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிப்பர் என நம்பப்படுகிறது. இருவருக்கிடையில் அப்படியான அரிய ஒற்றுமைகள்...
 
வயது, அணியும் சீருடை இலக்கம், அணியில் வகிக்கும் இடம், கோல்களுக்காக இவர்களது அணிகள் இவர்களை நம்பியிருப்பது என்று பலபல...
 
ஆனால், நெய்மாரின் உபாதை பற்றி இன்னமும் சந்தேகம் இருக்கிறது. எனினும் பிரேசில் அணியின் தகவல்களோ நெய்மார் பூரண குணத்துடன் இன்று விளையாடவுள்ளார் என்று தெரிவிக்கின்றன.
 
ரசிகர்களுக்குத் தேவை ஆரோக்கியமான போட்டியும், அரையிறுதிகளில் மோதுவதற்கு தகுதியான அணிகளும் தான். எனவே முதலாவது அரையிறுதிக்கான அணிகளில் எந்த இரு அணிகள் மோதவுள்ளன என்பதற்கான விடை நாளை அதிகாலை எமக்குத் தெரிந்திடும்...
 
இனி நாளை இடம்பெறவுள்ள அடுத்த இரு காலிறுதிகள் பற்றிப் பார்க்கலாம்.
 
3. ஆர்ஜென்டீனா எதிர் பெல்ஜியம் 
 
முதலாவது போட்டியைப் போலவே இந்தப் போட்டியும் மிக இறுக்கமானதும், விறுவிறுப்பானதுமாக அமையவுள்ளது நிச்சயம். ஆர்ஜென்டீன அணி பலமானது, பெரிய அணி, தென் அமெரிக்க அனுபவம் நிறைந்தது என்று நிறைய வாய்ப்புக்கள் இருந்தாலும், பெல்ஜியம் அணியின் வேகமான, உறுதியான விளையாட்டும் ஆர்ஜென்டீனாவைப் போலவே இந்த உலகக்கிண்ணத் தொடரில் இதுவரை விளையாடிய அத்தனை போட்டிகளையும் வென்ற இன்னொரு அணி.
 
இவ்விரு அணிகளுமே இறுதியாக இரண்டாம் சுற்றுப்போட்டிகளில் இறுதிவரை களைக்கும்வரை போராடியே இந்தச் சுற்றுக்கு வந்துள்ளன.
 
ஆர்ஜென்டீனாவில் மெஸ்ஸி போல பெல்ஜியத்தில் பெயர் குறிப்பிடக்கூடிய ஒரு சூப்பர் ஸ்டார் இல்லாவிட்டாலும், அவர்களது அணியின் தாரக மந்திரம் விடா முயற்சி.
 
லுக்காகு, அணித்தலைவர் கொம்பனி, டீ ப்ரய்ன், ஒரிகி, ஹசார்ட், கோல் காப்பாளர் கொர்ட்டோய்ஸ் என்று முன்னேறிவரும் வீரர்கள் ஆர்ஜென்டீன அணிக்கு சவாலாக விளங்கலாம்.
 
மறுபக்கம் உலகின் முன்னணி வீரர் மெஸ்ஸியின் தலைமையில் டி மரியா, சபலேட்டா, ஹிகுவெய்ன், மஸ்சரானோ, பலாஷியோ, லவேஸ்ஸி என்று அனுபவமும் ஆற்றலும் உள்ள நட்சத்திரப் பட்டாளம்.
 
ஆனால் களத்தில் விளையாடுகிற 22 பேரில் லியோனல் மெஸ்ஸியை மையமிட்டே இந்தப்போட்டி இடம்பெறவுள்ளதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
 
ஆர்ஜென்டீனா - பந்தை எப்படியாவது மெஸ்ஸிஇடம் சேர்ப்பிக்க வேண்டும். அவர் கோல் அடித்துக்கொள்வார்.
 
பெல்ஜியம் - மெஸ்ஸியை முற்றுகையிட்டுத் தடுக்கவேண்டும். சுவிட்ஸர்லாந்து இதே அணுகுமுறையைத் தான் முன்னைய போட்டியில் கையாண்டு ஓரளவு வெற்றியும் கண்டிருந்தது).
 
ஆனால் இரு அணிகளுமே இந்த யுக்திகளைத் தாம் கையாள்வர் என்று வெளியான தகவல்களை மறுத்துள்ளன.
 
இந்த ஒரு வீரரை மையப்படுத்திய போட்டி வியூகங்கள் மெஸ்ஸியை முன்னைய ஆர்ஜென்டீனிய சாதனை நாயகரான டீகோ மரடோனாவுடன் ஒப்பிடப்படும் ஒப்பீடுகள் சரியென நிரூபிக்கின்றன.
 
அதிலும் உலகக்கிண்ணத்தில் பெல்ஜியம் - ஆர்ஜென்டீன முன்னைய இரு மோதல்களும் பரபரப்பானவை. மரடோனாவை மையப்படுத்தி இடம்பெற்ற போட்டிகள்.
 
1982ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில், முதற்சுற்றுப் போட்டியொன்றில் அப்போதைய 21 வயது இளம்புயல் மரடோனாவை முற்றுகையிட்டு அவரை நகரவிடாது செய்து பெல்ஜியம் 1-0 என்று வெற்றி பெற்றது.

 
1986இல் மிக முக்கியமான அரையிறுதிப் போட்டி. அதே போல ஒரு மரடோனாவை மடக்கும் வியூகம்...
 
ஆனால் இம்முறை மரடோனா அத்தனை வீரர்களின் தடைகளையும் உடைத்து தனியாளாக இரு கோல்கள் அடித்து இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனாவை அழைத்துச் செல்கிறார். உலகக்கிண்ணத்தையும் வெல்கிறார்.
 
ஆர்ஜென்டீனா இதுவரை இறுதியாக வென்ற உலகக்கிண்ணம் இதுவே.
 
எனவே இம்முறையும் விதி இன்னொரு M வீரரை வைத்துக்கொண்டு விளையாடுகிறது என்று பலரும் கருதுகின்றனர்.
 
அதிலும் இன்னொரு சுவாரஸ்யம் மெஸ்ஸி இந்த உலகக்கிண்ணத்தில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலுமே போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது வென்றுள்ளார்.
 
இவர் அடிக்கப்போகும் புயல்வேக உதைகளைத் தடுக்கப்போகும் பெல்ஜியம் கோல் காப்பாளர் கோர்ட்டோய்ஸ் இதுவரை பெல்ஜிய அணிக்காக விளையாடியுள்ள 21 போட்டிகளிலுமே பெல்ஜியம் தோற்கவில்லை. இறுதியாக அமெரிக்க அணியின் தாக்குதலை சமாளித்தவிதம் அற்புதம்.
 
யாருடைய தொடர் அலை துண்டிக்கப்படப்போகிறது எனப் பார்க்கலாம்.
 
மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா கடந்த போட்டியில் கற்ற பாடத்தினால் இம்முறை கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்கும்.
 
4. நெதர்லாந்து எதிர் கோஸ்ட்டா ரிக்கா 
 
நெதர்லாந்து மூன்று தடவை உலகக்கிண்ண இறுதி வரை வந்தும் கிண்ணம் கிடைக்காமல் போன அதிர்ஷ்டக் குறைவு அணி. கடந்த உலகக்கிண்ணத்திலும் ஸ்பெய்ன் அணியிடம் தோற்று மனவுடைவுக்கு உள்ளானது.

 
தங்கள் கால்பந்து வரலாற்றில் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றைக் கொண்டிருக்கும் வேளை இம்முறையாவது முதலாவது உலகக்கிண்ணத்தை வசப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று உறுதியாக இருக்கிறது.
 
முதற்சுற்று முதல் தொடர்ச்ச்சியாக வெற்றிகளை மட்டுமே சுவைத்துள்ள 4 அணிகளில் ஒன்று.
 
வான் பேர்சி, ரொப்பன், வெஸ்லி ஸ்னைடர், டீ ஜோங் என உறுதியான நான்கு வீரர்களுடன் மேலும் உற்சாகமாகவும் ஒரு வித வெறியுடனும் விளையாடும் அணி.
 
கோஸ்ட்டா ரிக்கா Group of Death என்று அழைக்கப்படும் கடினமான பிரிவில் மூன்று முன்னாள் உலக சம்பியங்களுடன் போராடி,அவற்றுள் இரு அணிகளை தோற்கடித்து (இத்தாலி, உருகுவே) இங்கிலாந்துடன் சமநிலை முடிவைப் பெற்று, பின்னர் இரண்டாம் சுற்றில் கிரீஸ் அணியுடன் பெனால்டி வரை போராடி நம்பிக்கையுடன் வந்திருகிறது.
 
வரலாற்றில் முதல் தடவை முதற்சுற்றைத் தாண்டியுள்ள இந்த அணி இம்முறை வரலாற்றுத் தடத்தைப் பதித்துச் செல்லும் நம்பிக்கையோடு இருக்கிறது.
 
இதன் கோல் காப்பாளர் நவாஸ் அணியின் பெரும் தூண். இம்முறை தங்கக் கையுறை விருதுக்கும் போட்டியிடக் கூடியவர். முன்கள வீரரும் கோல் குவிப்பாளருமான பிரையன் ருயிஸ் அணியின் முக்கிய நட்சத்திரம். மற்றொருவர் கம்பல்.
 
ஆனால் நெதர்லாந்து அணியின் பலம் இவர்களுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரியதாகத் தெரிகிறது.
 
நெதர்லாந்து சிலவேளை கோஸ்ட்டா ரிக்காவை நசுக்கி விட்டு சென்று விடும்.
 
இதுவரை இவ்விரு அணிகளும் உலகக்கிண்ணப் போட்டிகளில் சந்தித்ததும் கிடையாது.
 
இன்னொரு சுவாரஸ்யமான விடயம், நெதர்லாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் இந்த உலகக்கிண்ணத்தோடு பதவி விலகி இங்கிலாந்தின் பிரபல கழகமான மன்செஸ்டர் யுனைட்டட்டின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
 
எனவே காலிறுதியில் பெரிதாகப் பலமில்லாத கோஸ்ட்டா ரிக்காவிடம் தோற்ற கறையோடு இங்கிலாந்து செல்ல ஆசைப்படமாட்டார்.
 
இதேபோல தான் நீண்ட காலம் நெதர்லாந்தின் ஆணிவேர்களாக விளங்கிவரும் மூத்த வீரர்களுக்கு இப்படியொரு தோல்வியுடன் விடைகொடுக்க விரும்பமாட்டார்கள்.
 
பலத்தையும் அனுபவத்தையும் பார்த்தால் நெதர்லாந்தின் செம்மஞ்சள் கொடி பறக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால், மத்திய அமெரிக்காவின் ஆச்சரிய அணி குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று.
 
நான்கு காலிறுதிகளின் பின்னர் அரையிறுதிகளில் மோதும் நான்கு வெற்றி அணிகளுடன் இதே பகுதியில் சந்திக்கலாம்.
 
அதுவரை விறுவிறுப்போடு ரசியுங்கள்.
 
A.R.V.லோஷன்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .