2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் தொடர்; மழையை வெல்லுமா இலங்கை?

A.P.Mathan   / 2012 நவம்பர் 16 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர் இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. ஒருநாள்ப் போட்டிகள் நடந்ததா என்று கேட்குமளவிற்கு மழை புகுந்து விளையாடி விட்டது. இரண்டு போட்டிகள் முழுமையாக கைவிடப்பட்டன. மற்றைய மூன்று போட்டிகளும் டக் வேர்த் லூயிஸ் முறையில் முடிவு காணப்பட்ட போட்டிகள். ஒருநாள்ப் போட்டிகளில் சுவாரசியம் குறைந்து வரும் நிலையில் இப்படியான சம்பவங்கள் இன்னும் குறைவடைய செய்துவிட்டன. இந்த நிலையில் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டி காலியில். கொஞ்சம் மழை பயம் குறைவு என்று சொன்னாலும் எதிர்வு கூறல்களின் படி முதல் இரு தினங்களும் மழை இல்லை என்றும் அடுத்த மூன்று தினங்களும் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய காலநிலை எதிர்வு கூற முடியாத நிலையில் எதையும் சொல்ல முடியாது. மழை பெய்யுமானால் இப்படி ஒரு தொடர் நடந்தது என்பது மறந்து போய்விடும். கொழும்பு போட்டி நடைபெறும் ஐந்து நாட்களுமே இடியுடன் கூடிய கடும் மழை என்ற எதிர்வு கூறல் வழங்கப்படுள்ளது. ஆக போட்டி நடைபெறும் 10 நாட்களில் 08 நாட்கள் மழைக்கான எதிர்வு கூறல் இருக்கும் நிலையில் போட்டிகள் என்னவாகும் என்ற நிலை நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருக்கின்றது.

அவுஸ்திரேலியா தொடர் அடுத்து அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொடர் முழுமையாக நடைபெறாவிட்டால் இலங்கை அணிக்கு அது பாதிப்பை தரும். இலங்கையில் கிரிக்கெட் என்றால் மழைப் பயம் தான் இப்போது அதிகம். இலங்கை மிக விரைவில் இந்த ஒரு காரணத்திற்காவது வடக்கு, கிழக்கு பக்கமாக ஒரு மைதானத்தை கட்டிவிட்டால் போட்டிகள் நடைபெறும், மழை இடையூறுகள் இன்றி.

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி பலமான அணி. இலங்கையில் வைத்து இலங்கை அணி நியூசிலாந்து அணியுடன் வெற்றிகளைப் பெற்றுள்ளது. இம்முறையும் இரண்டு டெஸ்ட் வெற்றிகள் இலங்கை அணிக்கு நிச்சயம் என்ற நிலையில் அது கை நழுவிப் போகும் வாய்ப்பே உள்ளது. 

இதுவரையில் இரு அணிகளும் 26 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து அணி 09 போட்டிகளிலும், இலங்கை அணி 07 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன. இரு அணிகளுக்குமிடையில் 12 தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் 04 தொடர்கள்  இலங்கை அணிக்கும், 04 தொடர்கள்  நியூசிலாந்து அணிக்கும் வெற்றிகளை தந்துள்ளது. 04 தொடர்கள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. தொடர்கள் என்று வரும் போது எல்லாமே சமநிலையில் உள்ளன. ஆக இந்த தொடர் முன்னிலை தரப் போகின்ற தொடராக அமையப் போகின்றதா? அல்லது தொடர்ந்தும் சமநிலையில் அமையப்போகின்றதா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

இலங்கையில் இரு அணிகளுக்கும் 06 தொடர்கள் இடம் பெற்றுள்ளன. முதல் தொடரில் நியூசிலாந்து அணி 83ஆம் ஆண்டு வெற்றிபெற்ற பின்னர் இன்னும் வெற்றி பெறவில்லை. 03 தொடர்கள் இலங்கை அணிக்கு வெற்றியாக அமைந்துள்ளன. 02 தொடர்கள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

இலங்கையில் இரு அணிகளுக்குமிடையில் 13 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 5 போட்டிகளில் இலங்கை அணியும், 03 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. 05 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. 1998ஆம் ஆண்டு இறுதியாக நியூசிலாந்து அணியானது இலங்கை அணியை இன்னிங்ஸால் வெற்றி பெற்றது. அதன் பின் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இறுதியா நடைபெற்ற 2009ஆம் ஆண்டு தொடரில் இரண்டு போட்டிகளிலுமே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அணி விபரம்

இலங்கை அணி
மஹேல ஜெயவர்தன, அஞ்சலோ மத்தியூஸ், குமார் சங்ககார, திலகரத்ண டில்ஷான், தரங்க பரனவித்தாறன, பிரசன்ன ஜெயவர்தன, திலான் சமரவீர, நுவான் குலசேகர, சுராஜ் ரன்டீவ், சானக்க வலகெதர, ரங்கன ஹேரத், தினேஷ் சந்திமால், சமின்ட எரங்க, தம்மிக்க பிரசாத், தரிந்து கெளசால்.

விளையாடும் அணி நிச்சயமாக முதல் 11 பேராக இருக்கப் போகின்றார்கள். ஆனால் வெளியே இருக்கும் அணி சரிதானா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கின்றது. இந்த அணியில் திசர பெரேரா இல்லை. அவுஸ்திரேலியா செல்லும் அணிக்கு நிச்சயம் அவர் தேவை. இந்த நிலையில் அவரை அணியால் நிறுத்துவது எந்த அளவில் சரியானது என்பது தெரியவில்லை. அவரின் வேகப் பந்து நிச்சயம் கை கொடுக்கும். துடுப்பாட்டம் மேலதிக பலம். நீண்டகாலமாக ஒதுக்கப்பட்ட நுவான் குலசேகர டெஸ்ட் அணிக்குள் வந்துவிட்டார். இப்போது திசர பெரேரா இல்லை. தெரிவுக் குழுவினர் என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை. ஒருநாள் அணியிலும் இதே நிலை இருந்தது. அகில தனஞ்செய அணிக்குள் இணைக்கப்பட வேண்டும். எதிர்கால அணிக்குள் அவரை கொண்டு வர வேண்டும் என்றால் குழுவுக்குள் வைத்து இப்போதே வளர்க்க வேண்டும். அதை இலங்கை அணி செய்ய தவறி வருகிறது. வேகப் பந்துவீச்சாளர்களில் சமிந்த எரங்க தெரிவு செய்யப்பட்டது சரி. மீண்டும் தம்மிக்க பிரசாத் ஏன் என்று தெரியவில்லை. தரிந்து கெளசால் 19 வயதிற்குட்பட்ட அணியில் இருந்து வந்து இருக்கிறார். சுழல்ப் பந்து வீச்சாளர். அப்படி என்றால் அகில தனன்ஜெயவின் நிலை? அணியில் இல்லையா? எத்தனை சுழல்ப் பந்து வீச்சாளர்களை இலங்கை அணி மாற்றப் போகின்றது. யாரிடமும் நிறைவு காணவில்லையா? வாய்ப்பே வழங்காமல் எப்படி நிறைவு காண முடியும்?

தரங்க பரனவித்தாரனவின் ஆரம்ப துடுப்பாட்ட நிலையும் இதே போலவே கேள்வியாக உள்ளது. அண்மைக்காலமாக மோசமான பெறுபேறுகளைக் கொண்டுள்ளார். இவர் இரண்டு சதங்களை மாத்திரமே இதுவரை பெற்றுள்ளார். அதிலும் கடைசியாக பெறப்பட்ட சதம் 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம். அதன் பின் 7 அரைச் சதங்கள் பெற்றுள்ளார். இந்த வருடத்தில் 178 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 3 டெஸ்ட் போட்டிகள் 6 இன்னிங்ஸில் இந்த ஓட்டங்களை பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்றுள்ளார். இன்னும் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இலங்கை அணி தயார் செய்யவில்லை என்பது உண்மையே. டில்ஷானின் வயது பற்றியும் டெஸ்ட் போட்டிகளின் அவரின் எதிர்காலம் பற்றியும் யோசிக்க வேண்டும் என்ற நிலையில் தெரிவுக் குழுவினர் அதை சரி செய்ய வேண்டும்.  

நியூ சிலாந்து அணி விபரம்
ரொஸ் ரெயிலர், பிரண்டன் மக்லம், மார்டின் கப்டில், டொட் அஸ்டில், ரென்ட் பெளட், டக் பிரஸ்வெல், டானியல் பிளின், ஜேம்ஸ் பிராங்க்ளின், கிறிஸ் மார்டின், ரொப் நிகோல், ஜீதான் பட்டேல், ரிம் சௌதி, ரூகர் வான் வைக், நெய்ல் வைக்னர், கேன் வில்லியம்சன்.

அண்மைக்காலமாக நியூசிலாந்து சார்பாக விளையாடி வரும் அணி இந்த அணிதான். ஆனால் முக்கிய பின்னடைவு டானியல் வெட்டோரி இல்லை என்பதே. அனுபவம் வாய்ந்த முக்கிய வீரர். பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் மிக சிறப்பாக கை கொடுப்பார். இலங்கையில் விளையாடிய அனுபவம் உண்டு. இவரின் இடம் டொட் அஸ்டில் என்ற புதிய வீரருக்கு வழங்கப்பட்டுள்ளது. செய்து காட்டுவாரா எனபதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். மற்றைய வீரர்கள் நல்ல வீரர்களே. ஆனால் போட்டிகளில் சொதப்பும் நியூசிலாந்தின் பிரச்சினை தொடர்ந்தே வருகின்றது என்பதே மிகப் பெரிய பிரச்சினை. என்ன சவாலை இலங்கை அணிக்கு நியூசிலாந்து அணிக்கு வழங்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

தரப்படுத்தல்
இரு அணிகளுக்கும் தரப்படுத்தல்கள் பற்றி அதிக கவலை கொள்ள தேவை இல்லை. வெற்றியோ தோல்வியோ சமநிலையோ இடங்களை மாற்றம் செய்யப்போவதில்லை. இலங்கை அணி ஆறாம் இடம். நியூசிலாந்து அணி எட்டாம் இடம். இலங்கை அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இரண்டு புள்ளிகளைப் பெறுவார்கள். தொடர் சமநிலை என்றால் இலங்கை அணி இரண்டு புள்ளிகளை இழக்கும். நியூசிலாந்து அணி 3 புள்ளிகளைப் பெறும். நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 8 புள்ளிகளைப் பெறுவார்கள். இலங்கை அணியினர் 7 புள்ளிகளை இழப்பார்கள். இலங்கை அணி போட்டியில் வெற்றி பெற்று தொடர் கைப்பற்றினால் 1 புள்ளி கிடைக்கும். நியூசிலந்து அணி 1 புள்ளியை இழக்கும். மறு புறமாக நியூசிலாந்து அணி 1 போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றினால் 6 புள்ளிகளைப் பெற இலங்கை அணி 5 புள்ளிகளை இழக்கும்.

தற்போதைய தரப்படுத்தல்
இலங்கை                              98
மேற்கிந்திய தீவுகள்         90
நியூசிலாந்து                         74

முதற்ப் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானம். 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை.
இரண்டாவது போட்டி கொழும்பு சரா ஓவல் மைதானம். 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை.
போட்டி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடை பெறும். (மழை குறுக்கீடுகள் இருந்தால் போட்டி நேரங்கள் மாறுபடும்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X