2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எட்டு அணிகளின் மோதல்: உலகக்கிண்ணத்தின் உச்சக்கட்டம்

A.P.Mathan   / 2014 ஜூலை 03 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகக்கிண்ண கால்பந்துத் தொடரின் 32 அணிகளில் 24 அணிகள் வெளியேற, சிறப்பான ஆற்றல்களைக் காட்டி வெற்றிகளைப் பெற்றுவரும் 8 அணிகள் மட்டும் வெற்றிக்கிண்ணத்தைக் குறிவைத்து நிற்கின்றன.
 
காலிறுதிப் போட்டிகளுக்காகக் காத்துள்ள எட்டு அணிகளில் நான்கு முன்னாள் உலக சம்பியன்கள். 
 
இந்த எட்டு நாடுகளில் 4 ஐரோப்பிய நாடுகள், மூன்று தென் அமெரிக்க நாடுகள் மற்றும் முதன்முறையாக முதற்சுற்றைத் தாண்டி அதிர்ச்சி அலைகளுடனும் அசைக்கமுடியாத நம்பிக்கையுடனும் காலிறுதிக்கு வந்துள்ள மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்கா.
 
இந்த எட்டு அணிகளும் முதற் சுற்றுப்போட்டிகளில் தத்தம் பிரிவுகளில் முதலிடம் பெற்ற அணிகள் என்பது நடந்து முடிந்த இரண்டாம் சுற்று ஆட்டங்களில் வெற்றிபெற்ற அத்தனை அணிகளுமே தகுதி வாய்ந்த அணிகள் என்பது தெளிவாகியுள்ளது.

 
முதற்சுற்று ஆட்டங்களில் வெளியேறிய 16 அணிகளில் நடப்பு உலக சம்பியன் ஸ்பெய்ன், முன்னாள் உலக சம்பியன்கள் இத்தாலி, இங்கிலாந்து, ரஷ்யா, குரோஷியா ஆகிய அணிகளுடன் ஆசிய அணிகளும் ஆபிரிக்க அணிகளில் கமேரூன் மற்றும் ஐவரி கோஸ்ட்டும் உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை, அதிர்ச்சியை வழங்கியிருந்தன.
 
கோஸ்ட்டா ரிக்கா, அல்ஜீரியா ஆகிய அணிகள் முதல் தடவையாக முதலாம் சுற்றைத் தாண்டி இரண்டாம் சுற்றுக்குள்ளும் பிரவேசித்திருந்தன.
 
மற்றும்படி அநேகமான எதிர்பார்த்த அணிகளுடன் இரண்டாம் சுற்று எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பையும் மிக நெருக்கமான போட்டித்தன்மையையும் வழங்கியிருந்தன.
 
8 போட்டிகளில் 2 போட்டிகள் பெனால்டி உதைகள் வரை சென்றன. 3 போட்டிகள் மேலதிக நேரத்தில் தீர்மானிக்கப்பட்டன. பிரேசில், ஆர்ஜென்டீனா, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற அத்தனை பலமான அணிகளுமே கடுமையான சோதனைகளை சந்தித்தே இப்போது காலிறுதிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.

 
இனி வரப்போகும் காலிறுதிப் போட்டிகள் மீதான எதிர்பார்ப்புக்கள் எகிற ஆரம்பித்துள்ளன.
 
உலகக்கிண்ணம் ஆரம்பிக்கும்போது இருந்ததைப்போலவே இன்னமும் பிரேசில் அணிக்கே கூடுதல் வாய்ப்புக்கள் இருப்பதாகப் பலரும் கருதுகிறார்கள்.
 
பந்தயக்காரர்களைப் பொறுத்தவரை ஆர்ஜென்டீனா, ஜேர்மனி அணிகள் அடுத்த முன்னணிப் போட்டியாளராகத் தெரிந்தாலும் இவற்றை விட நெதர்லாந்து அணி அண்மைக்காலமாக மிகப் பலம்பொருந்திய அணியாகத் தெரிகிறது.
 
பிரான்ஸ் அணியும் நெதர்லாந்தைப் போலவே தொடர்ச்சியாகப் பெறுபேறுகளைக் காட்டிவருகின்ற ஓர் அணி. 
 
நான் முன்னைய கட்டுரையில் சொல்லியிருந்ததைப் போல, Dark Horses பெல்ஜியம் அணியும் ஒவ்வொரு போட்டியிலும் பிரகாசித்த ஓர் அணி. மிக உற்சாகமாக உள்ளே வந்துள்ளது.
 
கொலொம்பிய, கோஸ்ட்டா ரிக்கா போன்ற அணிகளும் இம்முறை ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய அணிகளே.
 
எட்டு அணிகள் மோதவுள்ள 4 காலிறுதிகள் பற்றிப் பார்க்க முதல், முதல் இரு சுற்றுக்களின் சில சுவாரஷ்யங்களைப் பார்த்துவிடுவோம்.
 
ஆர்ஜென்டீனா, பெல்ஜியம், நெதர்லாந்து, கொலொம்பியா ஆகிய 4 அணிகள் மட்டுமே முதற் சுற்று ஆட்டங்களில் எல்லாப் போட்டிகளிலும் வென்ற அணிகள்.
 
9 அணிகளுக்கு எந்தவொரு வெற்றியும் கிட்டவில்லை எனினும், அவுஸ்திரேலியா, கமெரூன், ஹொண்டியூரஸ் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே எல்லாப் போட்டிகளிலும் தோற்று வெளியேறியவை.
 
தமது அணிக்கு எதிராக இடப்பட்ட own goal உடன் ஆரம்பித்த உலகக்கிண்ணத்தில் இதுவரை 5 own goalகள் போடப்பட்டுள்ளன.
 
நெதர்லாந்து அணியே அதிக கோல்களை இப்போதைக்குப் பெற்றுள்ளது. 12 கோல்கள்.

ஜேர்மனி

ஜேர்மனியின் முல்லர் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஷக்கிரி ஆகியோர் பெற்ற இரு ஹட் டிரிக்குகள் மற்றும் 10 தடவைகள் brace (ஒரே வீரர் ஒரு போட்டியில் இரு கோல்கள் பெறுதல்).
 
முதல் சுற்றுப்போட்டிகளின் ஹீரோக்களாக எதிர்பார்த்ததைப் போலவே ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பிரேசிலின் நெய்மார், நெதர்லாந்தின் அணித்தலைவர் ரொபின் வான் பேர்ஸி (ஸ்பெய்ன் அணிக்கெதிராக இவர் தலையால் போட்ட அபாரமான கோல் இந்த உலகக்கிண்ணத்தின் மறக்கமுடியாத அடையாளம்), ஜேர்மனியின் தோமஸ் முல்லர் ஆகியோர் பிரகாசித்தாலும், அதிக கோல்கள் பெற்று இப்போது அதிகம்பேர் தேடுகிற ஒருவராக மாறியிருக்கிறார் கொலொம்பிய அணியின் இளைய நட்சத்திரம் ஜேம்ஸ் ரோட்ரிகுவேஸ்.

ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி
 
இதேபோல அதிகம் அறியப்படாத அமெரிக்க, அல்ஜீரிய, கோஸ்ட்டா ரிக்கா அணிகளின் வீரர்கள் நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.
 
குறிப்பாக இந்த உலகக்கிண்ணத்தை கோல் காப்பாளர்களின் கிண்ணம் என்று சொன்னாலும் பொருத்தமே.
 
மெக்சிக்கோவின் ஓச்சா, அமெரிக்காவின் டிம் ஹோவார்ட், பெல்ஜியத்தின் கொர்ட்டோயிஸ், கோஸ்ட்டா ரிக்காவின் நவாஸ், பிரான்சின் லோரிஸ்,ஜெர்மனியின் நூயர் என்று பல கோல் காப்பாளர்கள் ஹீரோக்களாக மாறியுள்ளனர்.

அமெரிக்காவின் டிம் ஹோவார்ட்
 
இவர்களில் பலர் கோல்கள் மழையாகப் பொழிந்த இந்த உலகக்கிண்ணத்திலும் போட்டியின் போக்குகளை மாற்றியுள்ளனர். போட்டியின் சிறந்த வீரர்களாகவும் விருது பெற்றனர்.
 
இதுவரை நடந்த 56 போட்டிகளில் ஆர்ஜென்டீனாவின் அணித் தலைவர் மெஸ்ஸி அதிக தடவை (4) போட்டியின் சிறந்த வீரர் விருதுகளை வாங்கியுள்ளார். கொலோம்பியாவின் ரோட்ரிகுவெஸ் 3 தடவை.
 
ஹீரோக்கள் பலராக இருந்தாலும், ஒரேயொரு வில்லன் லூயிஸ் சுவாரெஸ். இத்தாலிய வீரரைக் கடித்தே உலகம் முழுதும் பேசப்பட்டுவிட்டார். உருகுவே இரண்டாம் சுற்றோடு வெளியேறியது இவருக்கான இன்னொரு தண்டனையாகப் பார்க்கப்படுகிறது.

லூயிஸ் சுவாரெஸ்
 
மறுபக்கம் கமெரூன் வீரர்கள் பணம் வாங்கிக்கொண்டு போட்டியில் தோற்கத் தயாராக இருந்ததாக வெளியான தகவல் இன்னொரு பரபரப்பு. ஆனால் சர்வதேசக் கால்பந்து சம்மேளனம் இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் எந்தவொரு சூதாட்டமும் இடம்பெறவில்லை என அறிவித்துள்ளது.
 
ஆனால் இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் உண்மையான வில்லன்களாகத் தெரிபவர்கள் சில போட்டிகளின் நடுவர்கள் தான்.
 
முதலாவது பிரேசில் - குரோஷியா போட்டி முதல் நடுவர்கள் அந்தந்தக் கணங்களில் விட்ட சில தவறுகள் (மஞ்சள் அட்டை முதல் பெனால்டி வழங்கியது/ வழங்காதது வரை) போட்டிகளின் முடிவுகளையே மாற்றிப் போட்டுள்ளன.
 
குறிப்பாக ரஷ்யா, குரோஷியா, ஈரான், மெக்சிக்கோ.
 
இந்த இரண்டாம் சுற்றுப் போட்டிகளுடன் இந்த 2014 உலகக்கிண்ணத்தில் இதுவரை 56 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
 
154 கோல்கள் 
10 சிவப்பு அட்டைகள் 
159 மஞ்சள் அட்டைகள் - முதல் அட்டையே ஆரம்பித்தது நெய்மாருடன். என்பவை முக்கியமான புள்ளி விபரங்கள்.
 
அதேபோல பிரேசிலியர்களின் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்களுடன் ஆரம்பித்த உலகக்கிண்ணம் வண்ணமயமாகக் களைகட்டி நிற்கிறது.

 
FIFAவின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி இதுவரை மைதானங்களை நிரப்பிய ரசிகர்களின் எண்ணிக்கை 4.5 மில்லியனைத் தாண்டுகிறது.
 
தொலைக்காட்சியில் உலகம் முழுதும் பார்ப்போரின் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு அதிகம்.
 
இனி இன்று முதல் ஆரம்பிக்கும் உச்சக்கட்டப் போட்டிகளில் இன்னும் எகிறப்போகிறது எல்லோரது இதயத் துடிப்புகளும்.
 
இரண்டாம் சுற்றுப்போட்டிகளில் எந்தவொரு போட்டியுமே சுவாரஸ்யமற்றுப் போகவில்லை. எல்லாப் போட்டிகளுமே இருக்கை நுனிகளுக்கு எம்மைக் கொண்டு சென்றவை.
 
அதிலும் பிரேசில் - சிலி போட்டி சில்லிட வைத்தது.
 
கோஸ்ட்டா ரிக்கா 5- 3 என கிரீஸை வென்ற போட்டி இன்னொரு பரபரப்பு.
 
ஆனால் மேலதிக நேரம் வரை முடிவில்லாமல் வந்த போட்டிகளும் பலருக்கு மாரடைப்பை வரவழைத்திருக்கும்.
 
ஆர்ஜென்டீனாவை மடக்கி வைத்து ஆட்டம் காட்டிய சுவிட்சர்லாந்து, ஜேர்மனிக்குபோக்குக் காட்டிய அல்ஜீரியா, பிரான்சைத் தடுமாற வைத்த நைஜீரியா, நெதர்லாந்து அணிக்கு இறுதி நிமிடம் வரை சவால் விட்ட மெக்சிக்கோ என்று எந்தவொரு போட்டியுமே மனதை விட்டு அகலாதவை.
 
இனி இன்றும் நாளையும் நடக்கவிருக்கும் நான்கு முக்கிய போட்டிகள்...
 
1. பிரான்ஸ் எதிர் ஜேர்மனி 
 
அண்டை நாடுகள்; பாரம்பரிய வைரிகள்; ஐரோப்பிய கால்பந்து வல்லரசுகள்.
 
ஜேர்மனி 3 தடவைகள் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது (இறுதியாக 1990இல்). பிரான்ஸ் 1998இல் உலக சாம்பியன்கள். இம்முறை இடம்பெறும் காலிறுதிகளில் அதிக பரபரப்புக்குரிய போட்டி இதுவாகத் தானிருக்கும்.
 
பென்சீமா - முல்லர் ஆகியோருக்கு இடையில் முன்களம், லோரிஸ் நூயர் ஆகியோருக்கிடையில் கோல் காப்பு என்பது ஒரு விட்டுக்கொடுக்காத யுத்தம் என்றால், இரு அணிகளின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பே உறுதியானவை.
 
98இல் சம்பியனான பிரான்சின் அணித்தலைவர் டீஸ்சாம்ப்ஸ் இப்போது பிரான்சின் பயிற்றுவிப்பாளர். ஜேர்மனியின் ஜோக்கிம் லோவும் ஒரு சாணக்கியர். இரு அணிகளின் பலப்பரீட்சை எமக்குப் பெரு விருந்தாக அமையலாம்.
 
அனுபவம், அழுத்தங்களைக் கடக்கும் ஆற்றல் என்பவற்றில் ஜேர்மனி கொஞ்சம் விஞ்சி நிற்பதாகத் தெரிகிறது.
 
2. பிரேசில் எதிர் கொலொம்பியா 
 
இரு தென்னமெரிக்க அணிகள்; இரண்டுமே மஞ்சள் சீருடையில் மின்னும் அணிகள். விட்டுக்கொடுக்காமல் விளையாடும் ஆற்றல்பெற்ற அணிகள். களம், காலநிலை என ஒத்த அம்சங்கள்.
 
பிரேசில் 2002ஆம் ஆண்டு முதல் தங்கள் சொந்த மண்ணில் எந்தவொரு போட்டியிலும் தோற்காத அணி. 40 போட்டிகளை தோற்காமல் கடந்து வருகிறது.
 
கொலம்பியா அண்மைக்காலத்தில் மிக வலுவான அணியாக முன்னேறி வரும் அணி. இறுதியாக 11 போட்டிகளில் தோற்கவில்லை.

ரோட்ரிகுவேஸ்
 
ரோட்ரிகுவேஸ் புதிய ஹீரோவாகத் தெரிகிறார். கோல் குவிக்கும் ஃபல்கொவை காயம் காரணமாக உலகக்கிண்ணத்துக்கு முன்னர் இழந்தும் கூட கொற்றாடோ,குயட்டராஸ் ஆகியோரோடு பலமான அணியாகத் தெரிகிறது.
 
100 போட்டிகளைத் தாண்டிய அனுபவமிக்க தலைவர் மரியோ யேப்பஸ் இன்னொரு நட்சத்திரம்.
 
கோல்கள் பெற்ற பின் ஆடும் இவர்களது உற்சாக நடனம் இந்த உலகக்கிண்ணப் போட்டிகளின் ஒரு பெரும் விருந்து.
 
ஆனால் சொந்த நாட்டு ரசிகர்களின் பின்புலத்தொடு களமிறங்கப் போகும் பிரேசில் அணி இப்போட்டியில் வெற்றிபெறக் கூடுதலான வாய்ப்புள்ள அணியாகத் தெரிகிறது.
 
நெய்மார், ஹல்க், அணித்தலைவர் தியாகோ சில்வா, கோல் காப்பாளர் ஜூலியோ செசார், டனி அல்வஸ், ஒஸ்கார் என்று நட்சத்திரங்கள் குவிந்துள்ள ஓர் அணி.
 
எனினும் இறுக்கமான போட்டிகளில் கொஞ்சம் தடுமாறுவதாகத் தெரிகிறது.
 
மெக்சிக்கோவுடன் சரிசமனான முடிவு. சிலி பெனால்டி வரை அழைத்துச் சென்றது.
 
மிக நெருக்கமான சிலி போட்டியின் பின்னர் பிரேசில் வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுதமையும் அதன் பின்னர் அவர்கள் மனோவியலாளர் ஒருவரை அழைத்து உளவள ஆலோசனைகளைப் பெற்றதும் அணியின் மனோபலத்தைப் பற்றி சந்தேகத்தை எழுப்புகிறது.
 
அத்துடன் பிரேசில் என்ற அந்த விஸ்வரூபம், உலகக்கிண்ணம் ஆரம்பித்தபோது இருந்த அளவுக்கு இப்போது இல்லை என்பதும் தெளிவு.
 
ஆனால் நெய்மார்போன்ற வீரர்களும், பிரேசிலின் ரசிகர்களின் ஆதரவும், இப்படியான சிக்கலான சந்தர்ப்பங்கள் பலவற்றைக் கண்டுள்ள அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர் பிலிப்பே ஸ்கொலாரியும் பிரேசிலுக்கு பெரும் ஊக்க மருந்துகள்.
 
கொலோம்பியாவின் ஆர்ஜென்டீனப் பயிற்றுவிப்பாளர் ஜோசே பெக்கர்மென் எதிர் ஸ்கொலாரி மோதல் மற்றொரு சுவாரஸ்ய பிரேசில் எதிர் ஆர்ஜென்டீன மோதலாக மாறும் என எதிர்பார்க்கலாம்.
 
பிரேசிலுக்கு கூடுதல் வாய்ப்புக்கள் இந்தப் போட்டியில்.
 
அடுத்த இரு சுவையான காலிறுதிப் போட்டிகள் பற்றி இதே பகுதியில் இன்றைய இரவுப் போட்டிகள் ஆரம்பமாகு முன்னர் இன்னும் சுவையான புதிய செய்திகளோடு பகிர்கிறேன்.
 
A.R.V.லோஷன்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .