2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இருபது வருடங்களின் பின் சாதிக்குமா பாகிஸ்தான் அணி?

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

1994இல் பாகிஸ்தானில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சலிம் மலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. அதன் பின்னர், டெஸ்ட் தொடர் ஒன்றில் அவுஸ்திரேலிய அணியை வெல்வது என்பது, பாகிஸ்தான் அணிக்கு வெறும் கனவாகவே இருந்துவந்தது. 
 
1999இல் ஆரம்பித்து 2010 வரையில், அவுஸ்திரேலியாவுடன் விளையாடிய 13 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணி, 2010 இல் லீட்ஸ் இல் இடம்பெற்ற போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றிபெற்று தொடர்ச்சியான தோல்விக்கு இடைவெளி விட்டது. அதனை அடுத்து நான்கு வருடங்கள் கழித்து, கடந்த 22ஆம் திகதி டுபாயில் ஆரம்பமான டெஸ்ட் போட்டியில் 221 ஓட்டங்களால் பெரியதொரு வெற்றியை அவுஸ்திரேலிய அணிக்கெதிராகப் பெற்றுக்கொண்டது.
 
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இன்று ஆரம்பமாகும் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றாலோ, வெற்றி-தோல்வியின்றி சமநிலையில் முடித்துக்கொண்டாலோ, 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் - 20 வருடங்கள் கழித்து அவுஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றிபெறும் வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்குக் கிட்டும். 
 
இரு அணிகளுமே சமபலம் கொண்டவையாக இருப்பினும், பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் வெளிப்படுத்திய திறமை அவர்களது மனநிலையை வலுப்படுத்தியிருக்கும் என்று நம்பலாம். 
 
டுபாய் ஆடுகளம் போல அபுதாபி ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இராது என்றே நம்பப்படுகிறது. அபுதாபி ஆடுகளம், பௌன்ஸர் பந்துகளை வீசுவதற்கு சாதகத் தன்மையைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வேகப் பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்த இரு அணிகளும் முயலக்கூடும். 
 
இன்று (30) ஆரம்பமாகும் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறுமாக இருந்தால், அது அணித்தலைவரான மிஸ்பா உல் ஹக்கிற்கும், 'பாகிஸ்தானின் வெற்றிகரமான டெஸ்ட் அணித்தலைவர்' என்ற பெருமையையும் பெற்றுத்தரும்.  
 
டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 13 வெற்றிகளை அணித்தலைவராகப் பெற்றுக்கொண்டுள்ள மிஸ்பா உல் ஹக், இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்றால் அணித்தலைவர்களாக இம்ரான் கான், ஜாவெட் மியான்டாட் ஆகியோர் பெற்றிருக்கும் 14 என்ற வெற்றி எண்ணிக்கையை சமன் செய்வார். ஆயினும், அவர்களிருவரும் முறையே தமது தலைமையில் 48ஆவது மற்றும் 34ஆவது போட்டிகளிலேயே இந்தச் சாதனையைப் புரிந்துள்ளமையால், 31 என்ற குறைந்த எண்ணிக்கைப் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றவர் என்ற சாதனை மிஸ்பா உல் ஹக் வசமாகும்.
 
இன்று போட்டி ஆரம்பமாகும் அபுதாபி மைதானத்தில் இதுவரை தான் விளையாடிய எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்தில் இடம்பெற்ற 5 டெஸ்ட் போட்டிகளில் 2 இல் வெற்றி, 3 போட்டிகளில் சமநிலை முடிவுகளை பெற்றுள்ளமையும் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைக்கு வலுச்சேர்க்கும் என்பது நிச்சயம். இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவையாக தென்படுகின்றபோதிலும் முதல் டெஸ்ட்போட்டியில் கிடைத்த மாபெரும் வெற்றி, பாகிஸ்தான் அணியை சற்று உயரத்தில் நிலைநிறுத்தியுள்ளது எனலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .