2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அலுவலக மேசையின் தூய்மையும் தொழிற்சார் வாழ்க்கையின் ஆரோக்கியமும்

Kogilavani   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜி.எம்.ரோகினி)

உயர் நிறுவனங்களில் தொழில்புரிபவர்களில்  பலர் மற்றவர்களை கவர்வதற்காகவும் மற்றவர்களது பார்வை தம் மீது விழவேண்டும் என்பதற்காகவும் தம்மை அலங்கரித்துக்கொள்ள கடும் பிரயத்தனம் செய்வதுண்டு.

ஆனால்,  இவர்களில் சிலர் தங்களை அழகாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைப்பது போல் தங்கள் தொழில்புரியும் சூழலையும் அழகாகவும் கவர்ச்சியாகவும் வைத்துக்கொள்வதற்கு நினைப்பதில்லை.

நாம் மாத்திரம் அழகாக இருந்துவிட்டால் போதாது. தொழில்புரியும் இடத்தில் நாம் இருக்கும் இடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

மனிதர்கள் எவ்வளவுதான் தம்மை மினுக்கிப் பளபளப்பாக்கிக் கொண்டிருந்தாலும் அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் அசுத்தமாகவும் அலங்கோலமாகவும் இருந்தால் யார்தான் மதிக்கப்போகிறார்கள்?

பொதுவாக கணினித் துறைசார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்களிடம் இந்நிலைமையை அதிகம் காணலாம். முழுநீளக்கை சேர்ட், கழுத்துப்பட்டியணிந்து அலுவலகங்களுக்கு வரும் ஆண்களில் சிலரும் சரி, கவர்ச்சிகரமான ஆடைகளுடன் மேக்அப் சகிதம் வரும் பெண்களில் சிலரும் சரி.  தங்கள் அமர்ந்து இருக்கும் இடம் என்னதான் அழுக்குகளும் தூசுகளும் நிறைந்துக்கிடந்தாலும் அதை தூய்மையாக்காமல் அப்படியே அமர்ந்து கீ போர்ட்டை தட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

அவர்களது கணினியில் பல மாத காலமாக சேர்ந்த தூசுகள் அப்படியே படிந்து காணப்படும். சிலரது கணினிகளில் உண்மையான நிறத்தையே,  அதன்மீது படிந்துள்ள தூசிகள் மாற்றிவிடும். என்னதான் அழுக்குகள் அவர்களது கைகளை அசுத்தப்படுத்தினாலும் அதனை பொருட்டாக எண்ணாமல் அவர்களது வேலைகளை செய்துக்கொண்டு போவார்கள்.

அதைவிட அவர்கள் இருக்கும் இடத்தில் வந்துகுவியும் குப்பைகளைக்கூட எடுத்து வீசாமல் அதிலே அமர்ந்து வேலைகளை தொடர்வதுதான் இதில் நகைப்புக்குரியதாக இருக்கிறது. சிலரின் மேசைகளில் கோப்புகளும் கடதாசிகளும் அலங்கோலமாக குவிந்துகிடக்கும்.

சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இந்த சூழல் பழக்கமாகிவிடக் கூடும். ஆனால் மற்றவர்களுக்கு குறிப்பாக புதிதாக வருபவர்களுக்கு இது அருவெறுப்பை ஏற்படுத்தும்.

இவற்றையெல்லம் விட வேடிக்கை என்னவென்றால் சிலர் அருந்தும் தேநீர் கோப்பைகளை சுத்தமாக சவர்காரமோ,  டிஷ் வாஷ் தூளையோ பயன்படுத்தி கழுவாமல் மேசைமீது வைத்திருப்பதுதான்.

அந்த கோப்பைகளில் தேநீரை குடித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு அடுத்தநாள் வந்து கழுவுபவர்களாகவும் எம்மில் பலர் இருக்கின்றார்கள். ஒரு வாரத்திற்கு பின் வந்து கழுவுபவர்களும் இருக்கின்றார்கள்.

யாரேனும் சக ஊழியரோ விருந்தினரோ அவர்களது கோப்பைகளை இக்கட்டானதொரு சூழலில பயன்படுத்துவதற்காக எடுத்தால் அது இருக்கும் 'அழகை' பார்த்தே வாந்தி எடுத்துவிடுவார்கள்.

சிலர் அலுவலக மேசையையும் உபகரணங்களையும் தூய்மையாக்காமல் இருப்பதற்கு
அவர்களது பதவி ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. படியும் தூசுகளை தாமே துடைத்தால் அது தமக்கு கௌரவக்குறைவு என சிலர் கருதுகின்றார்கள். அதற்காகதான் வேலையாட்கள் இருக்கின்றார்களே என்று பதில் கூறுபவர்களும் இருக்கின்றார்கள்.

எனினும் நாம் பணியாற்றும் சூழலை தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.

கணினிகள் படியும் தூசுகளை சுத்தம் செய்யாததால் அது உடலியல் நோய்களை ஏற்படுத்துகின்றது. பொதுவாகவே தூசுகள் ஆஸ்துமாவை ஏற்படுத்திவிடுகின்றன. அதைவிட இந்த தூசுகள் அதிகமாக கணினிகளில் படிவதால் அது கணினியின் செயற்பாட்டையும் பாதிக்கிறது.

அத்துடன் மேசையின் மீதும்   ட்ரோயர்களிலும் தேவையற்ற ஆவணங்கள் கடதாசிகள்,  ஏனைய பொருட்களை அப்புறப்படுத்திவிட்டால் எமக்குத் தேவையான பொருட்களை விரைவாக தேடி எடுத்துக்கொள்ள முடியும். இதனால் நேரத்தையும் சக்தியையும் மீதப்படுத்தலாம்.

சுத்தமான சூழல் நமது வேலையை தடங்களின்றி புத்துணர்வுடன் செய்வதற்கு உதவும். அதைவிட எமது இடத்தை வைத்து எம்மை மதிப்பிடுபவர்களும் இருக்கின்றார்கள்

எனவே தூய்மையான அழகான அலுவக சூழல் எமது உடல் ஆரோக்கியத்திற்கு மாத்திரமல்ல, தொழிற்சார் வாழ்க்கையின் ஆரோக்கியத்துக்கும் உதவியாக அமையும் என்பதை மறந்துவிடக்கூடாது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .