2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் தொடர்பில்இனி வாய்திறக்கமாட்டேன்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜனவரி 29 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பில், இனி எங்குமே வாய் திறக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இப்பிரதிநிதித்துவம் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதியால், நான் பட்ட அவஸ்தையும் சங்கடமும் வேறு எதிலும் காணவில்லை என்றும் தெரிவித்தார்.

35 வருடங்களின், பின்னர் அட்டாளைச்சேனை மண்ணுக்கு, நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸால் வழங்குவதற்கான அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளமையைடுத்து 'மண்ணுக்கு மகுடம் சூடும் மகிழ்ச்சிப் பெருவிழா' எனும் தொனிப்பொருளிலான நிகழ்ச்சி, அட்டாளைச்சேனையில் நேற்று (28) இரவு நடைபெற்றது.

இதில் கலந்​துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளமையையடுத்தே, இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இந்த அரசாங்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சினதும் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக, முஸ்லிம் காங்கிரஸ் இருந்து வருகின்றது. 

“இந்நிலையில், எமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது, மிகவும் பெறுமதி வாய்ந்ததொன்றாகவே காணப்படுகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தை, சமூகத்துக்காக பயன்படுத்த வேண்டியது, எமது தார்மீகக் கடமையாகும்.

 “நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.சல்மானின் இராஜினாமாவையடுத்து, அவரின் பதவியை, அட்டாளைச்சேனைக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சராகவிருந்த ஏ.எல்.எம். நஸீருக்கு, கட்சியின் தலைமை சிபாரிசு செய்துள்ளது. எதிர்வரும் 08ஆம் திகதி, புதிய நாடாளுமன்ற உறுப்பினராக, நஸீர் செயற்படவுள்ளார்.

“கட்சியில் ஆரம்பம் முதல் இன்றுவரை பல முக்கியஸ்தர்கள் இருந்து வரும் நிலையில், நஸீருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருப்பது அவருக்குக் கிடைத்த அதிஷ்டமாகவே நான் கருதுகின்றேன்” என்று அவர் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .