2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அஷ்ரப்நகர் மக்கள் வீதிமறியல் போராட்டம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜனவரி 29 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தின் பிரதான வீதிகளினூடான கனரக வாகனங்களின் போக்குவரத்தால், அவ்வீதிகள் சேதமடைந்து வருவதைக் கண்டித்து, அப்பிரதேச மக்கள், நேற்று (28) வீதிமறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

எல்லைக் கிராமங்களில் ஒன்றான அஷ்ரப் நகர், தீகவாவியை அண்டிய பிரதேசமாவதுடன், பழமை வாய்ந்த அக்கிராமத்தில் சுமார் 90 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.  

இக்கிராமத்தின் பிரதான வீதி, அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியின் ஒலுவில் சந்தியிலிருந்து, தீகவாபி ஊடாக அம்பாறை நகரைச் சென்றடைகின்றது. 

அதிகளவிலான வனாந்திரத்தையும் மண்வளத்துடன் கூடிய மேட்டு நிலத்தையும் கொண்ட இக்கிராமத்தில் விவசாயம், சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் மிருகவளர்ப்பு போன்ற துறைகளில் அப்பிரதேச மக்கள், தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

இப்பிரதேசத்தில் கனரக வாகனங்களின் மூலமாக ஆற்றுமண் மற்றும் கிறவள் மண், மலையிலிருந்து உடைத்தெடுக்கப்பட்ட கற்பாறைகள் போன்றன நாளாந்தம் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களின் மூலமாகக் கொண்டு செல்லப்படுவதால், அவ்வீதிகள் உடைந்து குன்றும் குழியுமாகப் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கிராம மக்கள் தெரிவித்தனர். 

மக்கள், நாளாந்தம் வைத்தியசாலைக்காகவும், வேறு அன்றாட தேவைகள், காரியாலய தேவைகள் என்பனவற்றுக்காகவும் சுமார் 20 கிலோமீற்றர் தூரம் சைக்கிள்களிலும், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களிலும் இப்பாதையூடாகவே சென்று வருகின்றனர்.  

நேரம் வீண்விரமும் அதிகளவலான பிரயாணச் செலவீனங்களுக்கும், ஆபத்துகளும், சுகாதார அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே, இவ்வீதியை முறையாக விஸ்தரித்து புனரமைத்துத் தருவதுடன், கனரக வாகனங்களின் போக்குவரத்தையும் மட்டுப்படுத்தப்பட்டளவில் மேற்கொள்வதற்கு, உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X