2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வடகொரியாவின் அறிவிப்பை ட்ரம்ப் வரவேற்பு

Editorial   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அணுவாயுதச் சோதனைகளையும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளையும் இனிமேல் மேற்கொள்ளப் போவதில்லையென, வடகொரியா விடுத்துள்ள அறிவிப்பை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் இடையிலான சந்திப்பு, அடுத்த மாதமோ அல்லது ஜூன் மாத ஆரம்பத்திலோ இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் வடகொரியாவால் விடுவிக்கப்பட்டுள்ள இவ்வறிவிப்பு, முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

வடகொரியாவால் விடுக்கப்பட்ட அறிவிப்பின்படி, அணுவாயுதச் சோதனைகளையும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளையும் இனிமேல் மேற்கொள்ளப் போவதில்லை என்பதற்கு மேலதிகமாக, தமது நாட்டில் காணப்பட்ட அணுவாயுதச் சோதனைத் தளமொன்றையும் அழிப்பதாகவும் குறிப்பிட்டது.

எனினும் இவ்வறிவிப்பு, வடகொரியாவிடம் தற்போது காணப்படும் அணுவாயுதங்களை அழிப்பதற்கு அந்நாடு சம்மதிக்கிறது என வெளிப்படுத்தவில்லை. மாறாக, தமக்குத் தேவையான அணுவாயுதங்களை உற்பத்தி செய்து விட்டதாகவும், தமக்குத் தற்போது சோதனைகள் தேவையில்லை என்றுமே, வடகொரியா குறிப்பிட்டது.

வடகொரியாவுடனான இராஜதந்திர ரீதியிலான தீர்வொன்றைக் காணுவதற்கு, அண்மைக்காலமாக முயன்றுவரும் ஐ.அமெரிக்க ஜனாதிபதி, இவ்வறிவிப்பை உடனடியாகவே வரவேற்றார்.

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், இதற்கு முன்னர் அவ்வப்போது இடம்பெற்ற நிலையில், புதிய சோதனைகளை நடத்தப் போவதில்லை என, வடகொரியா உறுதியளித்தது என, தென்கொரிய அதிகாரிகள், முன்னர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இப்போது தான், வடகொரியாவால் இவ்வறிவிப்பு நேரடியாக விடுக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இவ்வறிவிப்பு, சர்வதேச அளவில் வரவேற்புக் காணப்பட்டாலும், இவ்வறிவிப்புப் போதாது என்ற உணர்வே, பொதுவாகக் காணப்பட்டது.

குறிப்பாக, இவ்வறிவிப்பை வரவேற்ப ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, முக்கியமான முன்னேற்றம் என இதை வரவேற்றார். எனினும், அணுவாயுதங்களையும் பேரழிவு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் அழிக்க வேண்டிய தேவை உள்ளது என வலியுறுத்தினார்.

இதில் முக்கியமாக, வடகொரியாவின் அறிவிப்புப் படி, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் சோதனைகளே நடத்தப்பட மாட்டாது என்றே கூறப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு அருகிலுள்ள ஜப்பானை, வடகொரியாவிலிருந்து குறுந்தூர, மத்தியதூர ஏவுகணைகள் மூலமும் தாக்க முடியுமென்ற நிலையில், அவை தொடர்பிலும், ஜப்பானின் கவனம் காணப்படுகிறது.

ஜப்பானின் நிலைப்பாட்டையே, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளும் வெளிப்படுத்தியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .