2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’காஷொக்கியை சவூதிக்கு கொண்டுவர இளவரசர் முயன்றார்’

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜினியாவிலுள்ள தமது கட்டுரையாளரான ஜமால் காஷொக்கியின் வீட்டிலிருந்து அவரை சவூதி அரேபியாவுக்கு கொண்டு வருவதற்கானதும் பின்னர் அவரைத் தடுத்து வைப்பதற்குமான நடவடிக்கையொன்றுக்கு சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் உத்தரவிட்டதாக குறித்த திட்டத்தைக் கலந்துரையாடிய சவூதி அரேபிய அதிகாரிகளை ஐக்கிய அமெரிக்க புலனாய்வு இடைமறித்ததில் தெரியவந்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி துணைத் தூதரகத்துக்குள் கடந்த வாரம் உள்நுழைந்த பின்னர் காஷொக்கி காணாமல் போயுள்ளமைக்கு சவூதி அரசாங்கம் தொடர்புபடுகின்றது எனக் காண்பிக்கும் இன்னொரு ஆதாரமாக மேற்குறித்த விடயம் உள்ளதென குறித்த விடயத்தில் பரிச்சயமான ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என வொஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.

சவூதி அரசாங்கத்தையும் குறிப்பாக மொஹமட் பின் சல்மானையும் விமர்சிக்கும் காஷொக்கிக்காக காத்திருந்த சவூதி பாதுகாப்பு அணியொன்று அவரைக் கொன்றுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மொஹமட் பின் சல்மானுக்கு நெருங்கிய சவூதி அதிகாரிகள் கடந்த நான்கு மாதங்களாக காஷொக்கியை அழைத்து, சவூதிக்கு திரும்பினால் அவருக்கு பாதுகாப்பும் அரசாங்கத்தில் உயர் மட்டப் பதவியும் வழங்குவதாகத் தெரிவித்ததாக காஷொக்கியின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த விடயத்தில் நம்பிக்கையற்றிருந்த காஷொக்கி, தன்னைத் துன்புறுத்தாது என்ற உறுதிமொழியை சவூதி அரசாங்கம் நிறைவேற்றாதென நண்பரொருவருக்கு கூறியிருந்துள்ளார்.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் றொபேர்ட் பல்லடினோ, புலனாய்வு விடயங்களில் தன்னால் கருத்துக் கூற முடியாதென்றபோதும் காஷொக்கி காணாமல் போவது பற்றி முன்னரே ஐக்கிய அமெரிக்காவுக்குத் தெரியாதென்று தான் நிச்சயமாகக் கூறமுடியும் என்று கூறியுள்ளார். எனினும் காஷொக்கி சிக்கலிலுள்ளார் என்ற தகவலை ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் கொண்டிருந்தால், காஷொக்கியை எச்சரிக்க வேண்டிய கடமையை ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் கொண்டிருக்கின்றதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பல்லடினோ பதிலளித்திருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X