2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கொரியாவில் போரென்பது நிச்சயம்’

Editorial   / 2017 டிசெம்பர் 08 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் போர்ப் பயிற்சிகளாலும், வடகொரியா மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஐக்கிய அமெரிக்கா எச்சரித்துவரும் நிலையிலும், கொரியத் தீபகற்பத்தில் போர் ஏற்படுவது என்பது, உறுதிப்படுத்தப்பட்ட ஒரு விடயமாக மாறிவிட்டது என, வடகொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு எச்சரித்துள்ளது.

அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது, ஐக்கிய அமெரிக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் “முரண்பாட்டுடனான போர்க் கூவல்கள்”, கொரியத் தீபகற்பத்தை, போரின் விளிம்பில் தள்ளுகின்றன என்று தெரிவித்தார்.

“எஞ்சியிருக்கும் கேள்வி என்னவென்றால்: எப்போது போர் ஏற்படும்?”, என்று தெரிவித்த அவர், “போருக்கு நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அதிலிருந்து மறைந்துவிட மாட்டோம்” என்று தெரிவித்தார்.

வடகொரியா, கடந்த வாரத்தில், தமது மிகவும் மேம்பட்ட ஏவுகணையொன்றைச் சோதித்திருந்தது. இது, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை என அறிவிக்கப்பட்டிருந்து. இதைத் தொடர்ந்து, வடகொரியா மீதான எதிர்ப்புகள் அதிகரித்திருந்தது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருந்த வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மக்மாஸ்டர், வடகொரியாவுடனான போருக்கான வாய்ப்புகள், அதிகரித்து வருகின்றன எனத் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, கருத்துத் தெரிவித்திருந்த குடியரசுக் கட்சியின் செனட்டரான லின்ட்ஸி கிரஹாம், தேவையான போது, ஐக்கிய அமெரிக்காவே முதலில் தாக்குதல் நடத்த வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

இவற்றின் பின்னணியிலேயே, வடகொரியாவின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X