2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மைக்கல் ஃபிளினுக்கு இலஞ்சமா? நிராகரிக்கிறது துருக்கி

Editorial   / 2017 நவம்பர் 14 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவானின் அரசியல் எதிரியொருவரை, ஐக்கிய அமெரிக்காவிலிருந்து துருக்கிக்கு நாடு கடத்துவதற்கு, பல மில்லியன்கணக்கான டொலர்களை, வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசராக இருந்த மைக்கல் ஃபிளினுக்கு வழங்க முன்வந்தது என்ற குற்றச்சாட்டை, துருக்கி நிராகரித்துள்ளது.

துருக்கியில் கடந்தாண்டு இடம்பெற்ற இராணுவப் புரட்சி முயற்சிகளின் பின்னால், மதத்தலைவரான ஃபெதுல்லா குலென் காணப்படுகிறார் என, துருக்கி குற்றஞ்சாட்டுகிறது. அவர், 1999ஆம் ஆண்டு முதல் ஐ.அமெரிக்காவிலேயே வசித்து வருகிறார்.

இந்நிலையில், குலெனை, துருக்கிக்கு நாடு கடத்துவதற்கு, ஃபிளின் உதவியை துருக்கி நாடியது என்றும், அதற்காகப் பெருந்தொகைப் பணம் வழங்க முன்வந்தது என்றும் அறிக்கையிட்டுள்ள ஐ.அமெரிக்க ஊடகங்கள், அதுகுறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள, வொஷிங்டனிலுள்ள துருக்கியத் தூதரகம், “அவரது (குலெனது) நாடு கடத்தலுக்கு, சட்டத்துக்குப் புறம்பான வழிகளைத் துருக்கி நாடுமென்பது, முழுவதும் பொய்யானது என்பதோடு, நகைப்புக்கிடமானதும் அடிப்படையற்றதுமாகும்” என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் கருத்துத் தரிவித்த துருக்கியின் பிரதமர் பினாலி யில்டிரிம், “மைக்கல் ஃபிளினுடன் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஐ.அமெரிக்க அரசாங்கத்துடனேயே நாங்கள் இணைந்து செயற்படுகிறோம்” என்று தெரிவித்தார்.

ஐ.அமெரிக்க ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்தியின்படி, தேசிய பாதுகாப்பு ஆலோசராக இருந்த வேளையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என்றும், 15 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுவதற்குச் சம்மதிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .