2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

'தென்கிழக்கு பல்கலை பட்டமளிப்பு விழா; ரூ.24 மில்லியனை சேமிக்க முடிந்துள்ளது'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 15 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல்.மப்றூக்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதால், பல்கலைக்கழகத்தின் சுமார் 24 மில்லியன் ரூபாய் நிதியைச் சேமிக்க முடிந்துள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்தார்.

அதேவேளை, சௌகரியமானதும் உயர்தரமானதுமான ஓர் இடத்தில் மேற்படி பட்டமளிப்பு விழாவை நடத்துவதையே மாணவர்கள் விரும்புவதாகவும் அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விடயமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பட்டமளிப்பு விழாவை பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துமாறு தம்மை வெளிக்காட்டிக்கொள்ளாத சிலர் ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், குறித்த பட்டமளிப்பு விழாவை கொழும்பில் நடத்துவதற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் வகையில் உபவேந்தர் நாஜிம், ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
'தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினை எதிர்வரும் 20ஆம் திகதி நடத்துகின்றோம். இந்த விழாவினை பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துவதற்குரிய மண்டபம் எம்மிடம் இல்லை. இந்த நிலையில், இங்குள்ள பரீட்சை மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவினை நடத்தலாமா என யோசித்தபோது அதிலும் பாரிய சிக்கல்கள் இருந்தன.

அந்தப் பரீட்சை மண்டபம் பகல் வேளைகளில் மிகவும் வெப்பம் நிறைந்ததாகக் காணப்படும். இதன் காரணமாக, அந்த மண்டபத்தில் தமக்கான பரீட்சைகளை நடத்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கும் கடிதமொன்றினை எழுதி, அதில் சுமார் 500 மாணவர்கள் கையொப்பமிட்டு சில மாதங்களுக்கு முன்னர் எமக்கு வழங்கியிருந்தனர். அவ்வாறாதொரு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவினை நடத்த முடியாது. அதையும் தாண்டி அந்த மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவினை நடத்துவதாயின், அங்கு பாரிய குளிரூட்டிகளை நிறுவ வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். ஒரு பட்டமளிப்பு விழா நடைபெறுவதற்கான மண்டபமாக அதை மாற்றியமைக்க வேண்டும்.  

எனவே, அவற்றினையெல்லாம் செய்து முடித்து - தென்கிழக்குப் பல்லைக்கழகத்திலே மேற்படி பட்டமளிப்பு விழாவினை நடத்துவதற்கான செலவு மதிப்பீட்டு அறிக்கை ஒன்றினை தயாரித்து வழங்குமாறு, அதற்குப் பொறுப்பான உத்தியோகத்தரைப் பணித்தோம். அதற்கிணங்க, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் எமது பட்டமளிப்பு விழாவினை நடத்துவதற்கு 28.4 மில்லியன் ரூபாவினை செலவிட வேண்டி வரும் என்று அந்த உத்தியோகத்தர் தனது மதிப்பீட்டு அறிக்கையினை தயாரித்து வழங்கினார்.

இந்த நிலையில், இதே பட்டமளிப்பு விழாவினை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதாயின் எமக்கு 4.5 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவாகும் என அறிந்து கொண்டோம். அதனால், எமது பட்டமளிப்பு விழாவினை கொழும்பிலேயே நடத்தத் தீர்மானித்துள்ளோம். இதன் காரணமாக, பல்கலைக்கழகத்தின் 23.9 மில்லியன் ரூபாவினை எம்மால் சேமிக்க முடிந்துள்ளது.

இதேவேளை, மேற்படி விழாவில் 1359 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இவர்களில் 45 வீதமானவர்கள் மட்டுமே அம்பாறை மாவட்டத்தவர்கள். ஏனைய மாணவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். எனவே, பட்டமளிப்பு விழாவின் பொருட்டு, கொழும்புக்கு வந்து செல்வதுதான் பெரும்பாலானோருக்கு இலகுவானதாக இருக்கும். மட்டுமன்றி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டம் போன்ற பிரபல்யமான, சௌகரியமான, பிரமாண்டமானதொரு இடத்தில் தமது பட்டமளிப்பு விழா நடைபெறுவதையே மாணவர்களும் விரும்புகின்றனர்' என்றார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மேற்படி பட்டமளிப்பு விழாவானது, எதிர்வரும் 20 ஆம் திகதி மூன்று அமர்வுகளாக இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். முதலாவது அமர்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோவும் மூன்றாவது அமர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பி.எஸ்.எம்.குணரத்னவும் பிரதம அதிதிகளாக கலந்து கொள்கின்றனர்.

இதேவேளை, இந்த விழாவின் முதலாவது அமர்வில் 551 மாணவர்கள் தமக்கான பட்டங்களைப் பெறவுள்ளனர். அதேபோன்று இரண்டாவது அமர்வில் 561 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. மூன்றாவது அமர்வில் வெளிவாரியாக தமது பட்டப்படிப்பை நிறைவு செய்த 243 மாணவர்களுக்கான பட்டமளிப்பு இடம்பெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--