’தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குக’

கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்களாகக் கடமையாற்றும் 102 பேரையும், நிரந்தர நியமனத்துக்குள் அவசரமாக உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையில் இன்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரை நிகழ்த்துகையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்காலிக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக, தமது சபையின் வருமானத்திலிருந்து 28 இலட்சம் ரூபாய், மாதாந்தம் செலவாகிறது எனக் குறிப்பிட்ட அவர், இது, தமது சபைக்குப் பெரும் சுமையாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாக, அவர்களுக்கான நிரந்தர நியமனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், அது சாத்தியமற்றுப் போனால், அவர்களின் சேவைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

23 வட்டாரங்களைக் கொண்ட, கல்முனை மாநகர சபைப் பிரிவில், சுமார் 120,000 மக்கள் வாழ்கின்ற நிலையில், திண்மக் கழிவகற்றலே, தமது பிரதான சவாலாக இருப்பதாக, அவர் குறிப்பிட்டார்.

“இதே மக்கள் தொகையைக் கொண்ட கண்டி மாநகர சபையில், திண்மக்கழிவகற்றல் பணியை மேற்கொள்வதற்கு, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், எமது மாநகர சபையில் 65 தொழிலாளர்கள் மட்டுமே, அப்பணியை முன்னெடுக்கின்றனர்.

“அதேபோன்று கண்டி மாநகர சபையில், திண்மக்கழிவகற்றல் சேவைக்கு 90

வாகனங்கள் உள்ளன. ஆனால், எமது சபையில் 12 வாகனங்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுகின்றன" என்று குறிப்பிட்டார்.

திண்மக்கழிவகற்றலுக்கான ஆளணியும் வாகனங்களும் அதிகரிக்கப்படுமாயின், திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு, ஓரளவு தீர்வுகாண முடியுமென நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காக, உள்ளூராட்சி அமைச்சினதும் மாகாண சபையினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல், மாநகர சபைக்குக கிடைக்கும் வருமானத்தில் மாத்திரம், மக்களுக்குச் சேவையாற்ற முடியாது என்று குறிப்பிட்ட அவர், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் அனுசரணையைப் பெற்றுக் கொள்வதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.


’தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குக’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.