மூன்றம்சக் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வு

வட்டைமடு மேய்ச்சல் தரை காணி பாதுகாப்பு, நுரைச்சோலை வீட்டுத்திட்ட விகிதாசார பங்கீடு, தொல்பொருள் பிரதேச ஆக்கிரமிப்பு தடுப்பு போன்ற மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு, அம்பாறை தீகவாபி ரஜமகா விகாரையில் அண்மையில் நடைபெற்றது.

வெப்ப வலய வனப்பாதுகாப்பு சங்கம், அம்பாரை ஊடக ஒன்றியம், ஆலையடிவேம்பு கால்நடை பால் உற்பத்தியாளர், விவசாய கூட்டுறவு சங்கம், வட - கிழக்கு சிங்கள அமைப்பு ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பௌத்த மகாநாயக்க தேரர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, சில தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

விசேடமாக  குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதுடன், அவரை நேரில் சந்திப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அத்தோடு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மரபுரிமைகளைப் பாதுகாப்பதும்  கடந்த 30 வருட யுத்த காலத்தில் அழிக்கப்படாத மரபுரிமை பிரதேசம் தற்போது அழிக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளல்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளைப் பராமரிக்கும் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒரேயொரு வட்டைமடு மேய்ச்சல் தரையை குறித்தொதுக்குவதுடன், விவசாய நடவடிக்கைக்கு அனுமதி வழங்காமல் தடுத்து, கால்நடை உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தல்,

அடையாளம் காணப்பட்ட சிதைவடைந்து செல்லும் தொல்பொருள் பிரதேசங்களைப் பாதுகாத்தல்,

வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதுடன், வனவிலங்கு ஜீவராசிகளின் வாழ்விடத்தை மக்கள் அழிக்காமல் தடைபோடுதல்,

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இனவிகிதாசார அடிப்படையில் பங்கிடலை உறுதிப்படுத்தல்,

குறித்த விடயங்களை ஊடகங்களின் வாயிலாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்று உடன் நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள்  தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டன.

நிறைவில், குறித்த விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்றில் அனைவரும் கையொப்பமிட்டு, கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு கையளிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.


மூன்றம்சக் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.