2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

செலவீனங்களை நிறுத்துவதற்கு பிரேஸில் செனட் அனுமதியளித்தது

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 14 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க செலவீனங்களை 20 ஆண்டுகளுக்கு நிறுத்துவதற்கு பிரேஸிலின் செனட், நேற்று  (13) வாக்களித்துள்ளது. சிக்கலான நிலையில் இருக்கும் பிரேஸிலின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான சிக்கன சீர்திருத்தங்களின் பிரதான நடவடிக்கையாகவே, மேற்படி செலவீன நிறுத்தம் காணப்படுகிறது. மேற்சபையான செனட்டில், செலவீன நிறுத்தத்துக்கு ஆதரவாக 53 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் கிடைத்தன.

பிரேஸிலின் நிதியியலை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கடுமையான நடவடிக்கைகள் தேவையென, மத்திய வலதுசாரி கொள்கைகளையுடைய ஜனாதிபதி மைக்கல் தெமர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தெமரின் சிக்கனக் கொள்கைகளால் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததுடன், ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஒருவராலும் “வரலாற்றுத் தவறு ஒன்று” என கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மேற்சபையில் மேற்படி வாக்கெடுப்பு நிகழும்போது பிரேஸில் தலைநகரான பிரேஸிலியாவிலுள்ள அரசாங்கக் கட்டடங்களை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பொலிஸார் பிரசன்னமாகியிருந்தனர். எனினும், வாக்கெடுப்பானது எதிர்பாராதவிதமாக மிக விரைவாக முடிவடைந்திருந்தது.

இந்நிலையில், தாங்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள முதலே வாக்களிப்பு நிறைவடைந்ததாகத் தெரிவித்த, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள வந்த தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான லூயிஸ் ஜோர்ஜ், அது தங்களை கோபமாக்கியதாகத் தெரிவித்தார். எவ்வாறெனினும், நேற்று பிற்பகல் வேளையில், நூற்றுக்கணக்கனோர் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் தங்களது முகங்களை மூடியிருந்தனர். கூட்டத்தினை கலைக்கும் முயற்சியாக, கண்ணீர்ப்புகை பிரயோகத்தை பாதுகாப்புப் படைகள் மேற்கொண்டிருந்தன.

2,000 பேர் வரையிலிருந்த ஆர்ப்பாட்டமொன்றில் பஸ் ஒன்று எரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரேஸிலியாவில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் 100 கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேஸிலில் வேலையில்லா சதவீதம், ஏறத்தாழ 12ஆக காணப்படுவதுடன், பணவீக்கமும் உறுதியாக அதிகரித்து வருகையில், கடுமையான சிக்கன நடவடிக்கைகளால் அங்குள்ளவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பொன்றில், அரசாங்க செலவீனம் நிறுத்தப்படுவதற்கு 60 சதவீதமானோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பொல்ஹா என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 24 சதவீதமானோரே ஆதரவு தெரிவித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--