2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மக்ரோனின் கட்சி அதிரடி

Editorial   / 2017 ஜூன் 12 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான, நேற்று  (11) இடம்பெற்ற முதலாவது சுற்று வாக்களிப்பைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி, நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெறும் வகையில் இருக்கின்றது.   

இடதுசாரிக் கொள்கைகளுக்கும் வலதுசாரிக் கொள்கைகளுக்கும் இடையேயான கொள்கைகளைக் கொண்ட ஜனாதிபதி மக்ரோனின்,  நகர்வில் குடியரசுக் கட்சியும் அதன் நட்புறவுக் கட்சியான ஜனநாயக இயக்கக் கட்சியும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெறவுள்ள இரண்டாவது சுற்று நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு முடிவில், 577 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 400 தொடக்கம் 445 வரையான ஆசனங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஆசனங்கள் கிடைக்கும் பட்சத்தில், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத நாடாளுமன்றப் பெரும்பான்மை, ஜனாதிபதி மக்ரோனுக்கு கிடைக்கும்.   

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் பலத்த பின்னடைவைச் சந்தித்த வலதுசாரிக் கொள்கைகளையுடைய குடியரசுக் கட்சியினர், ஜனாதிபதித் தேர்தலில் சந்தித்த அடியிலிருந்து மீள எதிர்பார்த்துள்ள நிலையில், 70 தொடக்கம் 130 ஆசனங்களைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதேவேளை, தீவிர வலதுசாரிக் கொள்கைகளையுடைய மரின் லு பென்னின் தேசிய முன்னணிக் கட்சி, ஒன்று தொடக்கம் 10 வரையான ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மக்ரோனிடம், லு பென் தோல்வியடைந்த பின்னர், மீள் எழுச்சி பெற, தேசிய முன்னணிக் கட்சி தவறிவிட்டது என்பதை,  எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது.   

இந்நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தலில், மக்ரோனுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த பொஸ்வா ஒலாந்தேயின் சோஷலிசக் கட்சியும், அதன் நட்புறவுக் கட்சிகளுமே பலத்த இழப்பைச் சந்திக்கவுள்ளன. இக்கட்சிகள், 200 ஆசனங்களை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோஷலிசக் கட்சியின் முதற் செயலாளர் ஜோன் கிறிஸ்டோப் கம்படிடிஸ், ஜனாதிபதி வேட்பாளர் பெனோய்ட் ஹமன் ஆகியோர், தமது ஆசனங்களை இழந்துள்ளனர்.   

எவ்வாறெனினும், நேற்று முன்தினம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் முதலாவது சுற்று வாக்கெடுப்பில், சாதனை ரீதியான குறைவாக, 49 சதவீதமானோரே வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

முதலாவது சுற்று வாக்கெடுப்பின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று (12) காலை வெளியிடப்பட்ட நிலையில், ஜனாதிபதி மக்ரோனின் நகர்வில் குடியரசுக் கட்சியும் அதன் நட்புறவுக் கட்சியான ஜனநாயக இயக்க கட்சியும், 32.32 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளதோடு, குடியரசுக் கட்சி, 21.56 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய முன்னணிக் கட்சி, 13.20 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. சோஷலிசக் கட்சியும் அதன் நட்புறவுக் கட்சிகளும் 9.51 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளதோடு, தீவிர இடதுசாரிக் கொள்கைகளையுடைய கட்சியும் கம்யூனிஸ்ட்களும், 13.74 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளன.   

முதலாவது சுற்று வாக்கெடுப்பிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரே தெரிவாகியிருந்தனர்.   

முதலாவது சுற்று வாக்கெடுப்பில், எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாத பட்சத்தில், முதலிரண்டு இடங்களைப் பெறும் வேட்பாளர்கள், குறித்த மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில், 12.5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்களுடன், இரண்டாவது சுற்றில் போட்டியிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X