2021 மே 06, வியாழக்கிழமை

ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி ரப்பானி படுகொலை

Super User   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியும் அந்நாட்டின் உயர் சமாதான பேரவையின் தலைவருமான புர்ஹானுதீன் ரப்பானி நேற்று செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ராஜதந்திரிகள் வசிக்கும்  அதிக பாதுகாப்பு மிக்க பகுதியொன்றிலுள்ள அவரின் வீட்டில் வைத்து, ரப்பானி படுகொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

தலிபான் அங்கத்தவர்கள் என சந்தேகிக்கப்படுவோரின் தற்கொலை தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

71 வயதான புர்ஹானுதீன் ரப்பானி, 1980களில் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்தபோது சக்திவாய்ந்த முஜாஹிதீன் கட்சியின் தலைவராக விளங்கியவர். சோவியத் யூனியன் வெளியேறியபின் 1992 முதல் 1996 வரை அவர் ஆப்கான் ஜனாதிபதியாக பதவி வகித்தார். பின்னர் அவரிடமிருந்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

தலிபான்களின் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் 13.11.2001 முதல் 23.12.2001 வரை இவர் மீண்டும் ஆப்கான் ஜனாதிபதியாக கடமையாற்றினார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயினால் அவர் உயர் சமாதானப் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆப்கான் பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்ப்பதில் நாட்டம் கொண்டிருந்த ரப்பானி, தலிபான்  அங்கத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல் தலிபான் தலைவர்களுக்கு வெளிநாட்டில் தஞ்சமளித்தல் போன்ற திட்டங்களையும் முன்வைத்திருந்தார்.

எனினும் ரப்பானியின் வீட்டிற்குச் சென்ற தலிபான் அங்கத்தவர்கள்  எனக் கூறப்படும் இருவர், அவருடன் கைகுலுக்கிவிட்டு வெடிகுண்டுகளை வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ரப்பானியின் மரணம் ஆப்கானிஸ்தான் சமாதான முயற்சிகளுக்கு பின்னடைவாகும் எனக் கருதப்படுகிறது.


  Comments - 0

  • sb Saturday, 01 October 2011 08:09 PM

    ஆப்கானிஸ்தான்ல யாரு செத்தாலும் காரணம் தலிபான்கள் தான், பாவம் நல்ல அமெரிக்கர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .