சிரியாவில் விமானத் தாக்குதல்களில் 29 பேர் கொல்லப்பட்டனர்

சிரியாவில், எதிரணிப் போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் பிரதான இடங்கள் இரண்டின் மீது, போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில், குறைந்தது 29 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என, அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. தலைநகர் டமாஸ்கஸ்ஸுக்கு அருகிலும், இட்லிப் மாகாணத்திலும், இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், தலைநகர் டமாஸ்கஸ்ஸுக்கு அருகிலுள்ள புறநகர்ப் பகுதியான கிழக்கு கௌட்டா மீதான தாக்குதல்கள், அண்மைக்காலத்தில் அதிகரித்திருந்தன.

இந்நிலையில், கிழக்கு கௌட்டாவின் ஸமல்கா, ஆர்பேயின், ஹஸ்ஸா, பெய்ட்டு சௌவா நகரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், குறைந்தது 29 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்தது.

கிழக்கு கௌட்டா பகுதியை, இராணுவத்தினர் ஏற்கெனவே சுற்றிவளைத்துள்ள நிலையில், உணவுக்கும் மருந்துக்குள் அங்கு ஏற்கெனவே தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன என, சர்வதேச ரீதியான விமர்சனங்கள் அதிகரித்திருந்தன. இந்நிலையில், தற்போது பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல், அரசாங்கம் மீதான எதிர்ப்பை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில், விமானங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட குளோரின் ததாக்குதல்களில், குறைந்தது 11 பேர், சுவாசப் பிரச்சினைகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர் என, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹெலிகொப்டர்களிலிருந்து, இரண்டு பரல்களில் குளோரின் வாயு கீழே வீழ்த்தப்பட்டது என, மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் வெள்ளைத் தலைகவசங்கள் அணி தெரிவித்தது. இத்தாக்குதல், ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது.

இரசாயன ஆயுதங்களைக் கைவிடுவதற்கு, 2013ஆம் ஆண்டில் சிரிய அரசாங்கம் உறுதி வழங்கிய போதிலும், அதன் பின்னரும் இரசாயனத் தாக்குதல்களை அந்நாடு மேற்கொண்டு வருகிறது என்பது, தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.


சிரியாவில் விமானத் தாக்குதல்களில் 29 பேர் கொல்லப்பட்டனர்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.