ஹொடெய்டா மீதான தாக்குதல் ஆரம்பித்தது

யேமன் போரின் மிகப்பெரிய தாக்குதலை, யேமனின் பிரதான துறைமுக நகரமான ஹொடெய்டாவை தாக்கியதன் மூலம் சவூதி தலைமையிலான அரேபிய நாடுகளின் கூட்டணி இன்று ஆரம்பித்துள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக, உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியாக விளங்கும் யேமன் மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகையில், ஹூதிகளை முழந்தாளிடச் செய்வதற்காக சவூதி தலைமையிலான அரேபிய நாடுகள் கூட்டணி இத்தாகுதலை ஆரம்பித்துள்ளது.

“தங்க வெற்றி” நடவடிக்கையில், ஹொடெய்டா துறைமுகத்துக்கு தெற்காக குவிந்துள்ள வெளிநாட்டு, யேமனியப் படைகளுக்கு உதவும் முகமாக, ஹூதிகளின் நிலைகள் மீது அரேபிய போர் விமானங்களும் போர்க் கப்பல்களும் தாக்குதல் நடத்தியுள்ளன.

யேமனின் தலைநகர் சனாவையும் அதிகம் சனநெருக்கடியான இடங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரானால் ஆதரவளிக்கப்படும் ஹூதிகளுக்கெதிராக யேமனிய போரில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் இணைந்த பின்னர், கடுமையாகப் பாதுகாக்கப்படும் ஹொடெய்டாவை அரேபிய நாடுகள் கைப்பற்ற முயலுவது இதுவே முதற்தடவையாகும்.

அந்தவகையில், ஹொடெய்டாவின் தென் கரையோரத்தை கூட்டணியின் போர் விமானங்கள் தாக்குகையில், ஹொடெய்டா நகர மத்திக்கும் துறைமுகத்துக்கு அருகிலும் இராணுவ வாகனங்களையும் படைகளையும் ஹூதிகள் நகர்த்தியுள்ளதாக, தன்னை அடையாளங்காட்ட விரும்பாத அங்குள்ள ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மக்கள், வடக்கு, மேற்கு பாதைகளால் வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஹொடெய்டாவில் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில தொண்டு நிறுவனங்களில் ஒன்றான கெயார் இன்டர்நஷனல், இன்று காலையில் அரை மணித்தியாலத்துக்குள் 30 விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றதாகக் கூறியுள்ளது.

ஹொடெய்டாவிலும் ஹொடெய்டாவைச் சுற்றியும் 600,000 பேர் காணப்படுவதோடு, பெரும்பாலான யேமனியர்களுக்கான உதவி, உணவு ஹொடெய்டாவின் மூலமே செல்கின்றது.


ஹொடெய்டா மீதான தாக்குதல் ஆரம்பித்தது

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.