‘வீரர்களின் திறமையில் விளையாடக்கூடாது’

மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் கீழ் பதிவு செய்யப்பட்ட 19 வீரர்கள் கடந்த வாரம் ஆரம்பமாகி இடம் பெற்றுவரும் வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் கலந்துகொண்ட காரணத்தால் மன்னார் கால்பந்தாட்ட லீக்கால் ஓராண்டுத் தடை மற்றும் 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக பாதிக்கப்பட்ட வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் ஊடக சந்திப்பொன்றை இன்று (12) ஏற்பாடு செய்து அதிலேயே மேற்படி கருத்தை வெளிப்படுத்திய குறிப்பிட்ட வீரர்கள் மேலும் தெரிவித்ததாவது,

“நேற்று (11) முதல் குறித்த தடையானது செல்லுபடியற்றது எனவும் எந்த வீரர்களும் குறித்த தொடரில் கலந்து கொள்ள முடியும் எனவும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (12) இடம் பெறவிருக்கின்ற உள்ளூர்ப் போட்டிகளில் குறித்த 19 வீரர்களும் விளையாடுவதற்கு மன்னார் லீக்கால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இடம்பெற்ற வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் தொடரில் மன்னார் மாவட்ட வீரர்கள் நல்ல விலைக்கு ஏலமெடுக்கப்பட்ட போதும் மன்னார் கால்பந்தாட்ட லீக்கால் மன்னார் வீரர்கள் மன்னார் கால்பந்தாட்டக் கழகத்துக்கு மத்திரமே விளையாட வேண்டும் எனவும் வேறு அணிகளுக்கு விளையாடினால் தடை விதிக்கப்படும் என பணிக்கப்பட்டதால் அனைத்து மன்னார் வீரர்களும் எந்த ஒரு எதிர்பார்ப்புக்கள் மற்றும் சலுகை இல்லாமல் மன்னார் கால்பந்தாட்டக் கழகத்துக்காக விளையாடினோம். 

கடந்தாண்டு தொடரில் அரையிறுதிப் போட்டி வரை நுழைந்த போதும் எங்களை ஒழுங்கான விதத்தில் தயார்படுத்தவோ பாராட்டவோ இல்லை. எங்களுக்கு என ஒரு மருத்துவ கொடுப்பனவோ ஏன் அரையிறுதி போட்டியில் தோற்ற சமையத்தில் இரவு உணவு கூட வாங்கித்தராமல் மன்னார் கால்பந்தாட்டக் கழக நிர்வாகத்தினர் 5,000 ரூபாய் பணம் மாத்திரம் தந்தார்கள்.

 ஆனால் அது ஒரு பெரிய விடயமாக எங்களுக்கு தெரியவில்லை. மன்னார் மாவட்ட அணி என்பதற்காகவும் எமது திறமைகளை வளர்ப்பதற்காகவுமே விளையாடினோம்.

அதேபோன்று இவ்வாண்டும் மன்னார் வீரர்கள் அதிகளவான விலைக்கு ஏலம் கேட்கப்பட்ட போதும் அதிகளவான வீரர்கள் மன்னார் அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காக ஊக்கம் எடுத்து செயற்பட்டதால் மன்னார் கால்பந்தாட்டக் கழகத்துக்காக பதிவுசெய்தோம்.

ஆனாலும் இவ்வாண்டு வடக்கு கிழக்கு விளையாடினால் ஓராண்டுத் தடையும் 20,000 ரூபாய் தண்டமும் விதிக்கப்படும் என மன்னார் கால்பந்தாட்ட லீக்கினர் தெரிவித்தனர். இதன் காரணமாக அச்சத்தால் பல வீரர்கள் தங்கள் திறமைகளை மறைத்து போட்டியில் பங்குபெறவில்லை. 

இலங்கை கால்பந்தாட சம்மேளனத்தால் இத்தொடரில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த எல்லா வீரர்களும் பங்குபற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டபோதும் வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த ஏனைய மாவட்டங்களை சேர்ந்த அனைத்து லீக்குகளும் அவர்கள் கழகங்களைச் சேர்ந்த வீரர்களை குறித்த தொடரில் விளையாட அனுமதித்த போதும், மன்னார் கால்பந்தாட்ட லீக் மாத்திரம் தனிப்பட்ட காரணங்களுக்காக மன்னார் வீரர்கள் மீது தடை விதித்தது.

ஆனாலும் நாங்கள் ஒரு சில வீரர்கள் உரையாடி மன்னார் மாவட்டத்துக்காகவும் எமது திறமைகளை வளர்ப்பதற்காகவும் இவர்களின் தடையையும் மீறி விளையாடினோம். இப்போது 19 வீரர்களுக்குத் தடை விதித்திருக்கின்றார்கள். மன்னார் அணிக்காக விளையாடியதற்காக தடை விதித்திருக்கின்றார்கள். 

லீக் ஒழுங்காக செயற்பட்டிருந்தால் மன்னாரில் உள்ள அனைத்து நல்ல வீரர்களையும் ஒன்று சேர்த்து இத்தொடரை சிறந்த முறையில் கொண்டு செல்ல முடிந்திருக்கும்.

மன்னார் லீக்குக்கு பணத்தை திருப்பி பெற்றுகொள்வதே நோக்கமாக இருக்கின்றதே தவிர மன்னார் வீரர்களை முன்னேற்றுவிப்பதோ அவர்களை விளையாட்டில் வளர்ப்பதோ நோக்கம் இல்லை.

அதேநேரத்தில் தேசிய அணியில் இடம பிடித்த ஒரு வீரருக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டிகளில் மாத்திரம் விளையாடுவதன் மூலம் எமது திறமை வளரப் போவதில்லை. இவ்வாறான மாகாண, தேசிய தொடர்களில் கலந்து கொள்வதன் மூலமே எங்களால் திறமைகளை வளர்துக்கொள்ள முடியும்.

எனவே மன்னார் லீக் தனிப்பட்ட காரணங்களுக்காக வீரர்களின் திறமையில் விளையாடாமல் குறித்த தடையை நீக்கி மன்னார் கால்பந்தாட்ட வீரர்களின் வளர்சையில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.  


‘வீரர்களின் திறமையில் விளையாடக்கூடாது’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.