(றிப்தி அலி)
முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கும் பட்சத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என குடும்ப சுகாதார பேரவையின் ஆலோசகரான வைத்திய கலாநிதி லோஷன் முனசிங்க இன்று தெரிவித்தார்.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படுவதுடன் குறித்த பெண்களும் பிரசவத்தின் போது சிரமங்களை எதிர்நோக்க நோக்குவார்கள் என அவர் கூறினார்.
குடும்ப கட்டுப்பாட்டு சங்கத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
"இவ்வாறான 35 வயதுக்கு பின்னர் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறை வளர்ச்சியுடன் பிறப்பதுடன் பல குறைபாட்டு நோய்களுக்கும் உள்ளாவர். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது" என வைத்திய கலாநிதி லோஷன் முனசிங்க தெரிவித்தார்.
.
இதேவேளை, 18 வயதிற்கு குறைவான பெண்கள் கர்ப்பம் தரிக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் மேற்படி ஆபத்துக்களுக்கு முகங்கொடுக்ககூடிய வாய்ப்புக்கள் அதிகம் எனவும் அவர் கூறினார்.
பதினெட்டு வயதிலும் குறைந்த கர்ப்பம் தரித்த பெண், 20 – 25 வயதில் கர்ப்பம் தரிக்கும் பெண்ணை விட பிரசவத்தின் போது மரணிக்கும் வாய்ப்பு 2 – 5 மடங்கு அதிகம் என அவர் குறிப்பிட்டார்.
"ஒரு பிள்ளை கிடைத்து மூன்று தொடக்கம் ஐந்து வருடங்களுக்குள்ளேயே அடுத்த பிள்ளைக்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே தவிர, மூன்று வருடங்களுக்குள் முயற்சிக்க வேண்டாம். இதனூடாக பெற்றோர்கள் பிள்ளையுடன் அதிக நேரத்தை செலவிட்டு அன்பு காட்ட முடியும்" என வைத்திய கலாநிதி லோஷன் முனசிங்க மேலும் தெரிவித்தார்.


Comments
இருக்கலாம்.
RSS feed for comments to this post