.
புதன்கிழமை, 26 நவம்பர் 2014

படிப்பென்ற படிப்பினை...

(க.ரோகிணி)

'திங்கக்கிழமை ஏ.எல். ரிசல்ட்ஸ் அவுட்டாகுதாம். ஐயோ... என்ன ரிசல்ட்ஸ் வரபோகுதோ தெரியல..? யாரும் எனக்கு போன் எடுக்காதீங்க. ரிசல்ட்ஸ் கேட்காதீங்க. அடுத்த முறை ட்ரை பண்ண வேண்டிவரும்...'' 

இந்த கூற்றை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் கேட்கமுடிந்தது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகப்போவது குறித்து பல தடவைகள் செய்திகள் வெளியாகிவிட்டன. இவற்றினை கேட்கும் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தமது விடுமுறையைக் கூட நிம்மதியாக கழிக்காமல் மன உழைச்சல்களுடன் தமது பொழுதுகளை கழித்தவண்ணம் உள்ளனர்.

பொதுவாக க.பொ.த. சாதாரண தர, உயர்தர பரீட்சைகளில் தோற்றும் மாணவர்கள் இந்த நிலையை எதிர்கொள்கின்றனர். இலங்கையின் கல்வி நிலைப்படி க.பொ.த. சாதாதரண தர, உயர்தரம் என்பது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒன்றாக உள்ளது.

இந்த இரு நிலைகளுமே ஓர் ஏணியைப் போன்றது. க.பொ.த. சாதாரண தரம் என்பது ஏணியின் முதல் படி. முதல் படி சறுக்கினால் சறுக்கினதுதான். மீண்டும் முயற்சிசெய்தால் மட்டுமே ஏணியின் எல்லையை அடையமுடியும். க.பொ.த. உயர் தரம் என்பது இரண்டாம் படி. மாணவர்கள் சமூகத்தை எதிர்கொள்ளவதற்கு தயாராகும் நிலை. இரண்டாம் படி சறுக்கினால் மீண்டும் முதல் படியிலிருந்து ஏறவேண்டிய நிலைவரும். எனவே இலங்கையில் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் இவை இரண்டுமே பிரதான பங்குதாரர்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்குகள் இருக்கின்றன. அந்த இலக்கு எது என்பதை தீர்மானிப்பதே கல்விதான்.
மாணவர்கள் தரம் 11ஐ அடையும்வரை செய்த பிழைகளை, விளையாட்டுத்தனங்களை 11ஆம் நிலையை அடைந்த பின்னும் செய்வார்களேயானால்; அவர்கள் தமது வாழ்க்கையை கேள்விக்குறியாக்க தயாராகின்றார்கள் என்பதே உண்மை. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் கல்வியின்றி ஒருமனிதனால் நிச்சயமாக சமூகத்தை எதிர்கொள்ள முடியாது. அதனை மாணவர்கள் முதலில் உணர்ந்தேயாக வேண்டும்.

அதேபோன்று க.பொ.த. உயர்தரம் என்பது போட்டிப் பரீட்சை. நீதிபதிகள், சட்டத்தரணிகள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள் உருவாகப்போவது இங்கேயே தீர்மானிக்கப்படுகின்றது. இந்தப் போட்டி பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை பல இலட்சம் என்பதையும் அதில் நாம் கட்டாயமாக தெரிவாக வேண்டும் என்பதையும் ஒவ்வொரு மாணவரும் உணர்ந்து படித்தால் நிச்சயம் வெற்றிதான்.

ஆனால், மாணவர்கள் பரீட்சை நெருங்கும்போது கற்றால்தான் மனதில் நிற்கும் அல்லது பரீட்சைக்கு முதல்நாள் படித்தால்தான் பரீட்சையை சிறப்பாக தோற்றலாம்;, காலம் இருக்கின்றதுதானே இப்போது என்ன அவசரம், நாளை படிக்கலாம், விடியற் காலை எழுந்து படித்தால்தான் மனதில் பதியும், தொலைகாட்சி – வானொலி சத்தத்தில் படிப்பதற்கு முடியாது என தமக்குதாமே நியாயம் சொல்லிக்கொண்டு காலம் தாழ்த்துதல்கள் தொடர்ந்து கொண்டு தம்மைதாமே அழித்துக்கொண்டு இருக்கின்றனர்.

எதையும் முடியாது என்று நினைத்தால் அங்கு நாம் நம்மை முட்டால்களாக்கிக்கொள்ள முயல்கின்றோம் என்பதை நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். இந்த எண்ணங்கள் அனைத்துமே எமது சோம்பல் தனத்தை மட்டுமே வெளிப்படுத்துகின்றது. இந்த எண்ணங்களால் நாம் எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. மாறாக பல விடயங்களை இழக்கின்றோம்.

அதில் பிரதானமானது காலம். ஒருநாள் முடியும் போது அந்தநாள் மீண்டும் வராது என்பதை யாரும் உணர்ந்துகொள்வதில்லை. அடுத்தநாள் இருக்கின்றது என்று நினைப்பார்கள். ஆனால் அந்தநாள் புதியதொரு நாள், நேற்றைய நாள் முடிந்தது - வருடத்தில் ஒருநாளை தொலைத்துவிட்டோம் என்ற உண்மையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவருவதற்கு முன் நாம் துடிக்கும் துடிப்பை - படிக்கும் காலங்களில் முறையாக காட்டியிருப்போமானால் வரப்போகும் பெறுபேறுகளை மகிழ்சியுடன் வரவேற்கலாம். அப்படியே எதிர்பார்த்த பெறுபேறுகள் வரவில்லையென்றாலும்கூட நாம் மிகவும் கடினப்பட்டு படித்தோம் என்ற திருப்தியேனும் இருக்கும். ஆனால் இந்த திருப்தி அநேகமான மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. ஏனெனில் இவர்கள் அனைவரும் பரீட்சைக்கு முந்திய நாட்களில் படித்தவர்களாக இருப்பர்.

எனவே கல்வியில் கரிசனை காட்டினால் வாழ்வில் வெற்றிபெற முடியும். எதிர்கால வாழ்க்கையை சுபீட்சமாக்குவது எமது கைகளிலே உள்ளது.

அதேபோல் நான் எனது இலக்கை அடைந்தே தீருவேன் என்று அயராது உழைக்கும் மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக பரீட்சையில் எதிர்பார்த்த சித்தியை அடையவில்லையென்றால் மனமுடைந்துபோய்விடுவர். இதன்போது அதிகமான மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கவும் செய்கின்றனர். இவ்வறான செயற்பாடுகள் அம்மாணவர்களின் பலவீனத்தை மட்டுமே காட்டுகின்றது. இவர்கள் நிச்சயமாக சமூகத்தை எதிர்கொள்ளமுடியாத கோளைகள். ஒரு படி சறுக்கினால் மறுபடியும் முயன்று அடுத்த படியை அடைய சபதம் கொள்ளவேண்டும். அப்போதே வாழ்வில் வெற்றிபெறமுடியும்.
பாடசாலை வாழ்வை முடித்துக்கொண்டு சமூகத்தில் கால் பதிக்கும் தருணத்தில் பரீட்சை பெறுபேறுகளை நினைத்து வருந்துவதால் மனஉழைச்சல் மட்டுமே மிஞ்சுகிறது. அதனால் நாம் சமூகத்தை எதிர்கொள்வதற்கு முன்னமே நோயாளர்களாக மாறிவிடுகின்றோம்.

எனவே எந்த சவால்களையும் எதிர்கொள்வதற்கு மாணவர்கள் தயாராகவேண்டும். நாட்டில் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது மாணவ சமூகம் என்பதால் சாவால்களை தாண்டக் கூடிய பலமிக்கவர்களாக மாணவர்கள் உருவாகவேண்டும்.

Views: 10038

Comments   

 
-0+0#Mr Hilmy2012-01-03 12:45
இது உண்மையிலே நல்லதொரு கருத்தாகும். எல்லா மாணவர்களும் பெற்றோர்களும் இதை உணர்த்து செயற்படுவோமேயானால் நாட்டுக்கும் நல்லது. நமக்கும் நல்லது. இந்த கருத்தை பகிர்ந்தளித்த தமிழ் மிரர் பதிரிகையார்களுக்கு எனது நன்றிகள்.
Reply
 
 
-0+0#A M Aswer2012-01-27 20:02
கவலே தராதீங்கப்பா...........
Reply
 

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.