ட்ராவிட்டின் பாராட்டு விழாவைத் தவறவிட்டமை குறித்து வருத்தம்: சச்சின்
30-03-2012 11:35 AM
Comments - 0       Views - 587
ராகுல் ட்ராவிட்டின் ஓய்வினை அடுத்து இந்தியக் கிரிக்கெட் சபை நடத்திய ராகுல் ட்ராவிட்டிற்கான பாராட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாது போனமை குறித்து வருத்தமடைவதாக இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ராகுல் ட்ராவிட்டிற்காக இந்தியக் கிரிக்கெட் சபை நடத்திய பாராட்டு விழாவில் கலந்துகொள்ளாதவர்களில் சச்சின் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த சச்சின், பாராட்டு விழா இடம்பெற்ற செவ்வாய்க்கிழமை காலையில் ராகுல் ட்ராவிட்டோடு தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும், தவிர்க்க முடியாத நிலையில் அப்பாராட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாமை குறித்து அவருக்குத் தெரிவித்ததாகவும் சச்சின் தெரிவித்தார்.

லண்டனுக்கான மருத்துவப் பயணம் நிறையக்காலங்களுக்கு முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், வைத்தியரை அவசரமாகச் சந்திக்க வேண்டியிருந்ததாகத் தெரிவித்தார்.

ராகுல் ட்ராவிட்டிற்கான பாராட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொள்ளாமை குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் லண்டனுக்குப் பயணமான தகவல் வெளியாகியிருக்காத நிலையில் அவரது இல்லத்துக்கு அருகில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் அவர் ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது.

எனினும், ராகுல் ட்ராவிட்டிற்கான பாராட்டு விழா குறித்து கடந்த வார இறுதியிலேயே அறிந்து கொண்டதாகத் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், அதன் பின்னர் திடீரென தனது பயணத்தை மாற்றிக் கொள்ளமுடியாது போனதாகத் தெரிவித்தார்.

அத்தோடு அந்தப் பாராட்டு விழாவில் கலந்துகொண்டிருந்தால் ராகுல் ட்ராவிட்டின் புகழைப் பாடிக் கொண்டிருப்பேன் என சச்சின் தெரிவித்தார். ராகுல் ட்ராவிட்டின் அர்ப்பணிப்பும், ஒழுக்கமும், இந்திய அணிக்கு அவர் வழங்கிய முக்கியத்துவமும் போற்றத்தக்கன என அவர் தெரிவித்தார். (க்ரிஷ்)
"ட்ராவிட்டின் பாராட்டு விழாவைத் தவறவிட்டமை குறித்து வருத்தம்: சச்சின்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty