2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

அனர்த்த பாதிப்புகள்: வீதிகளை புனரமைக்க துரித நடவடிக்கை

Editorial   / 2017 மே 29 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வீதிகளைப் புனரமைக்கும் பணிகளை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.

விசேடமாக, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக வீதிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள், அந்தந்த பிரதேச மாகாண பணிப்பாளர்களின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு, போக்குவரத்துக்கு ஏற்றவகையில் வீதிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகள், துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பகுதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச அதிகாரிகளை இணைத்து, தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

உயர்க்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சரின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து செயற்படுவோர், தம்மிடமுள்ள இயந்திரங்களை, இந்த வீதிகளின் வழமையான போக்குவரத்து இடம்பெறுவதற்காக இலவசமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்பொழுது நிலவும் அனர்த்த நிலைமையின் காரணமாக, விரைவாக போக்குவரத்துக்காகத் திறக்கப்படவேண்டிய வீதிகள் அடையாளம் காணப்பட்டு, அந்த வீதிகளில் சரிந்து விழுந்துள்ள மண்மண்மேடுகளை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

முறையான மதிப்பீட்டினை அடுத்து, இந்த வீதிகளுக்குத் தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறு பாதிக்கப்பட்ட வீதிகள் குறித்த தகவல்கள் இருப்பின், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 1968 மற்றும் 1969 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு அறியத்தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .