2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இடம்பெயர் மக்களை 3 மாதங்களுக்குள் மீள்குடியேற்றுவதாக ஜனாதிபதி உறுதி

Super User   / 2010 ஜூன் 10 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மீள்குடியேற்றப்படுவர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ்நாட்டு எம்.பி.க்களிடம் உறுதியளித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற தேர்தல்கள் மற்றும் வடக்கில் விடுதலைப் புலிகளால் புதக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதினாலேயே குறித்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமாகின என்றும் ஜனாதிபதி அவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதியை தமிழ் நாட்டைச் சேர்ந்த தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு நேற்று மாலை புதுடில்லியில் சந்தித்தது.அகதி முகாம்களில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80ஆயிரம் தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கையினை விரைவாக முன்னெடுக்குமாறு இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் அதிகாரப் பகிர்வு, மறுசீரமைப்புக்கான உதவிகளை விரைவுப்படுத்தல் போன்ற வலியுறுத்தல்களும் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் டொடர்ந்தும் உரையாடுகையில், தற்போது இலங்கை முகாம்களில் 54ஆயிரம் தமிழர்கள் மட்டுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விரைவில் அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைப்போம் என்று கூறியுள்ளார்.

அத்துடன், அரசியல் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழ்நாட்டு எம்.பி.க்களிடம் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ஆவது அரசியலமைப்பினை அமுல்ப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் நேற்று காலை நடைப்பெற்ற சந்திப்பின்போது தமிழர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருத்திருக்கிறார்.

தேவைப்பட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரவும், இலங்கை தமிழர்களின் எதிர்கால வாழ்வுக்கு பல உதவிகளை செய்யவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர்    உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--